
இந்தியா-பாகிஸ்தான் சண்டை. இந்தியா முழுவதும் ஒரே பரபரப்பு. மனதிற்குள் திக்-திக். அனைத்து நகரங்களுக்கும் எச்சரிக்கை. பாதுகாப்பிற்காக, வீட்டிலுள்ள கண்ணாடி கதவுகள் மற்றும் ரெயில், பஸ் கண்ணாடிகளுக்கு கார்பன் பேப்பர் ஒட்டி வைக்க வேண்டும்.
சாலைகளில் மினுக்-மினுக் விளக்கு. இரவில் எதிரில் வரும் ஆள் தெரியாது. காரணம் - போர் விமானங்கள் மேலே பறக்கையில், அவர்களுக்கு கீழேயுள்ள வெளிச்சம் தெரியக்கூடாது. எங்காவது தெரிந்தால், குண்டு விழுந்து விடும். அடிக்கடி சைரன் சத்தம்.
மும்பை மாநகரில் வேலைக்கு சேர்ந்த புதிது. பிற மொழி தெரியாது. லோகல் டிரெயின் பிடிக்க வீட்டிலிருந்து காலை எட்டு மணி அளவில் கிளம்ப வேண்டும். 20 நிமிடங்கள் நடைக்குப் பின் 45 நிமிடங்கள் டிரெயின் டிராவல். விக்டோரியா டெர்மினஸ் ஸ்டேஷனிலிருந்து பஸ்ஸில் 10 நிமிடங்கள் பயணித்து அலுவலகம் செல்ல வேண்டும்.
தொலைபேசி அலுவலகமானதால், எக்கச்சக்க வேலை. ஃபேக்ஸ் அனுப்புவது, குறிப்புக்களை தயார் செய்வது என அனைத்து வேலைகளையும் முடிக்கையில் மாலை மணி ஆறு ஆகிவிட்டது. எங்கும் இருட்டாக இருந்தது.
அலுவலக காரில், விக்டோரியா டெர்மினஸ் ஸ்டேஷன் வரை விட்டனர். டிரெயினுக்குள் ஏறியாகிவிட்டது. லேடீஸ் கம்பார்ட்மெண்டில் எண்ணி நான்கு பெண்கள். இருவர் மீன் வியாபாரிகள். கூடையுடன் உட்கார்ந்திருந்தனர். ஒரே வாசம். மற்ற இருவர் ஏதோ புக் படித்துக் கொண்டிருந்தனர். கம்பார்ட்மெண்ட்டின் கண்ணாடிக் கதவுகள், மெயின் கதவு என்று கார்பன் பேப்பர்கள் ஒட்டப்பட்டு ஒரே இருட்டு.
அது விரைவு லோகல் வேறு. இடையில் நின்ற ஸ்டேஷன் எனக்கு தெரியாத காரணம், இறங்க முடியவில்லை. கடைசியாக 'தானே' ஸ்டேஷனில் நின்றது. இருட்டில் ஒன்றும் சரியாகத் தெரியவில்லை. இரவு மணி எட்டு. மனசுக்குள் ஒரே 'திக்-திக்'. கந்த சஷ்டி கவசத்தை கூறியவாறே எப்படியோ, தானே ஸ்டேஷனிலிருந்து, வீட்டிற்கு வர, வேறு ஒரு டிரெயின் பிடித்தேன். லேடீஸ் டப்பாவில் ஒருவரும் இல்லாததால், ஆண்கள் டப்பாவில் ஏறினேன். என்னவெல்லாமோ கெட்ட வாசனை. ஒரே ஆண்கள் மயம். ஜன்னலோரம் ஒடுங்கி அமர்ந்தேன். அருகில் பெரிய மீசை வைத்த, தடிமனான ஆண் வந்து அமர, 'திக்-திக்' என மனது அடித்தது.
ரெயில் புறப்படும் நேரம், திடீரென எங்கிருந்தோ ஆஜானுபாகுவாக வெள்ளைச்சேலை அணிந்த ஒரு பெண்மணி ஓடி வந்து அந்த டப்பாவில் ஏறினாள். சுற்றுமுற்றும் பார்த்தவள், என் அருகே அமர்ந்திருந்த ஆளை ஹிந்தியில் ஒரு அதட்டு அதட்டி நகர்த்திவிட்டு, என்னருகே அவள் உட்கார்ந்தது நிம்மதியாக இருந்தது.
மேலும், "பேட்டீ! சிந்தா மத் கரோ! மை ஹுன்!" (குழந்தை! கவலைப்படாதே! நான் இருக்கேன்!) என்றவுடன் மனசுக்குள் ஒரு பக்கம் நிம்மதியாக இருந்த போதும், இவள் யார்? நல்லவளா? கெட்டவளா ? நம்பலாமா? என்று வேண்டாத நினைவுகள். மீண்டும் 'திக்-திக்'. கந்த சஷ்டி கவசம் திரும்பவும் மனதிற்குள் ஓடியது.
ஆனால் நடந்தது -- நான் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வரை, அப்பெண்மணி தெய்வம் போல கூடவே வந்து பத்திரமாக இறக்கி விட்டு "ஜாவோ பேட்டீ!" என்றார். 'திக்-திக்' கிலிருந்து மீண்டு வந்த நான், அவருக்கு நன்றி தெரிவிப்பதற்குள் மாயமாக மறைந்து விட்டார். அப்புறம் வீடு வந்து சேர்ந்தது தனிக்கதை.
1971 -இல் இந்தியா-பாகிஸ்தான் வார் சமயம் நடந்த 'திக்-திக்' சம்பவமும், தெய்வம் போல வந்து என்னைக் காப்பாற்றிய வெள்ளைச் சேலை அணிந்த பெண்மணியும் இன்றும் நினைவில் ஆழமாக பதிந்துள்ளன.