ஜவ்வாதுக்கும், சந்தனக்கும் புகழ்பெற்ற நகரம் திருப்பத்தூர் ஆகும். இதனால்தான் திருப்பத்தூரை சந்தன மாநகர் என்று அழைப்பது உண்டு. சந்தனத்தின் வாசனைக்கு ஏற்ப திருப்பத்தூர் பகுதியில் மிகவும் பிரபலமான தொழில் ஊதுபத்தி ஆகும். இங்கிருந்து இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகும் ஊதுபத்திகள் திருப்பத்தூரின் பெருமையை நிலைநாட்டி வருகிறது.
கோவில் பூஜைகள், திருமணம் உள்ளிட்ட அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் மிகவும் முக்கியமாக பயன்படுத்தும் பொருட்களில் ஊதுபத்தியும் ஒன்று ஆகும். இந்தியாவிலேயே தமிழகத்தில் திருப்பத்தூர் மாவட்டம் தான் ஊதுபத்தி தயாரிப்பில் முதலிடத்தில் உள்ளது. திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை, வெலக்கல்நத்தம், கந்திலி, வாணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஊதுபத்தி நிறுவனங்கள் மற்றும் குடிசை தொழிலாளாக சுமார் 100க்கும் மேற்பட்ட குறு ஊதுபத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியில் மட்டும் மாதத்திற்கு சுமார் 1500 முதல் 2000 டன் வரை ஊதுபத்திகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
குறுந்தொழில் மையம்:
இதன் மூலம் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் நேரடியாகவும், மறை முகமாகவும் வேலைவாய்ப்பினை பெற்று வருகின்றனர். குறிப்பாக கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிலாக இந்த ஊதுபத்தி தொழில் விளங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக ஊதுபத்தி தொழில் பெரும் சரிவை சந்தித்து வந்தது. இதனால் ஊதுபத்தி தொழிலை பாதுகாக்க ஊதுபத்தி குறுந்தொழில் மையம் அமைக்க வேண்டும் என திருப்பத்தூர் பகுதி மக்களும், ஊதுபத்தி தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில் கடந்த 2022ம் ஆண்டு தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் திருப்பத்தூர் பகுதியில் அகர்பத்தி குறுந்தொழில் மையம் அமைக்க அரசு உத்தரவிட்டது. இதன் மூலம், சுமார் ரூ.7 கோடி மதிப்பீட்டில் அதற்கான பணிகளை தொடங்க, அரசு 80 சதவீதம் மானியமும், மீதமுள்ள 20 சதவீதத்தை அகர்பத்தி குறுந்தொழில் மையத்தில் இடம்பெறுபவர்கள் கட்ட வேண்டும். ஆனால் இதில் பல்வேறு பிரச்சினைகளால் இதுவரை குறுந்தொழில் மையம் அமைக்க எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திட்டம் கைவிடப்பட்டது:
தமிழக அரசு அகர்பத்தி குறுந்தொழில் அமைக்க பணம் ஒதுக்கிவிட்டது. ஆனால் அரசு அறிவித்து 2 வருடங்கள் ஆகியும் இதுவரை அகர்பத்தி குறுந்தொழில் மையம் ஏற்படுத்தப்படவில்லை. இதனிடையே மாவட்ட தொழில் மையத்தில் ஆர்வம் இல்லாததாலும், அகர்பத்தி தயாரிப்பாளர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவும், அகர்பத்தி குறுந்தொழில் மையம் தற்போது கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது அகர்பத்தி தயாரிப்பாளர்களிடையே ஒற்றுமை இல்லாததால் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை என தெரிவித்தனர்.
இதுகுறித்து அகர்பத்தி தயாரிப்பாளர்கள் கூறியபோது, மாவட்ட தொழில்மைய அதிகாரிகளின் அலட்சியத்தின் காரணமாகத்தான் இத்திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. தற்போது இந்த திட்டம் என்ன ஆனது என்பது தெரியவில்லை. எப்படி இருந்தாலும் திருப்பத்தூரில் குறுந்தொழில் மையத்தை கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதியில் தோல் தொழில் சிறந்து விளங்கியது. தற்போது அந்த தொழிலும் நலிவடைந்து வருகிறது. திருப்பத்தூர் பகுதியில் எந்தவித தொழிலும் கிடையாது. இதனால் அகர்பத்தி குறுந்தொழில் மையம் அமைத்தால் வேலைவாய்ப்பு பெருகும் என எதிர்பார்த்து வந்த நிலையில் அரசே அறிவித்த குறுந்தொழில் மையம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டதாக தெரிகிறது. புதிய மாவட்டத்தை தொழில் துறையில் முன்னேற்றமடைய செய்ய அகர்பத்தி குறுந்தொழில் மையத்தை அமைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.