விவாதங்களுக்கு மத்தியில் சொமேட்டோவின் புதிய டெலிவரி முறை!

Zomato new delivery system amid debate
Zomato new delivery system amid debate
kalki vinayagar
kalki vinayagar

ணையத்தின் வளர்ச்சியானது வளர வளர மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்து கொண்டேதான் இருக்கிறது. முன்பெல்லாம் மக்கள் உணவுக்காக உணவகங்களுக்குச் சென்று காத்திருப்பதுதான் வழக்கம். ஆனால், தற்போது அந்த நிலையானது முழுவதுமாக மாறி இருக்கிறது. நவீன காலத்திற்கு ஏற்றார்போல செயலிகளின் வசதிகளுடன் உணவையும்கூட ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கும் முறை அதிகரித்துக் காணப்படுகிறது.

சொமேட்டோ நிறுவனம்: நாட்டின் முன்னணி பிரபல உணவு டெலிவரி செயலிகளின் வரிசையில் முதலாவதாக இருப்பது சொமேட்டோ நிறுவனம்தான். 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனமானது இன்றளவும் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் CEO தீபிந்தர் கோயல். சொமேட்டோ நிறுவனம் ஒவ்வொரு முறையும் தன்னை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகவும் பல யோசனைகளையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த முறையும் சைவ உணவைச் சாப்பிடுவோருக்காக புதிதாக 'Pure Veg Fleet' டெலிவரி முறையை அறிமுகம் செய்துள்ளது.

ப்யூர் வெஜ் ஃப்ளீட்: சொமேட்டோ நிறுவனம் சைவ உணவுப் பிரியர்களுக்காக தற்போது 'Pure Veg Mode' மற்றும் 'Pure Veg Fleet' ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது. ‘ப்யூர் வெஜ் ஃப்ளீட்’ என்பது சைவ உணவகங்களின் மூலமாக மட்டுமே சைவ வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்கப்படும். இதற்காக சொமேட்டோ ஊழியர்கள் சிவப்பு நிறத்திற்கு பதிலாக பச்சை நிற சீருடை மற்றும் பச்சை நிற உணவுப் பெட்டியை எடுத்துச் செல்வார்கள். மேலும், இந்தத் தகவலை சொமேட்டோ நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல் தனது எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பின்னர் ஒரே நாளில் சொமேட்டோ நிறுவனம் பச்சை நிற முறையை கைவிட்டது. அதே சிவப்பு நிற சீருடை மற்றும் உணவுப்பெட்டி முறையில்தான் வாடிக்கையாளர்களுக்கு சைவ உணவானது வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது.

சொமேட்டோ சிஇஓ எக்ஸ் தளப் பதிவு: இந்த ப்யூர் வெஜ் ஆப்ஷன் குறித்து தீபிந்தர் கோயல் தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கியுள்ளார். அதில் அவர், "உலகிலேயே இந்தியாவில்தான் சைவ உணவு உண்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தங்கள் உணவு எப்படிச் சமைக்கப்படுகிறது, எப்படிக் கையாளப்படுகிறது என்பதில் அவர்கள் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். எனவே, அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப 100 சதவிகித சைவ உணவு விருப்பமுள்ள வாடிக்கையாளர்களுக்காக, சொமேட்டோ நிறுவனம் ‘Pure Veg Fleet’ உடன் ‘Pure Veg Mode’ஐ அறிமுகப்படுத்துகிறது.

இந்த ப்யூர் வெஜ் மோடில் சுத்தமான சைவ உணவை வழங்கும் உணவகங்கள் மட்டுமே இடம்பெறும். அசைவ உணவுப் பொருட்களை வழங்கும் நிறுவனங்களைத் தவிர்த்து, பிரத்தியேகமாக சைவ உணவுகளை மட்டுமே வழங்கும் உணவகங்களின் தேர்வு மட்டுமே இதில் சேரும்” என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, தனது இந்த நடவடிக்கை எந்த மத, அரசியல் விருப்பங்களுக்குமானது அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
அரை லட்சத்தை தொடும் தங்கம்... மீண்டும் புதிய உச்சம்!
Zomato new delivery system amid debate

மக்களின் ரெஸ்பான்ஸ்: இவரது இந்த சைவ முறை அறிமுகம், இரு தரப்பு விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. ஒரு பக்கம் இதற்கான ஆதரவு பெருகினாலும்கூட, மறுபக்கம் அதற்கான எதிர் விவாத கருத்துகளும் மக்களால் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிடப்பட்டு வருகின்றன.

எப்போது நடைமுறைக்கு வரும்?: சொமேட்டோவின் சிஇஓ இது குறித்து, “இந்த ப்யூர் வெஜ் டெலிவரி ஆப்ஷன் அடுத்த சில வாரங்களில் நாடு முழுவதும் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும். எங்கள் வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது மற்றும் இந்த நாட்டிற்குச் சிறந்த முறையில் சேவை செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com