ஜனவரி 5ம் தேதி தொடங்கிய இந்த ஆண்டிற்கான ரஞ்சி ட்ராஃபி தொடரில் தமிழ்நாடு அணியில் அறிமுகமானார் பூபதி வைஷ்ண குமார். தனது இந்த அறிமுக ஆட்டத்திலேயே 67 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமானார்.
இடது கை பேட்ஸ்மேன் மற்றும் வலது கை சுழற்பந்து வீச்சாளரான இந்த பூபதி வைஷ்ண குமார் யார்?
பூபதி 2002ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சாதாரண எலக்ட்ரீஷியன் மற்றும் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். இவர் தனது சிறு வயதில் தனது நண்பர்களுடனும் அப்பாவின் நண்பர்களுடனும் கிரிக்கெட் விளையாடி தனது கிரிக்கெட் பயணத்தை விளையாட்டாக ஆரம்பித்தார். ஆனால் அப்போது அவருக்கு தெரியவில்லை இவ்வளவு தூரம் கிரிக்கெட் அவரை அழைத்துச் செல்லும் என்று.
பூபதி வைஷ்ண குமார் தனது 13 ஆவது வயதில் திண்டுக்கல்லில் ஒரு கிரிக்கெட் அகடாமியில் சேர்ந்து முறையாகப் பயிற்சிப்பெறத் தொடங்கினார்.
பின் 2016ம் ஆண்டு மாவட்டங்களுக்கிடையே நடைப்பெறும் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாக களமிறங்கினார்.
16 வயதுக்குட்பட்டவர்களுக்கான இரண்டு நாள் கிரிக்கெட் போட்டி விழுப்புரம் மாவட்டத்திற்கும் திண்டுக்கல் மாவட்டத்திற்கும் நடைபெற்றபோது, இப்போட்டியில் திண்டுக்கல் சார்பில் விளையாடிய பூபதிக்கு தன் திறமையை நிரூபிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆம்! அப்போட்டியில் 328 ரன்கள் எடுத்த பூபதி அவரது கிரிக்கெட் பயணத்தில் மறக்கமுடியாத ஒரு சாதனையை அன்று படைத்தார். அதேபோல் PR தேவர் ட்ராஃபி தொடரில் திண்டுக்கல் மாவட்டத்திற்கும் தூத்துக்குடி மாவட்டத்திற்கும் நடைபெற்ற போட்டியில் பூபதி இரட்டை சதம் அடித்து எதிரணியை தெறிக்கவிட்டதோடு, தன் அணியின் வெற்றிக்கு காரணமானார்.
தனது 17 வயதில் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டியில் அறிமுகமானார். பின்னர் அவர் விளையாடிய ஒவ்வொரு போட்டியும் மறக்கமுடியாத ஒன்றாகவே அமைந்தது.
ஆம்! 2021ம் ஆண்டு சூரத்தில் 19 வயதுக்குட்பட்டவர் களுக்கான தொடரில் தமிழ்நாடு அணியும் மத்திய பிரதேச அணியும் நேருக்கு நேர் மோதியது. அந்த போட்டியில் தமிழ்நாடு அணி சார்பாக பேட்டிங் செய்த பூபதி 101 ரன்கள் குவித்து அசத்தினார். சூரத்தில் நடைபெற்ற அதே தொடரின் மற்றொரு போட்டியில் 170 ரன்கள் எடுத்து சென்ற இடமெல்லாம் சதமடித்து தன் பெயரைப் பதித்தார்.
2022ம் ஆண்டில் நாயுடு ட்ராஃபி என்ற 25 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டியில் மணிப்பூர் அணியும் தமிழ்நாடு அணியும் நேருக்கு நேர் மோதின. தமிழ்நாடு சார்பாக பேட்டிங் செய்த பூபதி 114 ரன்கள் எடுத்து மணிப்பூரை ஒரே ஆளாய் தோற்கச் செய்தார்.
இப்படி அண்டர் 14, அண்டர் 16, அண்டர் 19, அண்டர் 25 என அனைத்திலும் பல சதங்களையும் அரை சதங்களையும் அடித்த பூபதிக்கு ரஞ்சி ட்ராஃபியில் விளையாடும் வாய்ப்பு காத்துக்கொண்டிருந்தது. இதன்படி இந்த ஆண்டு ரஞ்சி ட்ராஃபியில் தமிழக அணியில் அறிமுகமானார் பூபதி.
ஜனவரி 18ம் தேதி ரயில்வே அணிக்கு எதிராக கோயம்பத்தூரில் நடைப்பெற்ற போட்டியில் முதன்முதலில் பூபதி களமிறங்கினார். தனது அறிமுக ஆட்டத்திலேயே 67 ரன்கள் எடுத்து அனைவரின் கவனத்தையும் தன் வசம் திருப்பியுள்ளார், பூபதி வைஷ்ண குமார்.
சென்ற இடமெல்லாம் சதங்கள், அரைசதங்கள் அடிக்கும் பூபதிக்கு பிடித்த பேட்டிங் ஸ்டைல் கவர் ட்ரைவ் மற்றும் பிடித்த பவுலிங் ஸ்டைல் ஆஃப் ஸ்பின்.
பூபதி ஒவ்வொரு படிக்கட்டாக ஏறி, பல மைல் கற்களைத் தாண்டி ரஞ்சி வரை வந்திருக்கிறார் என்பது பெரும் சாதனை. அவரின் இந்த வளர்ச்சியைப் பற்றி கல்கி ஆன்லைன் வாசகர்கள் சார்பாக அவரிடம் கேட்டபோது, அடுத்து, இந்திய அணிதான் இலக்கு” என்று தன் லட்சியத்தை வெளிப்படுத்தினார்.
தடை கற்களைத் தாண்டி, வாழ்வின் இலக்கை நோக்கி ஓடும் இந்த போட்டி நிறைந்த உலகில், லட்சியத்தை மட்டும் நினைவில் கொண்டு ரஞ்சி ட்ராபி வரை வளர்ந்த பூபதி வைஷ்ண குமாருக்கு இந்திய அணியில் சேர இன்னும் ஒன்றிரண்டு படிகட்டுகளே உள்ளன.
மைதானத்தின் பிட்சை கண்காணித்தப்பின் களமிறங்கும் வீரர்களுக்கு நடுவில், பிட்சிற்கு ஏற்றவாரு தன் ஸ்டைலை மாற்றி அடிக்கும் பூபதி வருங்காலத்தில் இந்திய அணியில் தனக்கான தனி இடத்தை கட்டாயம் பிடிப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.