சக்கரமாய்ச் சுழலும் அரசியல் கட்சிகள்... புனித மண்ணில் புறப்படும் புதுமைகள்!

தேர்தல் அறிவிப்பை விரைவில் எதிர்பார்த்து அரசியல் கட்சிகள் சக்கரமாய்ச் சுழன்று பணியாற்றுகின்றன.
tamilnadu Election 2026
Election 2026
ரெ. ஆத்மநாதன்

எழுத்தாளர் ரெ.ஆத்மநாதன் பொருளாதாரத்திலும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். கதை, கவிதை, நாடகம் என்று முத்தமிழுக்கும் பணி செய்பவர். கதை, கவிதைகளை மாத,வார, ஆன்லைன் இதழ்களில் எழுதி வருபவர். இவரின் 4 நாடகங்கள் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களால் ஒலி பரப்பப் பட்டன. இளங்கலை முதலாண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் (1972-73) மாநில முதன்மை பெற்றவர்.பட்டி மன்றம், கவியரங்கம் ஆகியவற்றில் பங்கேற்பவர். அமெச்சூர் நாடகங்களில் நடித்தவர். தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி முன்னவராகச் சேர்ந்து, அத்துறையின் பொறுப்பு இயக்குனராக ஓய்வு பெற்றவர். “தொடர்கதைகளும் முற்றும்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

Updated on: 
Kalki Strip
Kalki Strip

தேர்தல் அறிவிப்பை விரைவில் எதிர்பார்த்து அரசியல் கட்சிகள் சக்கரமாய்ச் சுழன்று பணியாற்றுகின்றன. தேர்தலைச் சந்திக்கப்போகும் மாநிலங்களில் இப்பொழுதே அரசியல் சூடு, அனல் கக்கத் தொடங்கிவிட்டது. மக்களுக்குத் தனியாய்ப் பணி செய்வதைக் காட்டிலும் கூட்டாகச் சேர்ந்து நாட்டை உயர்த்தப் பாடுபடுவோம் என்ற குரலுடன், கூட்டணி சேரத் துடிக்கிறார்கள் நம் அரசியல்வாதிகள்!

ஒவ்வொருவரும் இரவுத் தூக்கத்தையும் தியாகம் செய்துவிட்டுத் தவியாய்த் தவிப்பதாய் செய்திகள் தெறிக்கின்றன. அரிஸ்டாட்டில் காலத்தில்கூட அரசியல்வாதிகள் மக்களுக்குத் தொண்டாற்ற இப்படிப் பறந்திருக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், கூட்டணிகள் உறுதி செய்யப்பட்டு, எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடங்கள் என்று பேசப்பட்டு, அந்தந்தத் தொகுதிகளுக்கு யார் யாருக்கு சீட் கொடுப்பது என்பது உறுதி செய்யப்படும். பலபேர் ஒரே தொகுதிக்குப் போட்டியிட சீட் கேட்பது இப்பொழுதெல்லாம் வாடிக்கையாகிவிட்டது. அதற்குப் பல காரணங்கள் உண்டு.

இப்பொழுதெல்லாம் விபரம் புரிந்த சிலர், சில தொகுதிகளை அவர்களாகவே தத்து எடுத்துக்கொண்டதைப்போல், தேர்தலுக்கு முன்பிருந்தே அங்குள்ள வாக்காளர்களைக் கவரும் விதமாகப் பலவற்றைச் செய்து, தொகுதிக்கு உரிமை கொண்டாடுவதும் வளர்ந்து வருகிறது. ‘துண்டு போட்டு இடம் பிடிப்பது என்பார்களே, அதைப்போல!’

இதையும் படியுங்கள்:
5 மாநில தேர்தல் களம்: மார்ச் முதல் வாரத்தில் தேதி அறிவிப்பு; ஏப்ரல் பாதியில் வாக்குப்பதிவு?
tamilnadu Election 2026

பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் வேட்பாளர் தேர்வு நடைபெறுகையில், மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட அனுமதி கிடைக்குமாம். அவர்களின் தகுதியைச் சரியாக அறிய மூன்று, நான்கு அளவு கோல்களை (Yardsticks) வைத்திருப்பாளர்களாம்.

- கட்சியில் எவ்வளவு காலமாக உள்ளார்?

- மக்களுக்கு என்னென்ன சேவைகள் செய்தார்?

- திட்டங்கள் வாயிலாகவும், தனியாகவும்!

- இவர் சேவை குறித்த மக்கள் கருத்து என்ன?

- கட்சியின் கொள்கைகளை வலியுறுத்தும் போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவரா?

- ஆம் எனில், சிறையில் எவ்வளவு காலம் கழித்தார்?

- அரசியலில் ஈடுபடக்கூடிய குடும்பச் சூழல் படைத்தவரா?

போன்ற பொது வாழ்க்கை தொடர்பான கேள்விகளை நேரடியாகக் கேட்பதோடு, அவர் பதிலில் உள்ள உண்மைகளை ஆராய்வார்களாம். அதன் பிறகே ஒரு முடிவுக்கு வருவார்களாம்.

அவர் காலத்திலும் தமிழ்நாட்டின் பரப்பளவு இதேதான்! ஜனத்தொகையும், மாவட்டங்களும் இன்றைக்குக் கூடி விட்டனவே தவிர, பரப்பளவில் மாற்றமில்லை! (1.30 லட்சம் ச.கி.மீ) பரப்பளவில், நாட்டின் பத்தாவது பெரிய மாநிலம் நம்முடையது.

அவர் காலத்தில் (1965) 13 மாவட்டங்கள்தான் இருந்தன. ஒன்பது அமைச்சர்களைக் கொண்டு ஒரு பொற்காலத்தைக் கட்டமைத்தார்! இன்றைக்கோ 38 மாவட்டங்கள்! அமைச்சர்களின் எண்ணிக்கையோ 35.

ஒரு நாட்டில் செய்தித் தொடர்பும், சாலை வசதிகளும் மேம்பாடு அடைகையில், மாவட்டங்கள் பிரிக்கப்பட வேண்டிய அவசியம் குறைந்து விடுவதாகவே புவியியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

மேற்கண்ட இரண்டும் நல்ல நிலையில் இருக்கும்போது, நிர்வாகத்தை எளிதில் நடத்தமுடியுமென்றும், அதிகாரிகள் பல இடங்களுக்கும் விரைந்து சென்று வர முடியென்றும் கூறுகிறார்கள். மாவட்டங்கள் பிரிக்கப்படுகையில், நிர்வாகச் செலவுகள் அதிகரிக்கின்றன. நம்மைப் போன்ற வளரும் நாடுகளில், மக்கள் நலத் திட்டங்களையே கடன் வாங்கி அரசுகள் நிறைவேற்றுகையில், நிர்வாகச் செலவைக் கட்டுக்குள் வைப்பதுதானே முறை? மாவட்டங்கள் பிரிக்கப்படுவதால் முன்னேற்றம் ஏற்படுகிறதா என்ற ஆய்வுகள் ஏதும் நடத்தப்படுவதாகத் தெரியவில்லை.

சரி! தேர்தலுக்கு வருவோம்! கடந்த தேர்தலின்போது வேட்பாளர் தேர்வின்போது மிகச் சில கேள்விகளே கேட்கப்பட்டனவாம்.

- கட்சிக்கு எவ்வளவு தருவீர்கள்?

- தேர்தலில் ஜெயிக்க எவ்வளவு செலவு செய்வீர்கள்? என்பவைதான் முக்கியமானவையாம்!

அப்பொழுதே நடு நிலையாளர்கள் வயிற்றில் புளி கரைக்கப்பட்டதாம்!

அதையும் தாண்டி, தற்போது வரும் செய்திகள் நடுநிலையாளர்களை மயக்கமடையச் செய்தால் ஆச்சரியமில்லை!

வேட்பாளர்களுக்கு இப்பொழுது ஒரே கேள்விதானாம்!

- 20 கோடி இருக்கிறதா? என்பதுதான் அந்த ஒரே கேள்வியாம்!

காமராஜரையும், கக்கனையும், ஜீவானந்தத்தையும், நல்லகண்ணுவையும் கண்ட இத் தமிழகந்தான் இதுபோன்ற புதுமைகளையும் காண்கிறது!

‘தேவர் மகன்’ சினிமாவில் கௌதமியை விட்டுவிட்டு ரேவதியைக் கரம் பிடிக்கும் கமல் பாடுகையில் ‘மறக்க மனம் கூடுதில்லையே!’ என்று பாட ‘மறந்திடுவேன்னு சொன்னீங்களே!’ என்று ரேவதி கூறுவார்! அதுதான் ஞாபகத்திற்கு வருகிறது!

இதையும் படியுங்கள்:
தேர்தல் ஆணையம் கவலை..!தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆர்வம் காட்டாத 47 லட்சம் வாக்காளர்கள்..!!
tamilnadu Election 2026

‘வசந்த மாளிகை’ சிவாஜியைப் போல் நாமும் 'இரண்டு மனம் வேண்டுமெ'ன்று இறைவனிடம் கேட்போம்! இவற்றையெல்லாம் மறந்து வாழ்ந்தால் மகிழ்ச்சிதானே!

logo
Kalki Online
kalkionline.com