

நமது இந்திய நாட்டின் தலைநகர் டெல்லியில், காற்று அதிக மாசு அடைந்ததன் காரணமாக, அங்கு வசிப்போருக்குச் சுவாசப் பிரச்னைகள் ஏற்படுவதாக வரும் செய்திகள், அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. சாதாரண நேரங்களிலேயே டெல்லியின் காற்று, மாசு அடைந்தே காணப்படும் நிலையில், தீபாவளியை ஒட்டி வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் அது மேலும் மோசடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
பட்டாசு கொளுத்துவது பண்டிகைகளின்போது மட்டுமே. அது ஒரு தற்காலிக நிகழ்ச்சி. தீபாவளி பண்டிகையின் சிறப்பே பட்டாசுகளால்தான்! அதைக் கூட எப்பொழுது வெடிக்க வேண்டுமென்பதற்கான கட்டுப்பாடுகள் இப்பொழுது கொண்டுவரப்பட்டு விட்டன. முன்பு போல, விரும்பிய நேரத்தில் பட்டாசுகளைத் தற்போது வெடிக்க முடியாது.
தலைநகரில் அதிக மாசு ஏற்பட முக்கியக் காரணமாகச் சொல்லப்படுவது அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா ஆகியவற்றில் விவசாயத் தோழர்கள் நெல் அறுவடைக்குப் பிறகு நெல்லின் தாளைக் கொளுத்தி விடுவதே என்கிறார்கள்.
அங்கு மட்டும் அந்தப் பழக்கம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. நமது டெல்டாவில், விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் தான் நானும். விவசாயப் பணிகளிலும் ஈடுபட்டிருக்கிறேன். குறுவை, சம்பா, தாளடி என்று முப்போகச் சாகுபடி ஏரியா எம்முடையது. ஆனால் இங்கு தாளைக் கொளுத்தும் வழக்கம் இல்லை.
கடந்த அறுபதாண்டுகளுக்கும் மேலாகவும், அதற்கு முன்பாகவும் கூட இருந்ததாகத் தெரியவில்லை. அறுவடைக் காலங்களில் அதிக மழை காரணமாக தாளை நீளமாக விட்டு அறுக்க நேர்ந்தாலுங்கூட, அடுத்து வரும் சாகுபடி நேரத்தில் நீரைப் பாய்ச்சி உழ ஆரம்பித்ததும், பழைய தாள் அழுகி, உரமாகி விடும். இந்த முறையை பஞ்சாப், ஹரியானா விவசாய நண்பர்கள் கடைப்பிடித்து, நமது தலைநகர் மாசைக் குறைக்க உதவ வேண்டும். அவர்களாக முன்வந்து இதனைச் செய்யாவிட்டால், தாளைக் கொளுத்துவதற்கு அரசு தடை விதிக்க வேண்டும்.
வெளிநாடுகளில், ஆங்கிலப் புத்தாண்டு தினம், கிறிஸ்துமஸ் போன்ற தினங்களில் கடற்கரை அல்லது ஏரி ஓரங்களில் கால் மணி, அரை மணி நேரத்திற்குப் பட்டாசு வெடித்து, மக்களை மகிழச் செய்கிறார்கள். தனியாக வெடி கொளுத்த ஆசைப்படுவோரின் ஆசையை நிறைவேற்ற, மைதானங்களில் மட்டுமே வெடிக்க அனுமதிக்கிறார்கள். நமது நாட்டிலும் இதனைப் பின்பற்றலாம். மாசு ஓர் இடத்தோடு நின்று விடும்.
இன்னுமொன்றைக் கூடச் செய்யலாம். நமது நேரு ஸ்டேடியம் போல உள் மைதானங்களை வடிவமைத்து, மேலே மூடப்பட்ட கூரையிலிருந்து மிக உயரமான புகை போக்கிகளை அமைத்து, புகை மாசு இருப்பிடவாசிகளைத் தாக்காத உயரத்தில் அதனைக் கொண்டு சென்று விட்டு விடலாம்.
இது பட்டாசுகள் குறித்தது என்றால், வாகனப் புகை மாசைக் குறைக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. அதிகமாகப் புகை கக்கும் பழைய வாகனங்களைக் கட்டாயமாக விலக்குவதுடன், மின் வாகனங்களுக்குக் கூடுதல் சலுகைகள் வழங்கி, அவற்றின் எண்ணிக்கையைக் கூட்டலாம்.
தற்போது ஓடும் தனியார் வாகனங்கள் அனைத்தும் அதன் அதிகக் கொள் திறனுடன், அதாவது ஐவர் பயணம் செய்யும் கார் என்றால், 5 பேருடன் தான் செல்ல வேண்டும். ஒருவர், இருவர், மூவர் என்று பயணிப்பதால் தானே வாகனங்களின் எண்ணிக்கை சாலையில் கூடி விடுகிறது.
தொழிற்சாலைகள் விடும் புகையினை, மிக உயரமான புகை போக்கிகள் மூலம், அதிக உயரத்தில் கொண்டு விட ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
மேற்கண்டவை உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டியவை.
நீண்ட கால அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டியவையும் உள்ளன. அதிகப் புகை மாசை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி மறுக்கப்பட வேண்டும். தொழிற்சாலைகளை அமைக்கையில் மையப்படுத்துதல்(Centralistion)மற்றும் பரவலாக்கல் (Decentralisation)என்ற முறைகள் பின்பற்றப்படும். மையப்படுத்தலில் அனுகூலங்கள் அதிகம் என்பதால் அம்முறை இதுவரை பின்பற்றப்பட்டது. இனி பரவலாக்கல் முறையைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு நாம் இப்பொழுது தள்ளப்பட்டுள்ளோம். இது நமது மாநிலத் தலை நகர்களுக்கும் பொருந்தும். தொழிற்சாலைகளை ஒரே இடத்தில் குவிப்பதாலேயே காற்று மாசு அபாய எல்லையைத் தொடுகிறது.
நமது ஐஐடி வல்லுனர்கள், காற்றிலுள்ள வேண்டாத வாயுக்களைப் பிரித்து அவற்றை எந்திரங்கள் மூலம் உறிஞ்சவும், அந்த வெற்றிடத்தை நல்ல காற்றின் மூலம் நிரப்பவும் உபாயங்களைக் கண்டறிய வேண்டும்.
புவியியல் அமைப்பின்படி, டெல்லி உள்நாட்டுப் பிரதேசமாகி விட்டதால், அது இம்மாதிரியான மாசைச் சந்தித்து ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக வல்லுனர்கள் தெரிவிப்பதால், மாற்று இட ஏற்பாடுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது அவசியமாகிறது.
பொறுப்பிலுள்ளவர்கள், இது போன்ற நடைமுறைக்குச் சாத்தியமான வேறு உபாயங்களையும் ஆழ்ந்து யோசித்து நடைமுறைப்படுத்தி, காற்று மாசைக் குறைக்க ஆவன செய்ய வேண்டும்.