

முன்னாள் அமைச்சர் சத்தியநாதன் ஆழ்ந்த வருத்தத்தில் இருந்தார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை, தகுந்த ஆதாரம் இல்லை என்பதைக் காரணம் காட்டி சிறப்பு நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தது.
அமைச்சரும் நீதிமன்ற வாயிலில் “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மீண்டும் வெல்லும்” என்று பாரதியாரின் வரிகளை நினைவு கூர்ந்து தொலைக்காட்சிக்கும், பத்திரிகையாளர்களுக்கும் பேட்டியளித்தார்.
பாவம், பாரதியார்! அவரின் அமர வரிகள் கறைபடிந்த அரசியல்வாதிகளின் வாயில் சிதைந்து திண்டாடுகின்றன. முதலமைச்சரும் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துக் கூறி மறுபடியும் அமைச்சரவையில் தொடர அழைப்பு விடுத்தார்.
இத்தனை நல்ல விஷயங்கள் நடந்திருக்கும் போது சத்தியநாதனின் வருத்தத்திற்கு என்ன காரணம்? “மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்” என்று வள்ளுவர் கூறியது போல் தன்னுடைய பெயருக்குக் களங்கம் வந்துவிட்டதே என்று வருந்துகிறாரா?
அடிமட்டத் தொண்டனாகக் கட்சியில் சேர்ந்து படிப்படியாக முன்னேறியவர் சத்தியநாதன். சட்ட மன்ற உறுப்பினராகி வளைந்து கொடுக்கும் தன்மையால் மந்திரி ஆனார். மூன்று வருடப் பதவிக் காலத்தில் 20 கோடிக்கு மேல் சொத்து சேர்த்ததாக எதிர்க் கட்சிகள் புகார் செய்ய, உச்ச நீதிமன்றம் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு உத்திரவிட்டது.
எதிர் கட்சிகள் அமளியால் விசாரணையின் போது பதவி விலகவும் நேர்ந்தது. வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதால் சிலதினங்களில் அவர் முக்கிய துறையில் அமைச்சராகப் பதவி ஏற்பார். ஆனால் இத்தனையிருந்தும் அமைச்சரின் வாட்டம் போகவில்லை.
நண்பர்களின், சக அமைச்சர்களின் பரிந்துரையில் சத்தியநாதன் ஒரு புகழ் பெற்ற கிரிமினல் லாயரைத் தனக்கு வாதாடுவதற்கு ஏற்பாடு செய்தார். அந்த லாயர் நீதிமன்றத்தில் ஒரு நாள் வாதாடுவதற்கு பல லட்சங்கள் சன்மானம் கோரினார். பல லட்சங்கள் செலவு செய்ய வேண்டி வந்து விட்டதே என்பதற்காக வருந்துகிறாரா முன்னாள் அமைச்சர்? இல்லை.
இத்தனைத் திறமையாக வக்கீல் வாதிடுவார், எளிமையாகக் குற்றச்சாட்டை முறியடிப்பார் என்று தெரிந்திருந்தால் 200 கோடி சொத்து சேர்த்திருக்கலாமே, அற்பமாக 20 கோடி சொத்து மட்டும் தானே சேர்த்தேன் என்று தன்னைத் தானே நொந்து கொண்டிருக்கிறார் முன்னாள் அமைச்சர் சத்தியநாதன்.
வாய் மெய்யை வெல்லும்..!