
மேலை நாடுகளில் தொன்மையான பாரம்பரிய புராதான சின்னங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் நம் நாடுகளில் சற்று குறைவுதான். பழைமை வாய்ந்த ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முற்பட்ட சின்னங்கள் நம் நாட்டில் அதிகம் இருந்தாலும் கவனிப்பாரற்று கிடைக்கிறது என்பது உண்மைதான் .அந்த வகையில் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட சங்ககிரி கோட்டை பற்றி காண்போம்.
சேலம் மாவட்ட எல்லையான சங்ககிரி வட்டத்தில் சேலத்திலிருந்து 35 கிமீ வடக்கிலும் ஈரோட்டில் இருந்து 20 கிமீதொலைவில் உள்ள சங்கரி துர்க்கம் என்ற மலையின் மேல் காணப்படும் கோட்டைதான் சங்ககிரி கோட்டை. விஜயநகர மன்னர்களால் 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோட்டையின் உயரம் 5 கிமீ. தமிழகத்தின் உயர்ந்த மலைக்கோட்டையான இங்கு அடிப்பகுதியில் இருந்து உச்சி வரை 9 வாயில்கள் உள்ளன.
இந்த கோட்டை சங்கு போன்ற வடிவம் கொண்டதால் சங்ககிரி என்றும் இந்த கோட்டையில் ஆள் இறங்கும் குழி, தோல் உரிச்சான் மேடு, தொங்கவிட்டான் குகை, உரிட்டிவிட்டான் பாறை ஆகியவற்றில் தண்டனை பெறுபவர்கள் சங்கிலியால் கட்டப்பட்டு கொல்லப்படுவதால் சங்ககிரி என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையினரின் பாதுகாப்பில் உள்ள கோட்டையின் உச்சியில் சென்ன கேசவ பெருமாள் கோவிலும் மலை அடிவாரத்தில் சோமேஸ்வர சுவாமி கோவில் ஒன்றும் உள்ளது. சேலத்தின் முக்கிய வரலாற்று இடமான சங்ககிரி கோட்டையில் வீரபத்திரர் கோவில், வரதராசப் பெருமாள் கோவில் , தஸ்தகீர் மகான் தர்கா ,கெய்த் பீர் மசூதி போன்ற வழிபாட்டுத் தலங்களும் உள்ளன.
சங்ககிரி மலையில் கட்டப்பட்ட இக்கோட்டை பராமரிப்பு இல்லாமல் தற்போது சிதிலமடைந்துள்ளது .கோட்டையை ஆட்சி செய்த தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்டார் என்றும் வரலாறு கூறுகிறது. இப்பகுதிகளில் அதிகப்படியான மூலிகைகளும் இருக்கின்றன.
தோராயமாக 5 ஏக்கர் பரப்பளவு உள்ள மலை உச்சியில் பாதி இடம் வெறும் பாறைகளால் ஆனது தான் .இந்த பாறையை ஒட்டி கீழே ஒரு தண்ணீர் பாலி என்ற மழைநீர் சேகரிப்பு திட்டம் இருக்கிறது.
இதற்கு அருகில் இருக்கும் வரதராஜ பெருமாள் கோவிலில் வருடத்தில் புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் மட்டும் பூஜை நடைபெறும் மற்ற நாட்கள் கோவில் பூட்டியே காணப்படும்.
இதற்கு சற்று தொலைவில் முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலம்அமைந்திருக்கிறது. இதற்கு அருகில் உள்ள உருட்டி விட்டான் பாறையில் தான் ஆடி 18 அன்று ஆங்கிலேயர்கள் அனைவரும் பார்க்குமாறு தீரன் சின்னமலையை தூக்கிலிட்டு கொன்றனர் .இன்று வரை தூக்கு மேடை அங்கு அமைந்திருக்கிறது.
இதற்கு கீழே ராணி குளிக்கும் இடமும், விசாலமான தானிய கிடங்கு கற்கள் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. அதற்கு அடுத்து மூலவர் இல்லாமல் புதர் மண்டியுள்ள கோவில் உள்ளது .இந்தக் கோவிலில் முப்பரிமாண சிலையும் அதற்கு அருகில் பெரிய குளம் போன்ற அமைப்பும் தென்படுகிறது. போருக்குப் பின்னால் வரும் ஒரு வகையான நிசப்தம் இந்த கோட்டை முழுவதும் உள்ள சின்னங்களில் பரவியுள்ளதை நம்மால் உணர முடிகிறது.
சில பேருக்கு மேல் நிற்க முடியாத பெருமாள் கோவிலில் முகப்பின் கீழே பள்ளம் உள்ளது .அந்தப் பாறை மேல் அடுக்கப்பட்ட கற்களின் மேல் தான் ஏற வேண்டும். கோவிலின் பின்புறம் பாண்டியர்களின் மீன் சின்னத்தையும் கோவிலின் கீழே ஒரு லிங்கம் போன்ற ஒரு உருவம் பாறையில் செதுக்கப்பட்டு அதற்கு அருகில் உருது மொழியில் எழுதி இருக்கிறது. இதற்கு கீழே இருக்கும் மடப்பள்ளி இன்னும் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சங்ககிரி மலைக்கோட்டை பண்டைய மன்னர்களின் வாழ்வியலையும் கட்டிடக்கலையையும் திறம்பட எடுத்துரைப்பதாக இன்றுவரை காட்சி தருகிறது. இந்த பொக்கிஷத்தை பாதுகாக்க அனைவரும் முற்பட வேண்டும் என்பதுதான் வரலாற்று ஆய்வாளர்களின் கோரிக்கையாக உள்ளது.