

‘இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு
எல்லா மக்களும் என் உறவு
எல்லா மொழியும் என் பேச்சு
ரகுபதி ராகவ ராஜா ராம்
பதீத பாவன சீதாராம்’ என்றும்,
‘தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா’ என்றும்
நம் முன்னோர்கள் நாம் அமைதியாக வாழ பல நல்லவற்றைச் செய்து வைத்தார்கள். நிம்மதியும் அமைதியும் கொண்ட மக்களைக் கொண்ட நாடே உயர்ந்த நாடாக இருக்க முடியும். அந்த வகையில் நம் நாட்டில் அமைதி தவழுகிறதா? என்ற கேள்விக்கு எதிர்மறை விடைதானே எஞ்சி நிற்கிறது.
மனிதனின் அடிப்படைத்தேவை மூன்று! உணவு, உடை, உறைவிடம். மற்றதெல்லாம் இவற்றுக்குப் பின்னால்தான். பட்டினிச் சாவுகளைப் போக்கப் பசுமைப் புரட்சியை ஏற்படுத்த அப்போதைய ஆட்சியாளர்கள் மேற்கொண்ட அரிய முயற்சிகள் எவ்வளவு என்று பார்த்தால், வியப்பே மேலிடும். அமைச்சர்கள், அதிகாரிகள், ஆர்வமுள்ள விவசாயிகள் என்று உறக்கத்தையும் மறந்து உழைத்த காரணத்தால்தான் பட்டினிச் சாவுக்கு முடிவுரை எழுத முடிந்தது.
ஆனால் இன்றைய நிலையோ! சொல்லுந் தரமன்று! விவசாயமும், டெல்டா மாவட்ட விவசாயிகளும் அல்லற்பட எவைதான் காரணம்? ஒன்றல்ல… இரண்டல்ல… பலப் பல. சிலவற்றை வரிசைப்படுத்துவோம்!
1.நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ‘கிராம மராமத்து’ என்றொரு நிகழ்வு இருந்தது. கோடைக் காலத்தில் வரத்து /போக்குக் கால்வாய்களை சரியான முறையில் செப்பனிடுவார்கள். எங்கு அதிக ஆழம் வேண்டும், எங்கு அதிக அகலம் வைக்க வேண்டுமென்பதெல்லாம் ஊராருக்கு அத்துபடி. அதன்படி ஜூன் மாதம் பிறக்கு முன்னரே எல்லாவற்றையும் சரி பார்த்து வைத்து விடுவார்கள். நிலத்தின் அளவுக்கேற்றபடி பணம் வசூல் செய்துகொள்வார்கள்.
இப்பொழுதோ, மூழ்கியிருக்கும் பயிர்களைப் பிடுங்கிக் கையில் பிடித்தபடி, முழங்கால் அளவு நீரில் நின்றபடி,”வடிகால் சரியாகத் தூர் வாரப்படாததே இந்த நிலைக்குக் காரணம்!” என்று போட்டோவுக்குப் போஸ் கொடுத்தபடி கூறுகிறார்கள். ஏதோ முந்தா நாள் வரை வெளிநாட்டில் இருந்து விட்டு, நேற்று மாலைதான் ஊர் திரும்பியதைப்போல!
2.விபி ஜி ராம்ஜி (மகாத்மா காந்தி தேசீய ஊரக வேலை உறுதித் திட்டம்) நல்ல நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு, சரியான கண்காணிப்பின்றி, திட்டத்தைச் செம்மையாக நடத்தத் தவறிய காரணத்தால், டெல்டா விவசாயத்தையே புரட்டிப் போட்டது.
பஞ்சாயத்தார் பாக்கட்டுகளை நிரப்பிக்கொள்ள வழி வகுத்தது. வீட்டை விட்டு வெளியில் வராதவர்களின் பெயர்களும் பயனாளிகள் லிஸ்டில் சேர்க்கப்பட்டு குளறுபடி செய்யப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. ஆனால் என்ன நடந்தாலும் நாங்கள் அதில் தலையிட மாட்டோமென்று அரசுகள் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டதாகவே தெரிகிறது. அத்திட்டம் உரிய விதத்தில் நடத்தப்பட்டிருந்தால், பயிர்கள் மூழ்காமல் தடுத்திருக்கலாம்.
பத்திரிகைகள் ‘ஓட்டு அரசியல்’ என்கின்றன. அரசியல் சாசனம் எழுதியவர்கள் ஓட்டு அரசியல் என்று எங்கும் குறிப்பிட்டிருப்பதாகத் தெரியவில்லை. பெயர் மாற்றம் செய்வதையே அனைத்து அரசுகளும் செய்து வருகின்றன. அதனால் எந்த முன்னேற்றமும் சாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. மௌண்ட் ரோடை அண்ணா சாலை என்று மாற்றம் செய்து ஆண்டுகள் பலவாகியும், இன்னும் பலர் மௌண்ட் ரோடு என்றுதான் கூறி வருகிறார்கள்.
இதில் இன்னொரு கூத்தும் உண்டு. தாலி வரை அடகு வைத்து, அல்லும் பகலும் அல்லல்பட்டுப் பயிர் வளர்த்து அறுவடை செய்து சென்டருக்கு விற்பனைக்குக் கொண்டு வந்தால், ’இடமில்லை! சாக்கில்லை!’ என்று ஏகப்பட்ட சால்ஜாப்புகள்.
தூக்குக் கூலி, இறக்குக் கூலி என்று ஏதேதோ கூறி மூட்டைக்கு 40 ரூபாய் பிடுங்கும் அவலம். எல்லோருக்கும் இது தெரிந்திருந்தும் ஏனோ யாரும் அதைத் தடுக்க முன் வரவில்லை. ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் இதுபோன்று தங்கள் மாவட்டங்களில்
நடக்காமல் பார்த்துக்கொள்ள முடியாதா? இப்பொழுது மாவட்டங்களெல்லாம் சிறுத்துவிட்டன. வேலூர் என்று ஒரே மாவட்டமாக இருந்தது, இன்று இரண்டு, மூன்றாகப் பிரிக்கப்பட்டுவிட்டது. அன்று ஒரே மாவட்ட ஆட்சியர்தான் அத்தனையையும் பார்த்துக்கொண்டார்.
உணவுத்துறையில் இன்னொரு வேடிக்கை, வேண்டாதவர் களுக்கும் மாதா மாதம் 20 கிலோ அரிசி வழங்குதல். பலர் அதனை வாங்காததால், கொடுத்ததாகக் கணக்குக்காட்டி நடுவிலிருப்பவர்கள் காசு பார்க்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் பொங்கல் பரிசாக ரேஷன் கார்டுதாரர்கள் அனைவருக்கும் அரசு ரூ 500 வழங்கியபோது, ஓர் ஐகோர்ட் நீதிபதியே எங்களுக் கெல்லாம் கூட 500 ரூபாய் வழங்க வேண்டுமா என்று ஆச்சரியப் படுவதைப்போல, அரசுக்குச் சுட்டிக் காட்டினார். அதையெல்லாம் எவரும் பொருட் படுத்துவதே இல்லை.
இப்படி நீண்டு கொண்டே இது போகும். அடுத்த அடிப்படை உடை! ஏழைகள் இன்னமும் ஆடைக்காக அலைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நியாய விலைக்கடைகள் மூலம் வேட்டி, புடவை கொடுக்கவும் செய்கிறார்கள். தேவையற்றவர்களுக்கும் கொடுத்து நமது வரிப்பணத்தை வீணாக்குகிறார்கள்.
உடை என்று வருகின்றபோது, பள்ளிக் குழந்தைகளில் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் தெரியக்கூடாது என்பதற்காக யூனிஃபார்ம் ஆரம்பித்து வைத்தார்கள். அனைவரும் ஒரே விதமான, ஒரே வண்ண ஆடையை அணியச் செய்தார்கள். அது போலவே மதச் சின்னங்கள் அணிந்து வரவும் பல பள்ளிகள் அனுமதிப்பதில்லை. ஆனால் நியாயம் வழங்கும் நீதியரசர்கள் கூட தங்கள் மதத்தைத் தெரிவிக்கும் விதமாகப் போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பது நியாயமானதாகத் தெரியவில்லையே!
உறைவிடம் என்று வருகையில், அரசு, தனியார் என்று ஏகப்பட்டோர் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்ட உதவுகிறார்கள். அரசுத் திட்டங்கள் பலவற்றில் ஊழல் நடப்பதாக அவ்வப்போது செய்திகள் வந்தாலும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதாகவோ, குற்றங்கள் குறைவதாகவோ எந்தச் செய்தியுமில்லை. அதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம். நமது நாட்டில் ஒரு வழக்கு முடிவுக்கு வர சராசரியாக 15,20 ஆண்டுகள் ஆகிவிடுகின்றன. அப்படி இருந்தும், உப்பு, சப்பில்லாத காரணங்களைக் கூறி வழக்கு போடுவோரைத் தடுக்க, ஆரம்பத்திலேயே அவற்றை நிராகரிக்க நீதி மன்றங்கள் முன் வராதது ஏன் என்பது மில்லியன் டாலர் கொசின்!
இவை அனைத்துக்கும் அடித்தளமாக இருப்பது மக்களின் அறியாமையே! முந்தா நாள்தான் ரோடு ஷோவுக்குப் போய் 41 இன்னுயிர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டது. தெரிந்தும், கர்ப்பிணிகள், குழந்தைகளைக் கூட்டத்திற்கு அழைத்து வராதீர்கள் என்று அந்தத் தலைவரே வேண்டுகோள் விடுத்தும், குழந்தைகளுடன் கூட்டத்திறகுச் செல்லும் நமது அதி தீவிர ரசிகர்களை என்னவென்று அழைப்பது?
‘எலக்ஷன் முடியும் வரை ரோடு ஷோக்கள் நடத்தக் கூடாது!’ என்று நீதிமன்றங்கள் தாமாக முன் வந்து (suo motu) உத்தரவுகள் பிறப்பிக்கலாமே! கரூர் நிகழ்ச்சி ஒன்று போதுமே! யாரும் ஏன்? என்று கூடக் கேட்க முடியாதே!
மக்கள் நலன் கருதி இருந்த கட்சிகளெல்லாம் மாண்டு போய் விட்டதாகவே தோன்றுகிறது. எந்தக் கட்சிக்கும் எடுப்பான கொள்கைகள் இல்லை. அப்படியே இருந்தாலும், அவற்றை நிறைவேற்றுகின்ற தலைவர்கள் தற்போது இல்லை.
ஆட்சியைப் பிடித்துப் பதவி சுகத்தையும் பணச் சுகத்தையும் அனுபவிக்கவே இன்றைய கட்சிகள் முயல்கின்றன. தலைவர்கள் தங்களையும் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ளவே கூட்டணி போடுகிறார்கள். அப்பாவித் தொண்டர்கள் கொடி பிடித்தும்,கோஷம் போட்டுமே வாழ்வை இழக்கிறார்கள்.
‘நெஞ்சு பொறுக்குதில்லையே!இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்!’ என்ற முண்டாசுக்கவிஞனின் வரிகளே மனத்தை நிறைக்கின்றன.நெகிழச்செய்கின்றன.
‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு குறையுமில்லே’ என்று டாஸ்மாக் வாசல்களில் படையெடுத்து நிற்போரை எந்தக் கணக்கில் சேர்ப்பது?
பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சென்னையிலிருந்து லட்சக்கணக்கானவர்கள் தென் மாவட்டங்களுக்குச் செல்கிறார்கள். போதுமான ரயில்களையும், பஸ்களையும், விமானங்களையும் ஏற்பாடு செய்துதர வேண்டுவதும், நியாயமான கட்டணங்களை மட்டுமே வசூலிக்கச் செய்வதுந்தானே அரசுகளின் கடமை! கடந்துபோன ஆண்டுகளின் அனுபவம் கசப்பானவைதானே!
இவ்வருடம் என்ன நடக்கப் போகிறது? பெரும் பிரளயந்தானோ? ஏனெனில் இண்டிகோ சில நாட்கள் ஏமாற்றம் அளித்தபோதே கட்டணங்கள் விமானம் பறக்கும் உயரத்தையும் தாண்டி மேலே போய்விட்டன. இம்முறை நிலவைத் தொடுமோ?ம்! எல்லா அக்கிரமங்களையும் பார்க்கத்தானே நாம் இருக்கிறோம்!