ரீல்ஸ் போடும் கலாசாரம்...

Reels addiction and eye problem
Reels addiction and eye problemcredit AI Image
என்.எஸ்.வி.குருமூர்த்தி

ஐம்பது வருடங்களுக்கும் மேலான எழுத்துலக அனுபவம். 1970 முதல் சிறு துணுக்குகள் எழுதி, கல்கி, குமுதம், விகடன், சாவி, இதயம் பேசுகிறது, குங்குமம், தினமணி கதிர், காமதேனு, இந்து தமிழ் திசை இவற்றிலும், சிறுவர்மணி இதழில் கடந்த 8 வருடங்களாக சுமார் 90 நாடகங்கள் அரங்கம் என்ற பகுதியிலும் பிரசுரமாகி உள்ளன. கல்கி ஆன்லைனில் இது வரை சுமார் 45 கதைகள், கட்டுரைகள் வெளியாகி உள்ளன. ஒரு cartoon படத்துக்கு வசனம் எழுதும் போட்டியில் (இடம் சோழா ஹோட்டல் function - Overseas SANMAR...குழுமம்) ரைட்டர் சுஜாதா அவர்கள் கையால் இரண்டாம் பரிசு ஒரு விழாவில் கிடைத்தது குறிப்பிடத்தக்கது .

Updated on: 
Kalki strip
Kalki strip

திருக்குறளுக்கு உள்ள சிறப்பு என்ன? இரண்டே அடிகளில் ஒரு கருத்து, நீதி, வாழ்வு முறை, தத்துவம் இவற்றைச் சொல்வதே ஆகும். 'சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்' என்பது அதன் பாணி. இப்போது இணையப் பொழுதுபோக்கிலும் அந்தச் சுருக்கம் வந்துவிட்டது; அவைதாம் ரீல்கள் (Reels).

ரீல்கள் போடுவது என்பது ஒரு புது ஃபேஷன். இந்த ரீல் போடும் கலாசாரம் பிறந்த வருடம் 2020. பொதுவாக ரீல்களின் சராசரி நீளம் 15 வினாடிகள். அதற்கு மேலும் 3 நிமிடம் வரை போடலாம்; ஆனால், பார்க்கும் பார்வைகளின் எண்ணிக்கை குறையும்.

* தீபிகா படுகோன் நடித்த ஹில்டன் ஹோட்டல் விளம்பர ரீல் 19 கோடி பார்வைகளைப் பெற்று, உலகில் அதிகம் பார்க்கப்பட்ட ரீலாக உள்ளது.

அந்தக் காலத்தில் 'ரீல்' என்றால் சினிமா ரீலைக் குறிக்கும். ஒரு ரீல் சினிமா என்பது 1,000 அடி நீளம்; அதில் 11 நிமிடம் சினிமா ஓடும். சராசரியாக 2 ½ மணி நேரம் ஓடும் ஒரு சினிமா 14 ரீல்கள் அளவில் இருக்கும். 1963-ல் வெளியான 'கிளியோபாட்ரா' ஆங்கில சினிமா 4 மணி 8 நிமிடம் ஓடும்; அதன் நீளம் 27 ரீல்கள்!

எம்.கே. தியாகராஜ பாகவதரின் 'ஹரிதாஸ்' சினிமா 12 ரீல்களில் எடுக்கப்பட்டது; 117 நிமிடங்கள் ஓடும். 1944 தீபாவளி ரிலீஸான அது, சென்னை பிராட்வே தியேட்டரில் 133 வாரங்கள் ஓடிச் சாதனை படைத்தது.

மும்பையில் ஷாருக் கானின் 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே' திரைப்படம் 1995-ல் ரிலீஸாகி, 30 வருடங்களாகத் தொடர்ந்து மராத்தா மந்திர் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது.

2012-ல் வெளியான 'லாஜிஸ்டிக்ஸ்' என்ற சினிமா மொத்தம் 857 மணி நேரம் ஓடும்; இது ஒரு பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது.

ஒரு படம் தயாரிக்க அதிக காலம் எடுத்துக்கொண்டது 'Mad God' - முப்பது வருஷம் அதை எடுத்தார்கள்!

'The Other Side of the Wind' எடுக்க 40 வருடங்கள் ஆனது.

'Resan' என்ற படம் 14 ½ மணி நேரம் ஓடும். அதே சமயம், முக்கால் மணி நேரம் ஓடும் 'ஷெர்லக் ஜூனியர்', 68 நிமிடங்கள் ஓடும் 'தி கிட்' ஆகியவை ஹிட் அடித்த குறைந்த நேர சினிமாக்கள்.

நவீன கால ரீல்கள் எடுத்து இணையத்தில் போட விஷயமோ, வயதோ எதுவும் அவசியமில்லை. தோசைக்கு மாவு அரைப்பதைப் போடலாம், தோசை சுடுவதைப் போடலாம், அந்தத் தோசைக்கல்லை விளக்குவதைப் போடலாம். குக்கிங் டிப்ஸ், கிளீனிங் டிப்ஸ், புடவை கட்ட, கோலம் போட, செடி நட, செடி பிடுங்க என எல்லாம் ரீல்ஸ்தான்!

ரீல்ஸ் பார்ப்பதில் ஒரு சௌகரியம் - பிடிக்காவிடில் அடுத்த வினாடியே தள்ளி விடலாம். பலரும், "தயவு பண்ணி தள்ளி விடாம பாருங்க" என்ற கோரிக்கையுடன் போடும் ரீல்களே முதலில் தள்ளப்படும். இதில் காமெடி ரீல்கள்தாம் அதிகம்.

ரீல்ஸ் போட ₹1,83,000 வரை விலை உயர்ந்த கேமராக்கள் உள்ளன. எனினும், ரீலின் சப்ஜெக்ட் நன்றாக இருந்தால் சாதாரண ஸ்மார்ட்போன்களே போதும்.

இந்த ரீலைப் போட்டுவிட்டு எத்தனை பேர் பார்த்தார்கள், எத்தனை பேர் லைக் போட்டார்கள், என்ன விமர்சனம் வந்தது எனப் பின்தொடர்வது ஒரு புது வியாதி.

மலை முகட்டில் அல்லது ஓடும் ரயில் கதவுக்கருகில் தொங்குவது போன்ற அபாய விளையாட்டு ரீல்கள் கொடுமையிலும் கொடுமை.

நீங்கள் எதை ரசிக்கிறீர்கள் என்பதை AI (Artificial Intelligence) மூலம் கணக்கிட்டு, அது சம்பந்தமான ரீல்களைத் தொடர்ச்சியாக அளிப்பது அந்த ஒளிபரப்பாளர்களின் வேலை. உங்கள் கவனம் போனை விட்டு அங்குமிங்கும் போகக் கூடாது என்பதே அவர்களின் நோக்கம்.

அந்த இணைய நிறுவனங்களுக்கும் கண் மருத்துவர்களுக்கும் ஒரு நல்ல புரிதல் (Understanding) இருக்கலாம் என்பது என் நீண்ட நாளைய சந்தேகம்! ஏனெனில், சின்ன ஊர்களிலும் இன்று மூன்று நான்கு கண் மருத்துவமனைகள் வந்துவிட்டன; அங்கே கூட்டம் அலைமோதுகிறது! நிமிஷத்திற்கு ஒரு நோயாளியை டோனோமீட்டர் (Tonometer), ஸ்லிட் லேம்ப் (Slit Lamp) வைத்துப் பரிசோதிக்கிறார் டாக்டர். பீஸ், சொட்டு மருந்துகள், கண்ணுக்குள் வைக்கும் லென்ஸ்கள் எனப் பத்தாயிரக்கணக்கில் செலவு வைக்கும்.

இதையும் படியுங்கள்:
வாக்கும்… வாக்குச் சேகரிப்பும்… நாமினேஷனும்!
Reels addiction and eye problem

ரீல்ஸ் போட வயது வித்தியாசம் இல்லாதது போலவே, கண் நோயாளிகளுக்கும் வயது 6 முதல் 90 வரை இருக்கிறது. கண் மருத்துவமனையிலும் பொடிசுகள் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருக்கும்!

கண்ணாடி விற்பனை வெகு ஜோர். அக்காலத்துக் கண்ணாடிகள் மூக்கில் அழுத்தும்; இப்போது லைட் வெயிட் கண்ணாடிகள் வந்துவிட்டன. போட்டிருப்பதே தெரியாது; சமயத்தில் கண்ணாடியைப் போட்டிருக்கிறோமா இல்லையா என்ற சந்தேகம் வரும்படி அவை மெல்லியதாக இருக்கின்றன. அம்மணிகள் கண்ணாடியைத் தலையில் செருகியபடி கணவரிடம், "என் கண்ணாடி எங்கேன்னு கொஞ்சம் தேடுங்களேன்?" என்று கேட்பது இப்போது சகஜமாக நடக்கும் ஒன்று!

logo
Kalki Online
kalkionline.com