இசை உலகிற்கு மதுரை தந்த பெருமைமிகு இசைக் கலைஞர்கள்!

ஜூன் 21, உலக இசை தினம்
எம்.எஸ்.சுப்புலட்சுமி
எம்.எஸ்.சுப்புலட்சுமி

ன்று உலக இசை தினம். இசையையும் மதுரையையும் பிரித்துப் பார்க்க முடியாது. இசைத் தமிழை வளர்த்ததில் மதுரை மாநகருக்கு புராதனக் காலத்திலிருந்தே பெரும் பங்குண்டு. பெருமைமிகு மதுரை மாநகர் இசை உலகுக்குத் தந்த பிரபல இசைக்கலைஞர்கள் சிலரைக் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி: எம்.எஸ்.சுப்புலட்சுமி 1916ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி மதுரையில் பிறந்தவர். அவரது முழுப் பெயர் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி. தாயிடமிருந்து இசையை கற்றுக்கொண்ட அவர், 10 வயதில் எச்.எம்.வி. நிறுவனத்திற்காக பாடி சாதனை படைத்தார். இவரின் சங்கீத திறமையை நன்கு உணர்ந்த சரோஜினி நாயுடு இவரை வடநாட்டு ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் கர்நாடக இசைப் பாடகி மட்டுமல்ல, சிறந்த நாட்டியக் கலைஞர், மிருதங்கம் வாசிக்கும் திறன் பெற்றவர், சிறந்த நடிகை. இவரின் மீரா திரைப்படம் உலகப்புகழ் பெற்றது. டான்ஸ் மேக் அப் கலையில் வல்லவர். 1963ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் எடின்பர்க் இசை விழாவில் கலந்து கொண்ட முதல் இந்தியப் பாடகி, ஐ. நா.சபையில் பாடிய முதல் பாடகி.

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காளம், இந்தி, சமஸ்கிருதம், குஜராத்தி ஆகிய மொழி திரைப்படங்களிலும் பாடியவர். உலகின் பல நாடுகளுக்கும், ஐக்கிய நாட்டு சபைக்கும் இந்தியாவின் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று பல இசை நிகழ்ச்சிகள் நடத்தினார். பாரத ரத்னா, மாக்ஸசே விருது உட்பட பல விருதுகள் தனது இறுதி நாளான டிசம்பர் 11, 2004 க்குள் பெற்ற இசைக்கலைஞர்.

மதுரை மணி ஐயர்
மதுரை மணி ஐயர்

மதுரை மணி ஐயர்: 20ம் நூற்றாண்டின் முதல் பாதியில் மிகவும் பிரபலமான கர்நாடக சங்கீத பாடகர்களில் ஒருவராக இருந்தவர். இசையுலகில் தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்திக் கொண்டவர் 'கான கலாதர' மதுரை மணி ஐயர். கர்நாடக சங்கீதத்தில் பல கீர்த்தனைகளை, ராகங்களை, தாளங்கள் அறிமுகப்படுத்தியவர். இவரின் கச்சேரி சமயத்தில் ரிக் ஷாக்காரர்கள் சவாரிக்கு அழைத்தால் கூட வர மாட்டார்களாம்.

'மதுர' மணி ஐயர் என்று ரசிகர்களால் போற்றப்பட்ட இவர். மதுரையில், அக்டோபர் 25, 1912 அன்று பிறந்தார். இயற்பெயர் சுப்பிரமணியன். ஸ்வரம் பாடுவதில் நிகரற்று விளங்கிய மதுரை மணி, ராக ஆலாபனைகளை தேவையானபோது விஸ்தாரமாகப் பாடுவார். அவரால் பிரபலம் அடைந்த கீர்த்தனைகள் ஏராளம். நளினகாந்தி போன்று அப்போது அபூர்வமாக இருந்த ராகங்களை சர்வ சாதாரணமாக பாடும் திறன் கொண்டவர். பல்வேறு கெளரவங்களைப் பெற்றவர்.1944ல் கானகலாதரர், 1959ல் சங்கீத கலாநிதி, 1960ல் குடியரசுத் தலைவர் விருது, 1962ல் இசைப் பேரறிஞர் எனப் பல விருதுகள் அவருக்குக் கிடைத்தன.

மதுரை சோமு
மதுரை சோமு

மதுரை சோமு: முருகன் பாடல்கள் என்றவுடன் நம் நினைவில் நிற்பவர் மதுரை சோமு எனும் மதுரை எஸ்.சோமசுந்தரம். 1976 ல் பத்மஸ்ரீ பட்டம் பெற்ற கர்நாடக இசை பாடகர். கர்நாடக இசை, தமிழிசை, திரையிசை என மூன்று களங்களிலும் முத்திரை பதித்தவர் 'சோமு' என அழைக்கப்படும் மதுரை எஸ்.சோமசுந்தரம். இவர் பிப்ரவரி 09, 1919 அன்று மதுரையில் பிறந்தவர். இரண்டு, மூன்று மணி நேரம் பிற கலைஞர்கள் கச்சேரி செய்து கொண்டிருந்த காலத்தில் பல மணி நேரம் தொடர்ந்து கச்சேரி செய்வார் சோமு. பல ஆலயங்களில் விடிய விடிய பாடியிருக்கிறார். தன்னை மறந்து உடலும் உயிரும் ஒன்றி அவர் பாடிய கச்சேரிகளை மக்கள் மட்டுமல்லாது, சக கலைஞர்களும் விரும்பி ரசித்தனர்.

சோமுவின் கச்சேரி அக்காலத்தில் 'ஃபுல் பெஞ்ச்' கச்சேரி என அழைக்கப்பட்டது. மிருதங்கம், வயலின், கஞ்சிரா, மோர்சிங், தம்புரா, கொன்னக்கோல் என அனைத்துக்கும் அவர் கச்சேரியில் இடமுண்டு. லால்குடி ஜெயராமன், குன்னக்குடி வைத்தியநாதன், விநாயக்ராம், உமையாள்புரம் சிவராமன் போன்ற சிறந்த கலைஞர்கள் இவருக்குப் பக்கவாத்தியம் வாசித்துள்ளனர்

மதுரை கிருஷ்ணன்
மதுரை கிருஷ்ணன்

மதுரை கிருஷ்ணன்: மதுரை என்.கிருஷ்ணன் அக்டோபர் 31, 1928 மதுரையில் ஒரு சங்கீத குடும்பத்தில் பிறந்தவர். கிருஷ்ணன் நடனங்களுக்காகவும் மற்றும் திருப்பாவை , நாலாயிர திவ்ய பிரபந்தம் மற்றும் திருவாசகம் போன்ற இலக்கிய படைப்புகளுக்காகவும் இசையமைத்திருக்கிறார். மூன்று அம்சங்களில் அவரது இசைத் திறமை வெளிப்பட்டது. அவை பாடல்கள் பாடுவது, பாடல்கள் எழுதுவது மற்றும் எழுதிய பாடல்களுக்கு இசையமைப்பு செய்வது போன்றவை ஆகும். இந்த மூன்று திறனையும் ஒருங்கே பெற்றதால், அவர் மோனிகர் மற்றும் வாகீயக்காரா என்று அழைக்கப்பட்டார்.

1992ல் மிக உயரிய சிவிலியன் விருதான பத்மஸ்ரீ விருது, இந்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்டது. மற்றும் அதைத் தொடர்ந்து 2003ல், மூன்றாவது மிக உயரிய சிவிலியன் விருதான பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. மேலும், அவர் சங்கீத நாடக அகாதமி விருது, யுனெஸ்கோ விருது மற்றும் கலைமாமணி விருதினைப் பெற்றவராவார்.

டி.எம்.செளந்தரராஜன்
டி.எம்.செளந்தரராஜன்

டி.எம்.செளந்தரராஜன்: இந்தியாவின் தலைசிறந்த பாடகர்களுக்கு இந்திய அரசு தபால் தலையை 2016ம் ஆண்டு வெளியிட்டது. அதில் ஒருவர் மதுரையில் மார்ச் 24, 1922 ஆண்டு, பிறந்த திரைப்பட பின்னணி பாடகர் டி.எம்.செளந்தரராஜன். துகல்வா மீனாட்சி ஐயங்கார் செளந்திரராஜன் என்பது அவருடைய முழுப்பெயர்.

இதையும் படியுங்கள்:
இசைக் கேட்டால் புவியே அசைந்தாடும்!
எம்.எஸ்.சுப்புலட்சுமி

தன்னுடைய ஏழு வயதில் இருந்தே, தனது குரல் வளத்தின் மீது அக்கறைக் காட்டத் துவங்கி, 21 வயதிலிருந்து தனியாகக் கச்சேரிகளில் பாடி வந்தார். பல ஆண்டுகளாகக் கச்சேரிகளில் பாடிய அவரை, சுந்தரராவ் நட்கர்னி என்ற இயக்குனர் ‘கிருஷ்ண விஜயம்’ (1950) என்னும் திரைப்படத்தில் ‘ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி’ என்ற பாடலைப் பாடுவதற்கு ஒப்பந்தம் செய்தார். இதுவே அவர் திரையுலகில் நுழைவதற்கான ஒரு வழியைத் தந்தது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் 11,000க்கும் அதிகமான திரைப்பட பாடல்களை அவர் தனது வாழ்நாளில் பாடியிருக்கிறார். டிஎம்எஸ் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் இவருடைய நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னையில் அவர் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் மந்தைவெளி வெளிவட்ட சாலை பகுதிக்கு `டி.எம்.சௌந்தரராஜன் சாலை` எனப் பெயர் சூட்டப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com