ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, பல்வேறு நாடுகளின் நாடாளுமன்றங்களில் மகளிருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். உலக அளவில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் பெண்களின் அரசியல் பங்கேற்பு அதிகமாக உள்ளது.
தற்போது இந்தியாவில் பெண்கள் தங்கள் கல்வியாலும், அது தந்த ஆற்றலாலும் பெரிய அளவில் பொதுவாழ்வில் தங்களுக்கான வாய்ப்புகளை பெற்று வருவதை பார்க்கமுடிகிறது. எனினும் மக்களவை, சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவற்றில் அவர்கள் இடஒதுகீட்டிற்காக இன்னும் அவர்கள் போராடத்தான் வேண்டியுள்ளது. மக்களவையிலும், மாநில சட்டமன்றங்களிலும் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்கவேண்டும் என்னும் கோரிக்கை நெடுநாளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதும் ஒரு வகையான சமூக அநீதியே ஆகும் என்று சொல்லலாம்.
பெண்களின் மக்களாட்சி பிரதிநிதித்துவம் தற்போதைய மக்களவையில் 82ஆக உள்ளது. இது மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் 15 விழுக்காடு ஆகும். இது19 மாநில சட்டமன்றங்களில் 10%க்கும் குறைவாகவே உள்ளது.
இம்மசோதா மூலம் 543 மக்களவை இடங்களில் 181 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றங்களுக்கு இந்த ஒதுக்கீடு கிடைக்காது.
அன்றைய மத்திய அமைச்சர் மார்கரெட் ஆல்வா தலைமையில் 1987-ம் ஆண்டு ராஜீவ் காந்தி தலைமையிலான அரசு 14 பேர்கொண்ட குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழு ஏராளமான பரிந்துரைகளை அரசுக்கு அளித்தது. அதையடுத்து, உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து நிலைகளிலும் மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு உறுதிசெய்யப்பட்டது.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை 1996-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அதற்கு கட்சி எல்லைகளைக் கடந்து ஆதரவு கிடைத்தது. ஒரே நாளில் அந்த மசோதாவை ஏகமனதாக நிறைவேற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் முயன்றனர். மீண்டும் 1996-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நிறைவேற்றப்படவில்லை.
1998-ம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சி அரசு வந்த பிறகு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பாரதீய ஜனதாகட்சித் தலைவர் சுமித்ரா மகாஜன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை அறிமுகப்படுத்தக் கோரி நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தனர். அந்த ஆட்சியிலும் நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்ய முயன்றபோது, ஆர்.ஜே.டி பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேந்திர பிரகாஷ் யாதவ், அஜித் குமார் மேத்தா ஆகியோர் மசோதாவின் நகல்களை கிழித்தெறிந்தனர். அவர்களின் செயலுக்கு லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.
வாஜ்பாய் மீண்டும் பிரதமரான பிறகு1999-ல் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதையடுத்து, 1999-ம் ஆண்டு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின்போது, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை சட்ட அமைச்சர் ராம் ஜெத்மலானி அறிமுகப்படுத்தினார். அதற்கு, முலாயம் சிங் யாதவ், ரகுவன்ஷ் பிரசாத் சிங் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இம்மசோதாவை 2008-ம் ஆண்டு மே 8-ம் தேதி பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள், சட்டம், நீதிக்கான நிலைக்குழுவுக்கு அனுப்பியது. நிலைக்குழு தனது அறிக்கையை 2009-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி அளித்தது. மன்மோகன் சிங் அமைச்சரவை 2010-ம் ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதி மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா மார்ச் 9-ம் தேதி மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளுக்கு உள்ளேயும், அமைச்சரவைக்கு உள்ளேயும் கருத்து வேறுபாடுகள் இருந்ததால், மக்களவையில் மசோதா கொண்டுவரப்படவில்லை.
மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவோம் என்று 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வாக்குறுதி அளித்தது. ஆனால், தேர்தலில் வெற்றிபெற்ற பா.ஜ.க., அந்த ஐந்தாண்டு காலத்தில் மகளிர் இட ஒதுக்கீடு பற்றிய பேச்சையே எடுக்கவில்லை. 2019 நாடாளுமன்றத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்த போதும் பா.ஜ.க., மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வரவில்லை.
முதலில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும். பின்னர் மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகு தொகுதி மறுசீரமைப்புப் பணி நடைபெறும்.
கடந்த 27 ஆண்டுகளாக இழுபறியில் வைக்கப்பட்டுள்ள இம்மசோதாவுக்கு விரைவில் விடியல் பிறக்க வேண்டும். அப்போதுதான், அதிகமான பெண் மக்கள் பிரதிநிதிகளின் குரல் பெண்களின் நலனுக்காக மக்களைவையிலும், மாநில சட்ட மன்றங்களிலும் ஒலிக்கும். பெண்களின் வாழ்வில் ஒளி பிறக்கும். சமுதாயத்தில் சரிபாதியாக உள்ள பெண்கள் மூன்றில் ஒரு பங்கிலான சமூக அதிகாரத்தை விரைந்து பெற வேண்டும். இதற்காக பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் சேர்ந்து போராட வேண்டும். போராடினால்தான் எதையும் பெற முடியும். இதுதானே காலத்தின் கட்டாயம். நாடும், வீடும் வளம் பெற மலரட்டும் மகளிருக்கான இட ஒதுக்கீடு என்பதே சமூக ஆர்வலர்களின் உடனடி எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.