symptoms of pneumonia
symptoms of pneumonia

நுண்கிருமிகளால் ஏற்படும் நிமோனியா – உயிருக்கு ஆபத்தா?

சிறிய கிருமிகள் – பெரிய பாதிப்புகள் - மருத்துவ (மினி) தொடர் – பகுதி 2

தொற்று நோய்கள் தொடர்பாக பலரும் அறிந்திராத தகவல்கள் உண்டு. குறிப்பாக நிமோனியா குறித்த விழிப்புணர்வு நம் நாட்டில் ஓரளவுதான் இருக்கிறது. மேலும், தொற்று நோய்களுக்கான தடுப்பு மருந்துகள் பற்றி அறிந்துகொள்ளாதவர்கள் ஏராளம்.

சென்னையில் உள்ள கேப்ஸ்டோன் கிளினிக் நிறுவனராகவும்,  சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஆலோசகராகவும் விளங்கும் தொற்று நோய் நிபுணர் டாக்டர் வி. ராமசுப்ரமணியன், தொற்று நோய்கள் குறித்த - குறிப்பாக நிமோனியா குறித்த, அதற்கான தடுப்பு ஊசிகள் குறித்த -  நமது பல சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார் இப்பயனுள்ள பகுதியில்.

டாக்டர் வி. ராமசுப்ரமணியன்
டாக்டர் வி. ராமசுப்ரமணியன்
Q

நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் என்ன? இதற்கு உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொண்டாக வேண்டுமா?

A

ருமல், சளி, ஜுரம், மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை முக்கிய அறிகுறிகள்.  வெகுவேகமாக மூச்சு வாங்குவதும் ஒரு அறிகுறிதான்.

மிதமான அளவில்  நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அது தானாகவே கூட சில வாரங்களில் மறைந்து விடலாம்.  காரணம் நமது நோய் எதிர்ப்புசக்தி அதற்கு எதிராக போரிட்டு வெல்லும்.  ஆனால் பாதிப்பு அதிக அளவில் இருந்தால் உடனடி சிகிச்சை தேவைப்படும். பாதிப்பு மிதமான அளவில் இருக்கிறதா அதிக அளவில் இருக்கிறதா என்பதை உரிய சோதனைகளின் மூலம் மட்டுமே தெரிந்துகொள்ள முடியும்.  வைரஸ் கிருமிகளால் நிமோனியா ஏற்பட்டிருந்தால், பாக்டீரியாக் கிருமிகள் காரணமாக உண்டாகும் நிமோனியாவும் தொடர்ந்து வர வாய்ப்பு உண்டு.

symptoms of pneumonia
symptoms of pneumonia
Q

என்னவிதமான சோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்வீர்கள்?

A

முதலில் கிளினிகல் எக்ஸாமினேஷன். அதாவது ஸ்டெதெஸ்கோப்பை வைத்துப் பார்க்கும்போது உட்புறம் எழும் காற்றின் தாறுமாறான ஒலியும் வேகமும் நிமோனியாவை ஓரளவு காட்டிக் கொடுத்துவிடும்.  மேலும் உறுதி செய்துகொள்ள மார்பு எக்ஸ் ரே எடுக்கச் சொல்வோம்.  சில சமயம் மார்பு பகுதியை சி.டி.ஸ்கான் எடுக்க சொல்வோம்.  (சி.டி.ஸ்கான் ​மூலம் பாதிப்பை மேலும் துல்லியமாக அறிந்துகொள்ள முடியும்.  எக்ஸ்ரேவை கண்களால் பார்ப்பதோடு ஒப்பிட்டால் சி டி ஸ்கேனை பூதக்கண்ணாடி வைத்துக் கொண்டு பார்ப்பதோடு ஒப்பிட முடியும்).  எச்சில் சோதனை, பல்ஸ் ஆக்சிமெட்ரி சோதனை போன்றவையும் மேற்கொள்ள வேண்டும். சிகிச்சைக்கு பெரும்பாலும் ஆண்டிபயாடிக்குகள் உதவும்.  சாதாரண பாதிப்பு என்றால் ஒரு வாரத்தில் குணமாகிவிடும்.  காசநோய் என்றால் ஆறு மாதங்கள் தேவைப்படும்.  ஆக்சிஜன் அளவை இந்தக் காலகட்டத்தில் சரிப்படுத்தலாம் என்றாலும் வேறு பாதிப்புகள் நுரையீரலுக்கு ஏற்பட்டிருந்தால் சரியாக மேலும் காலம் பிடிக்கும்.

Q

டபுள் நிமோனியா என்பது என்ன?

A

ரண்டு நுரையீரல்களிலும் பாதிப்பு ஏற்பட்டால் அதை சிலர் டபுள் நிமோனியா என்கிறார்கள். ஆனால், இதைக் கொண்டு மட்டுமே அதிக ஆபத்து என்று கூறிவிட முடியாது.  சில சமயம் இரண்டு நுரையீரல்களிலும் மிதமான பாதிப்பு ஏற்படுவதை விட ஒரே ஒரு ஈரலில் மிக அதிக பாதிப்பு ஏற்படுவது மேலும் ஆபத்தானது.

 pneumonia....
pneumonia....
Q

நிமோனியா காரணமாக உயிரிழப்பு ஏற்படுமா?

A

ற்படலாம். முக்கியமாக சிறு குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு உடனடியாக உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றால் இப்படி நேரலாம். கடும் தொற்று காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களில் சிலர் அடுத்த ஒரு வருடத்தில்  இறப்பதையும் பார்க்கிறோம்.

எனக்கு தெரிந்த ஒரு  சீனியர் மருத்துவர்.  அவருக்கு இரண்டு பேரக்குழந்தைகள்.  அவர்கள் இரட்டையர்கள்.  அவர்களில் ஒருவன் தீவிர ஃப்ளூவால் பாதிக்கப்பட்டு உரிய காலத்தில் சிகிச்சை அளிக்கப்படாததால் இறந்துவிட்டான்.

இன்னொருவர் 55 வயதானவர்.  கடந்த 25 வருடங்களாக அதிக ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்.   திடீரென்று ஒரு நாள் காலை தொண்டைக் கரகரப்பு அதிகமாக இருக்கிறது என்று கூறிக்கொண்டு வந்தார். அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் கிருமிகள் அவரது நுரையீரலில் வேகமாகப் பரவிவிட்டதால் சிகிச்சைக்குப் பலனின்றி அவர் இறக்க நேர்ந்தது.  சில சமயம் நிமோனியா என்பது​மூளை ஜுரத்தில்கூட கொண்டுவிடலாம்

Q

தீவிர நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு நிமோனியா உட்பட பலவித நோய்கள் வர வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுவது எதனால்?

இதையும் படியுங்கள்:
ஆளை அசத்தும் அவரைக்காயின் ஆரோக்கியப் பலன்கள்!
symptoms of pneumonia
A

டலில் சர்க்கரை அளவு அதிகரித்தால் வெள்ளை ரத்த அணுக்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன.  இதன் காரணமாக நோய் எதிர்ப்புசக்தி குறைகிறது என்பதுதான் காரணம்.

Q

நிமோனியாவால் பாதிக்கப்பட்ட தாய் தன் கைக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா?

A

தாராளமாக. அவர் முகக்கவசம் அணிந்துகொண்டு பால் கொடுக்கலாம். தாய்ப்பால் மூலமாக நிமோனியா பரவிவிடாது.

நிமோனியா நம்மை பாதிக்காமல் தடுத்துக்கொள்வது நம் கையில் இருக்கிறதா?

இந்த கேள்விக்கும் இன்னும் சில கேள்விகளுக்கும் டாக்டரின் பதில்கள்...

பகுதி - 3ல் (28-01-2024) அன்று வெளியாகும்.

logo
Kalki Online
kalkionline.com