டாடாவின் 11 ஆண்டுகள் தோழன்! மனதை நெகிழ வைக்கும் உண்மை கதை.....

Ratan Tata with kowa dog
Ratan Tata with kowa dog
Published on

உசுரே நீதானே நீதானே நிழலா உன் கூட நானே...11 ஆண்டுகால நட்பின் பிரிவு.. அனைவரின் நெஞ்சங்களையும் வென்ற மாமனிதன் ரத்தன் டாடாவின் வாழ்க்கையில் நிகழ்ந்த நெகிழ்ச்சியான உண்மை கதை இது.

இந்திய பொருளாதாரத்தின் தூண்களின் ஒன்றாக அனைவராலும் போற்றப்படும் டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா (86), உடல் நலக்குறைவு காரணமாக மும்பையில் அக்டோம்பர் 9 அன்று இரவு காலமானார். இந்திய தொழில்துறையில் சிறந்து விளங்கிய ரத்தன் டாடாவின் இறப்பு உலகையே சோகத்தில் ஆழ்த்தியது.

மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ரத்தன் டாடா, தொழில் அதிபர் மட்டுமல்ல. சமூக சேவை நிறைந்த மாமனிதர். தனது வருமானத்தில் கிடைக்கும் பாதிபணத்தை அறக்கட்டளைகளுக்கு பயன்படுத்தியவர். இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த இவர், செல்லப்பிராணிகளுக்கு மிகவும் பிடித்த நபராகவும், செல்லப்பிராணிகள் மீது அலாதி பிரியம் கொண்டவராகவும் திகழ்ந்தவர்.

ஒரு முறை ரத்தன் டாடா விடுமுறையை செலவிட  கோவா சென்றபோது, அவரை ஒரு தெரு நாய் பின் தொடர்ந்து வந்துள்ளது. அந்த செல்லப்பிராணியின் பாசத்தைக் கண்டு அதை அவர் வளர்க்க முடிவு செய்துள்ளார். கருப்பு, வெள்ளை நிறம் கலந்த அந்த நாய்க்கு 'கோவா' என பெயர் சூட்டி, அதனை மும்பைக்கு கொண்டு வந்து வளர்க்க தொடங்கியிருக்கிறார். 

அதன் பின்பு, அவர் எங்கு சென்றாலும், 'கோவா'- வும் அவருடனே சென்று விடுமாம். கோவாவை 'என் அலுவலக தோழன்' என்று தான் டாடா கூறுவாராம். அந்த அளவிற்கு அவர் மனதில் தனி இடம் பிடித்துள்ளது கோவா'. அவரது இறுதி ஊர்வலத்தில் கூட, அனைவரின் மனதையும் 'கோவா' நெகிழ வைத்தது.

இதையும் படியுங்கள்:
பெண்ணைப் பெற்றவர்களுக்கு ஒரு விண்ணப்பம்...
Ratan Tata with kowa dog

ரத்தன் டாடாவின் உடல் இறுதிச் சடங்குகளுக்காக தெற்கு மும்பையில் உள்ள தேசிய கலை நிகழ்ச்சிகளுக்கான மையத்தில் (NCPA -National Centre for Performing Arts) வைக்கப்பட்டிருந்தது. அப்போது கோவாவும் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளது. அதோடு, அவரது சடலம் வைக்கப்பட்டிருந்த இடத்தை விட்டு நகராமல் அருகிலே சோகமாக இருந்துள்ளது.

அதனுடைய பராமரிப்பாளர், "11 ஆண்டுகளாக 'கோவா' எங்களுடன் உள்ளது. இதன் மீது டாடா அதிக அன்பு வைத்திருந்தார். அவர் மரணம் அடைந்த நாளில் இருந்து 'கோவா' எதுவும் சாப்பிடவில்லை,'' என்று  கூறியிருக்கிறார்.

டாடா அறிவுறுத்தலின் படி, மும்பையில் உள்ள டாடா குழும தலைமையகமான 'மும்பை ஹவுஸ்', தாஜ் ஓட்டல் உட்பட அனைத்து டாடா நிறுவன இடங்களிலும் தெரு நாய்களுக்கு உணவு அளிக்கப்படுமாம். அது மட்டுமில்லாமல், இவர் தெரு நாய்களை தத்தெடுத்தும், வளர்த்து வந்துள்ளார்.

2018ல் பிரிட்டன் அரச குடும்பம் இவரது மனிதாபிமான சேவைக்காக வாழ்நாள் சாதைனையாளர் விருது வழங்க முன்வந்துள்ளது. அந்த சமயத்தில் டாடா வளர்த்த 'டிட்டோ, டாங்கே' என இரு ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாய்களில் ஒன்றுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதால், அதை கவனிப்பதே முக்கியம் என கூறி, விருது நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளார் டாடா. 2020ல் தனது 'மும்பை ஹவுசில்' தெரு நாய்களுடன் தான் தீபாவளி பண்டிகையை கொண்டாடியிருக்கிறார்.

இந்த அளவு செல்லப்பிராணிகள் மீது அலாதி பிரியம் கொண்டவரான ரத்தன் டாடா, மும்பையில் செல்லப்பிராணிகளுக்காக 98,000 சதுர அடி பரப்பளவில் 200 படுக்கை வசதிகளுடன் ரூ.165 கோடியில் மருத்துவமனை கட்டியுள்ளார். அங்கு  24 மணி நேரமும் நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

"என் உயிர் உள்ள வரை நாய்கள் மீதான பாசம் தொடரும்" என்று ரத்தன் டாடா ஒருமுறை கூறியிருக்கிறார். அதேபோல், அவர் சேவையும் இருந்துள்ளது. இப்படி எல்லா விதங்களிலும் முன்னுதாரணமாக திகழ்ந்த மாமனிதனின் உயிர், நம்மை விட்டு பிரிந்தாலும் அவரது செயல்கள் மூலம் அனைத்து நெஞ்சங்களிலும் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார்.....

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com