
பருவமழை (Monsoon rain) வரப்போகிறது... இன்னும் உங்கள் சுற்றுப்புறங்களில் தடுப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவில்லையா? சரி நீங்கள் அதற்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? அரசையும் தாண்டி நாம் என்ன செய்ய வேண்டும்?
சென்னைக்கு மழை எவ்வளவு முக்கியமோ, அதைவிட வரப்போகும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தான் (அக்டோபர்-டிசம்பர்) முக்கியமான பெரிய பணியே. எனவே, வரப்போகும் வெள்ளம், நீர்வழி நோய்கள் மற்றும் உள்கட்டமைப்பு சேதங்களிலிருந்து தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் பாதுகாக்க முதலில் குடியிருப்பாளர்கள் தான் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (GCC) போன்ற நகராட்சி அமைப்புகள் தான் இதற்கு முழு பொறுப்பு. அதே வேளையில் ஒவ்வொரு தெருவிலும் வசிக்கும் தனிநபர்களும் அவரவர்களின் சுற்றுப்புறங்களை காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பெரும்பாலும் அரசாங்க அமைப்புகளை விட இவர்கள் தான் நகரத்தை காக்க அதிக சுறுசுறுப்புடனும், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
என்னென்ன விஷயங்களை குடியிருப்பாளர்கள் செய்யலாம்? பெரும் மழை வருவதற்கு முன்பு மழைநீர் வடிகால்களிலும் சாலையோர சாக்கடைகளிலும் இலைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றும் பணிகளை தொடங்க வேண்டும். ஏனென்றால் அடைபட்ட வடிகால்கள்தான் காலம் காலமாய் சந்திக்கும் நகர்ப்புற வெள்ளத்திற்கு முதன்மையான காரணமாகும். தெருவில் வசிக்கும் அனைவரும் அவரவர்களின் வெளிப்புற இடங்களை கூச்சமின்றி சுத்தம் செய்தாலே நீர் தேங்குவதைத் ஓரளவு தடுக்கலாம்.
கூரை, மொட்டை மாடி ஆய்வுகள் மிகவும் அவசியம். காரணம் அங்கு பொழியும் மழை நீரின் ஓட்டத்தை உறுதி செய்தால் தான் நீர் கட்சிதமாக வெளியேறும். அடித்தளங்களில் கசிவு ஏற்படுவதை தவிர்க்க மேலேயுள்ள பால்கனி, அதன் நீர் வெளியேறுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். தாழ்வான பகுதிகளில் குடியிருப்பாளர்கள் தற்காலிக மணல் மூட்டை தடைகளை நிறுவலாம்.
இறுதியில் மின்சார வயர்களை தட்டும் மரங்களையும் மின்வாரிய ஊழியர்கள் உதவியுடன் முன்கூட்டியே வெட்டலாம்.
கொசு கட்டுப்பாடு மற்றொரு முக்கியமான நடவடிக்கையாகும். மலர் தொட்டிகள், தூக்கி எறியப்பட்ட பொருட்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை தனிநபர்கள் அகற்ற வேண்டும்.
குடியிருப்போருடன் ஒருங்கிணைந்து செய்யப்படும் நோய்களை பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் டெங்கு, சிக்குன்குனியா பரவுவதைக் குறைக்கும்.
பின் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் முன்கூட்டியே சுத்தம் செய்யப்பட்டு நிலத்தடி நீரை நிரப்ப தயாராக இருக்க வேண்டும். காரணம் அதுவும் வெளிப்புற நீர் ஓட்டத்தை குறைக்க உதவும்.
அனைவரும் முன் களப்பணியாற்ற வேண்டும். உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதில் அரசாங்க அமைப்புகளை விட குடியிருப்பாளர்கள் தான் பெரும்பாலும் அதிக பொறுப்புணர்வை கொண்டுள்ளனர்.
சேதமடைந்த சாலைகள், உடைந்த பாதாள சாக்கடைகள் அல்லது அடைபட்ட வடிகால்களை யார் வேணாலும் நேரடியாக அரசாங்க அலுவலகங்களுக்கோ அல்லது ஹெல்ப்லைன்கள் மூலமோ தெரிவிக்கலாம். அல்லது வேறு சில காரணங்களால் இந்த பணி தடைபடும்போது சம்பந்தப்பட்டவர்களை குறை கூறுவதை முதலில் நிறுத்தி கொண்டு, இதைப் பற்றிய தகவல்களை அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்து அதற்கேற்ற தற்காப்பு விஷயங்களை தன்னெழுச்சியாக அனைவரும் ஒன்று சேர்ந்து செய்யலாம்.
ஆக, பருவமழை தயார் நிலை என்பது அரசு, மக்கள் என்ற ஒரு பகிரப்பட்ட பொறுப்பு தான். எனவே, ஒவ்வொரு தனிநபரும் முன்முயற்சி எடுக்கும்போது அவர்கள் தங்கள் வீடுகளை மட்டும் பாதுகாப்பது மட்டுமல்லாமல், அவர்களின் முழு தெருவையும் முன்னின்று காக்கின்றன.