US Election 2024: Part 1 - அமெரிக்க அதிபர் தேர்தல் குழப்பங்கள்!

US Election 2024
US Election 2024
Published on

அறிமுகம்:

அமெரிக்க வரலாறிலேயே, அதிபராகப் போட்டியிட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் (President of the United States of America) வேட்பாளர், அச்சமயத்தில் அதிபராக இருந்து, தனது கட்சி கொடுத்த அழுத்தத்தால் போட்டியிலிருந்து விலகுவது இதுவே முதல் தடவை. அவருக்குப் பதிலாக அவரது கட்சி சார்பாகப் போட்டியிடும் அமெரிக்கத் துணை அதிபர் (Vice President of USA) கமலா ஹாரிஸ், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்பது இன்னும் வியப்புதானே!

ஜோ பைடன் குழப்பம்:

அதிபர் தேர்தலுக்குப் போட்டியிட்ட ஜோ பைடனுக்கும் (Joe Biden) 81 வயது (20, நவம்பர் 1942ல் பிறந்தவர்), போட்டியிடும் டானல்ட் ட்ரம்ப்புக்கும் (Donald Trump) 78 வயது (14, ஜூன் 1946), மூன்றரை ஆண்டுகள் வித்தியாசம். இருவருமே மிகவும் வயதானவர்களே! ஆகவே,வரும் தேர்தலில் வெற்றிபெறுபவர் 2025, ஜனவரி 20 தேதி பதவியேற்று, நான்காண்டுகள் கழித்துப் பதவி முடியும்போது, ஜோ பைடனுக்கு 87 வயதும், டானால்ட் ட்ரம்புக்கு 83 ½ வயதும் ஆகிவிடும்!

இருவருமே மிகவும் வயது முதிர்ந்தவராக இருப்பதால், மிகவும் கடுமையான அதிபர் பதவியைச் சரிவர நிறைவேற்ற இயலுமா என்ற கேள்வி எழுகிறது.

ஆயினும், ஒரு மாதம் முன்பு சி.என்.என். ஊடகம் நிகழ்த்திய -- இருவருக்கும் நடந்த விவாதத்தில் ஜோ பைடன் சரிவரப் பதிலளிக்காமல் தடுமாறியது, டெமாக்ரடிக் கட்சியில் பலபேருக்கும், வாக்காளருக்கும் பீதியைக் கிளப்பிவிட்டது. ஜோ பைடன் தேர்தலில் போட்டியிடக்கூடாது என பல செனட்டர்களும், பிரதிநிதிகளும், நிதி உதவிசெய்வோரும் குரல் எழுப்பினர். நிதி உதவியும் கணிசமாகக் குறைந்து வற்றிப்போனது. கட்சியைச் சேர்ந்த பெருந்தலைவர்கள், ஜோ பைடன், டானால்ட் ட்ரம்பை வெல்ல வாய்ப்பே இல்லை என்பதை எடுத்துரைத்து அவரை விலக வற்புறுத்தினர். மொத்தத்தில் பெரும்பான்மை வாக்குகள் பெற்றாலும், தேர்தல் கல்லூரி ஓட்டுகள் குறைந்துவிடும் என்பதே அந்தக் கணிப்பு விவரம்.

(பெரும்பான்மை வாக்குகள் பெற்றவர், தேர்தலில் வெற்றிபெறாமல் எப்படிப் போகமுடியும்? தேர்தல் கல்லூரியா? அப்படி ஒன்று எங்கு இருக்கிறது என்ற குழப்பம் ஏற்படுவது இயல்பே. அதுபற்றி அடுத்துவரும் அத்தியாயங்களில் காணலாம்).

சில மாநிலங்களில் ஜோ பைடன் அதிக வாக்கு பெறுவது திண்ணம். ஆனால், அவரது வயது, விவாதத்தில் தடுமாறியது, பின்பு சில ஊடகங்களில் அவர் அளித்த பதில் திருப்தி அளிக்காதது... மதில்மேல் பூனை மாதிரியான மாநிலங்களில் அவரது செல்வாக்கை மிகவும் குறைத்தது. அந்த மாநிலங்களில் அவர் தோற்றால், அவருக்குத் தேர்தல் கல்லூரி வாக்குப் பெரும்பான்மை கிட்டாது போய்விடும்..

இதையும் படியுங்கள்:
"'ஆக்ஷன்' என்றதும் கடல்கூட நடிக்கத் தயாராகிவிட்டது!" - சிம்பு தேவன் நேர்காணல்!
US Election 2024

ஆகவே, மொத்தத்தில் பெரும்பான்மை வாக்குகள் பெற்றாலும், கட்டாயம் அவர் தோற்றுவிடுவார் என்பதே அக்கணிப்பு. தவிரவும், அவரது செல்வாக்கு குறைவதால், அந்த மாநிலங்களில் போட்டியிடும் டெமாக்ரடிக் கட்சி வேட்பாளர்களும் தோல்வி அடைந்து விடுவர். அதனால், அதிபர் பதவி மட்டுமல்லாது, செனட், பிரதிநிதி சபையிலும் பெரும்பான்மை போய், டானால்ட் ட்ரம்ப்பின் விருப்பப்படியே அனைத்தும் அடுத்த நான்காண்டுகள் நடைபெறும். தனிமனித சுதந்திரம் பறிக்கப்படும் என்ற பயம் நிலவியது.

ஊடகங்களும், டானால்ட் ட்ரம்ப் விவாதத்தில் சொன்னதில் உண்மை இல்லாதவை, அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியது பற்றிக் கேள்வி எழுப்பாமல், ஜோ பைடனின் வயது, அவர் தடுமாறியது, கட்சிப் பெரும் புள்ளிகள் அவரை விலகச் சொன்னது, தேர்தல் பிரசாரத்திற்கான நிதிநிலைமை வற்றிப் போனது – இதில் மட்டுமே கவனம் செலுத்திப் பேசத் தொடங்கின.

இது டானால்ட் ட்ரம்புக்கு மிகவும் சாதகமாக அமைந்தது. இதற்கிடையில், அவர் தேர்தல் பிரச்சாரம் செய்யும்போது, ஒருவன் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டபோது அவர் மயிரிழையில் உயிர் தப்பினார். தலைக்குக் குறிவைத்து வந்த ஒரு குண்டு, அச்சமயத்தில் அவர் திரும்பியதால், அவரது வலது காதை உராய்ந்துகொண்டு சென்றது.

வந்த மற்ற குண்டுகளில் ட்ரம்புக்குப் பின்னால் நின்ற ஒருவர் உயிரிழந்தார். அந்த நிகழ்வும் ட்ரம்புக்கு அனுதாப ஆதரவைப் பெருக்கியது. அவரைச் சுட முயன்றவன் அவரது கட்சியைச் சேர்ந்தவன் என்பதும் பெரிதாக எடுத்துக்கொள்ளப் படவில்லை. இரகசியப் போலிஸ் எப்படி இதை நிகழவிட்டது, சுட்டவன் அவர்கள் கண்ணில் எப்படி மண்ணைத் தூவமுடிந்தது என்றே ஊடகங்கள் பெரும் கேள்விகள் எழுப்பின.

அது நிகழ்ந்து சில நாள்களில் ஜோ பைடனைக் கோரானா நோய் தொற்றியது. அது மேலும் மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தியது. அவர் விலகவேண்டும் என்று டெமாக்கிரட்டிக் தலைவர்கள் வெளிப்படையாகவே குரல் எழுப்பினர்.

இதையும் படியுங்கள்:
அலெக்சாவின் ஆதிக்கம்..!
US Election 2024

கமலா ஹாரிஸ் வருகை:

ஆகவே, ஜூலை 21ம் தேதி ஜோ பைடன், தான் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்து, துணை அதிபர் கமலா ஹாரிஸைப் பரிந்துரைத்தார்.

அறிவித்த ஒரே வாரத்தில் கமலா ஹாரிஸுக்கு 200 மிலியன் டாலர் (ரூ 16,714 கோடி) தேர்தல் நிதி உதவி குவிந்துள்ளது! இதில் வியப்பு என்னவென்றால், குவிந்த நிதியில் மூன்றில் இரண்டு பங்கு முதல் தடவை சிறிய அளவில் நிதியுதவி செய்பவர்கள் மூலம் வந்துள்ளது என்பதே அது!

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட கமலா ஹாரிஸ், தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்காவுக்குப் படிக்கவந்த சியாமளா கோபாலனுக்கும், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகப் பேராசிரியரான டானால்ட் ஹாரிஸ் என்ற ஜமாய்க்கா நாட்டு ஆப்பிரிக்கருக்கும் பிறந்தவர். தந்தை கிறிஸ்தவ சமயத்திலுள்ள பாப்டிஸ்ட் என்ற பிரிவைச் சேர்ந்ததால், கமலா ஹாரிஸும் அச்சமயத்தைத் தழுவினார்.

ஜெஃப் எம்ஹாஃப் என்ற யூதரைத் திருமணம் செய்துள்ளார். ஆக, கிறிஸ்தவ, இந்து, யூத சமயங்களையும், ஆப்பிரிக்க இந்திய, இனங்களையும் இணைப்பவராகக் கமலா இருந்துவருகிறார்.

சான் பிரான்சிஸ்கோ நகர வழக்கறிஞராகவும், கலிஃபோர்னியா அரசின் தலைமை வழக்கறிஞராகவும், பின்னர் அந்த மானிலத்தின் யு.எஸ். செனட்டராகவும் கமலா பணியாற்றியுள்ளார். ஜோ பைடனுடன் இணைந்து போட்டியிட்டு, 2020லிருந்து அமெரிக்காவின் துணை அதிபராகப் பணியாற்றிவருகிறார்.

இத்தொடரில் அடுத்து வருவது: அமெரிக்க அதிபர் தேர்தலின் விநோதங்கள்...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com