
தென்காசி மாவட்டம் மத ஒற்றுமைக்குப் பிரசித்தி பெற்ற ஊர்.
இங்குள்ள முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் ஆண்டு தோறும் நடைபெறும் கந்தூரி திருவிழா மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகவும் அடையாளமாகவும் இருந்து வருவது இந்த கிராமத்தின் பாரம்பரிய பெருமை.
இந்தப் பெருமைக்கு மகுடம் சூட்டும் வகையில் போரில்லா உலகம் பேரன்பு அமைப்பு இயங்கி வருகிறது.
இதன் நிறுவனர் நெல்லை குரலோனை சந்தித்து பேசினோம்:
"வங்கிப் பணியில் இருந்து ஓய்வு பெற்றதும் நான் பிறந்த இந்த ஊருக்கு என்னை வாழ வைத்த இந்த சமுதாயத்திற்கு ஆக்கப் பூர்வமாக ஏதாவது செய்ய வேண்டுமென்ற தவிப்பு... தாக்கம் தான் போரில்லா உலகம் பேரன்பு. கடந்த ஒன்பது ஆண்டுகளாக போரில்லா உலக அமைதியை நோக்கமாகக் கொண்டு செயல் படுகிறோம். இது என் பூர்வீக இல்லம். பத்து சென்ட் இடம். என் குடும்பத்தார் சம்மதத்துடன் இதற்காகவே அர்ப்பணித்து விட்டோம்.
உலக அமைதிக்கான தியான மண்டபத்தை இங்கே எழுப்ப வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு.
செயற்கை திணிப்பாக விளம்பரம் கூடாது.
யாரிடமும் நிதி உதவி பெறக் கூடாது.
இந்த இரண்டு விஷயத்திலும் ஆரம்பத்தில் இருந்தே கவனமாகவும் கறாராகவும் இருக்கிறோம்.
போரில்லா உலகம் என்பது இன்றைய சூழலில் எப்படி சாத்தியம்?
"இதை கண்மூடித் தனமாகவோ, ஆர்வக் கோளாறிலோ கூற வில்லை. சுருக்கமாக சொல்கிறேன்... இரண்டே இரண்டு விஷயங்கள் தான்.
ஒன்று... பிரார்த்தனை...
ஆழ்ந்த நம்பிக்கையில் சுயநலமில்லாமல் உண்மையான சமூக அக்கறையில் நாம் பண்ணும் பிரார்த்தனைக்கு வலிமை அதிகம். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்ட உண்மை... அதனால் தான் எங்கள் பேரன்பு அமைப்பின் சார்பாக, 'ஒரு நிமிஷம், ப்ளீஸ்' என்ற பிரார்த்தனை வேண்டுகோளை பிரபலப் படுத்தி வருகிறோம்.
ஒரு நாளைக்கு 1440 நிமிடங்கள்... அதில் ஒரே ஒரு நிமிஷத்தை மட்டும் தான் கேட்கிறோம். இந்த பிரபஞ்சத்தில் காற்று, நீர், ஆகாயம்... என்று எத்தனையோ அம்சங்களை இலவசமாக பெறும் நாம், இந்த பூமியின் நலனுக்காக ஒரு நிமிஷம் ஒதுக்குவது தானே, ஆறறிவு படைத்த மனிதருக்கு அழகு.
ரெண்டாவது விஷயம்...
உலகில் அநேகமாக 200 நாடுகள் உள்ளன.
இந்த இருநூறு நாட்டு தலைவர்களும் ஒன்றிணைந்து ஒரே ஒரு தீர்மானம்...
அதாவது எந்த நாடும் எந்தக் காரணம் கொண்டும் எந்த நாட்டோடும் போர் தொடுக்கக் கூடாது...
எந்தப் பிரச்னையையும் பேசி சுமுகமாக தீர்த்துக் கொள்ள வேண்டும்...
இன்றைய அதீத தொழில்நுட்ப வளர்ச்சியில் இணைய தளத்தில் உலகத் தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடினால் போதும்...
ஒரு மணி நேரத்தில் இந்த மகா தீர்மானத்தை நிறைவேற்றி போரில்லா உலக அமைதிக்கு வழி வகுத்து விடலாம்."
"ஆயுதத் தயாரிப்பிலும் விற்பனையிலும் பொருளாதாரத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் நாடுகள் இதற்கு எப்படி சம்மதிக்கும்?"
"நியாயமான எதார்த்தமான கேள்வி... சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த உலகையே தலைகீழாக புரட்டிப் போட்ட கொரோனா வைரஸை நினைத்துப் பாருங்கள்... நினைத்துப் பார்க்க முடியாத மாற்றங்களை ஒரு வைரஸ் நடத்திக் காட்டியதே... உள்ளன்போடு நாம் பண்ணும் கூட்டுப் பிரார்த்தனை உலகத் தலைவர்களை ஒன்றிணைத்து இந்த ஆக்கப் பூர்வமான தீர்மானத்தை நிறைவேற்றி வைத்து அற்புதம் நிகழ்த்தும். நம்பிக்கை தானே வாழ்க்கை?"
உறுதி குன்றாமல் உணர்ச்சிப் பூர்வமாகப் பேசி மெய் சிலிர்க்க வைக்கிறார் நெல்லை குரலோன்.
இதற்காக என்னென்ன செய்து வருகிறீர்கள்?
"நண்பர்கள், ஊர் பொதுமக்கள் தரும் ஆதரவும் ஊக்கமும் உற்சாகம் அளிக்கிறது.
பத்திரிகைகளில் இது சம்பந்தமான கருத்துக்களை எழுதி வருகிறேன்.
இந்த கருத்துக்கு ஆதரவு தரும் நண்பர்கள் தமிழகம் மட்டுமல்ல... பிற மாநிலங்களில், வெளி நாடுகளிலும் உள்ளனர். இவர்களையெல்லாம் போரில்லா உலகம் பேரன்பு என்னும் வாட்ஸ் அப் குரூப் மூலம் இணைத்து, தொடர்ந்து போரில்லா உலகம் சம்பந்தமான கருத்துக்களை பதிவு செய்து வருகிறோம்.
தினசரி இரவு 9.30 ஐ பிரார்த்தனை நேரமாக அறிவித்து, ஒரு நிமிஷம் ப்ரேயர் பண்ண வேண்டுகிறோம்.
கடந்த ஆகஸ்ட் 15ல் சுதந்திர தினத்தை முன்னிட்டு எங்கள் ஊரில் நடந்த கிராமசபை கூட்டத்தில், பேரன்பு சார்பாக போரில்லா உலகம் உருவாக வேண்டும் என்ற பிரகடனத்தை தீர்மானமாக நிறைவேற்றினோம்.
அதே நாளில், இந்நாள் முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் எங்கள் ஊரின் இரு நுழை வாயிலில் பேரன்பு வாசகம் இடம் பெற்ற போர்டை நிறுவி, சுற்று வட்டார அளவில் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு விழிப்புணர்வை உண்டு பண்ணினோம்.
அடுத்த மாதம், எங்கள் ஊரிலுள்ள எல்லா வீடுகளிலும், போரில்லா உலகம் பேரன்பு பிரார்த்தனை வேண்டுகோள் ஸ்டிக்கரை பதிக்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்து வருகிறோம்."
அடர்ந்து இருள் படர்ந்து
அழகாக இருக்குது காடு
நாம் கொடுத்த வாக்குகள் உண்டு
இன்னும் காப்பதற்கு...
கடந்து போக வேண்டும்
இன்னும் பல காத தூரம் கடந்து போக வேண்டும்' என்ற ராபர்ட் ஃப்ராஸ்ட்டின் கவிதை வரிகளை உரக்கச் சொல்லி பேரன்பு அமைப்பின் இலட்சியப் பாதையை செறிவாக சித்தரித்து காட்டுகிறார் நெல்லை குரலோன். பற்றும் பரவசமும் நம்மிடமும் தொற்றிக் கொள்ள, பாராட்டோடு வாழ்த்தையும் கூறி விடை வாங்கினோம்.