

நேர்மையான அரசியலும், உண்மையான பக்தியும் மனித வாழ்வை மேம்படுத்துவதற்காக உண்டானவை. பக்தி எக்காலத்திலும் குறைந்து விடக்கூடாது என்பதற்காகவே, பாமர மக்களைப் பக்தி வழியில், பயமுறுத்தியும் வைத்தார்கள். சாதாரணமாகப் பெரியவர்கள் கூறும் அறிவுரைகளைக் கேட்காதவர்கள், கடவுளோடு அதனைத் தொடர்பு படுத்திவிட்டால், அதனைத் தெய்வ வாக்காக ஏற்று உடன்படவும் செய்தார்கள். அந்த நிலைதான் இன்று வரை தொடர்ந்து வருகிறது.
மக்களை ஆள்வதற்கு அரசியல் தோற்றுவிக்கப்பட்டது. மக்களின் வாழ்வில் அமைதியையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்த ஆன்மிகம் வித்திட்டது.
இரண்டும் ரயில்வே தண்டவாளங்களைப் போல் இணையாகவே இருந்தால்தான் பொதுமக்களின் சக்கர வாழ்வு மகிழ்ச்சியாக ஓடும். நெருங்கும் தண்டவாளங்களில் ரயிலால் ஓட முடியாது. அததது அதனதன் பாதையில் பயணித்தால்தான் அனைவருக்குமே எப்போதும் நல்லது. ஆனந்த வாழ்வுக்கு அடிப்படை இவைதான்!
மக்கட் தொகையில் மட்டுமல்ல; மகேசனின் இருப்பிடமாம் ஆலயங்களின் எண்ணிக்கையிலும் அகில உலகிலேயே முதலிடம் வகிப்பது நமது நாடாகத்தான் இருக்கும்! அப்பப்பா! எத்தனையெத்தனை கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள், குருத்துவாராக்கள் மற்றும் பிரார்த்தனை இடங்கள்!
பிரிக்கப்படாத முந்தைய தஞ்சாவூர் மாவட்டத்தைச் சமயச் சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாகக் கூறுவார்கள். தஞ்சையில் பிரகதீஸ்வரர் ஆலயம், வேளாங்கண்ணியில் மாதா கோயில், நாகூரில் தர்கா என்று பக்தியின் இருப்பிடமாக, அது இன்றளவும் விளங்கிவருகிறது. உலகிலுள்ள 10 பெருமை மிகு ஆலயங்களில் 7 நம் நாட்டில் இருப்பதாகச் சில விபரங்கள் தெரிவிக்கின்றன.
நம் தமிழகத்தில், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், ஶ்ரீரங்கம் ரெங்கநாதப் பெருமாள் கோயில், ஆவுடையார் கோயிலின் ஆத்மநாத சுவாமி கோயில் ஆகியவை சிற்பக் கலைக்கும், கட்டடக் கலைக்கும் எடுத்துக்காட்டாக, முன் நிற்பன. இன்னும் பலவும் உள்ளன. விரிக்கின், பட்டியல் நீளும்!
நமது வட இந்தியாவில் அயோத்தி ராமர் கோயில், அமிர்தசரஸ் பொற்கோயில் போன்று பல கோயில்கள் வரலாற்றுச் சிறப்புடன் மிளிர்கின்றன. தெற்கில் திருப்பதியும், சபரி மலையும், குருவாயூரும், பழனியும் போன்று பல கோயில்கள் சிறப்புடன் விளங்குகின்றன.
இவற்றில் திருப்பதியும், சபரிமலையும் ஒவ்வோர் ஆண்டும் மிகப் பெரும் எண்ணிக்கையிலான மக்களை ஈர்க்கும் மகத்துவம் வாய்ந்தவை. உலக அரங்கில் உயர்வான இடத்தில் உள்ளவை. பழம்பெருமை வாய்ந்த கோயில்கள் எல்லாமே முற்காலத்தில் மடத் தலைவர்களால் நிர்வகிக்கப்பட்டன. ஆகம விதிகள் முறையாகப் பின்பற்றப்பட்டு அனைவரின் ஒத்துழைப்புடன் சிறந்து இருந்தன.
திருப்பதி வெங்கடேசப் பெருமானின் லட்டுப் பிரசாதம் பிரபஞ்சம் முழுவதுமே பிரபலம் பெற்றது. ஆனால் இன்றோ, அது அரசியல்வாதிகளின் கருப்பொருள் ஆகிப்போனது வேதனையளிக்கிறது. புனிதமாகப் போற்றப்படும் அந்த லட்டில், முந்தைய ஆட்சியாளர்கள் தங்கள் சுய லாபத்திற்காகத் தரங்குறைந்த மூலப் பொருட்களைச் சேர்த்ததாக தற்போதைய ஆட்சியாளர்கள் கூற, வழக்கு உச்ச நீதிமன்றக் கதவையும் தட்டியது. நடுவில், வேகங்குறைந்திருந்த குற்றச்சாட்டுகள் மீண்டும் புத்துயிர் பெற்று வலம் வருகின்றன.
அரசியல்வாதிகள் தெரிந்தோ, தெரியாமலோ நமது புனிதக் கோயில்களையும் அரசியலுக்குள் இழுத்து வந்து, அவற்றுக்குக் களங்கம் விளைவித்து பக்திமான்களின் மனதை நோகச் செய்கிறார்கள். உலக அரங்கில் நம் பெருமையைச் சிதைக்கிறார்கள்.
இது ஒரு புறம் நடைபெற, நடுங்கும் குளிரிலும் அதிகாலையில் எழுந்து, தண்ணீரில் குளித்து, ஐயனை வணங்கி, 48 நாட்கள் ஆசாபாசங்களை அடக்கி, இரு முடி கட்டி, இறைவன் ஐயப்பனைத் தேடி மலையேறும் லட்சோப லட்சம் ஐயப்ப பக்தர்களின் மனதில் உறுத்தும்விதமாக அமைந்துள்ளது, அங்குள்ள தங்க அமைப்புகளில் கூறப்படும் களங்கம்.
அரசியல்வாதிகளைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்வது இதைத்தான்! உங்கள் அரசியலைத் தயவு செய்து மக்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள். மகேசனையும் அரசியலுக்குள் இழுக்காதீர்கள்!
புத்தரையும், காந்தியையும் ஏனைய எழுச்சி மிகு தலைவர்களையும் இப்பூவுலகிற்கு அளித்த புனித மண் இது! பக்தி மார்க்கத்தில் ராமரையும், கிருஷ்ணரையும் கண்ட புண்ணிய பூமி இது!
திருப்பதி ஏழு மலையானும், சபரிமலை ஐயப்பனும் உலகோரால் போற்றி வணங்கப்படும் உன்னத தெய்வங்கள். அவர்கள் புனிதம் காக்கப்பட வேண்டும். அவர்களுக்கு வேண்டாமே அரசியல்!