
இது ஏதோ அரண்மனையின் முகப்போ அகழிப்பாலமோ இல்லை. கால்நடைகள் தண்ணீர் பருகுவதற்காக ஒரு நல்லவர் எடுப்பித்த தண்ணீர்த்தொட்டிதான் இது. புதுக்கோட்டை நகரின் புகழ்பெற்ற வாரச்சந்தையின் நுழைவு வாயிலின் வலப்புறத்தில் இப்போது பராமரிப்புஇ ல்லாமல் பாழாகிக்கிடக்கிறது.
1912 ஆம் ஆண்டில் இராமச்சநாதிரபுரம் டி. என். நாச்சியப்பச் செட்டியார் என்ற தனவணிகரால் கட்டப்பட்டது என்ற கல்வெட்டுக்கூட அப்படியே இருக்கிறது.
சில நாட்களுக்கு முன்னால் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எதிர்வரும் கோடையை ஒட்டிய கால்நடைகளுக்கும் பறவைகளுக்கும் தண்ணீர் வைக்கலாம் என்று கூறியிருந்தார். பல ஆண்டுகளாக என்னுடைய தினசரிக் கடமைகளில் ஒன்றாகப் பறவைகளுக்குத் தண்ணீர் வைப்பதும் சேர்ந்திருக்கிறது. காகத்துக்குச் சோறு வைப்பது என்பது பல குடும்பங்களில் தினசரி வழிபாடாக இருக்கிறது.
வசதியுள்ள சிலர் அதிகாலையில் பறவைகளுக்கு தானியங்கள் பழங்கள் என்று இரைபோடுவதும் பரவலாக இருக்கிறது. எல்லாவற்றிலும் குடிதண்ணீர் முக்கியமான தில்லையா?
தமிழ்நாடு முதல்வரின் வேண்டுகோளைப் பார்த்ததும் என்னுடைய புதுக்கோட்டை நினைவுகள் அலைமோதின. இந்தத் தண்ணீர்த் தொட்டியும் நினைவுக்கு வந்தது.
நண்பர்களிடம் அந்தத் தொட்டி இப்போது என்ன ஆயிற்று என்று விசாரித்தேன். நண்பர் ஜனார்த்தனன் உடனடியாக அதைப் படங்களாகவே பதிவிட்டு அனுப்பியிருக்கிறார்.
அந்த காலத்தில் நகரத்தார் சமூக அறப்பணிகளுள் முக்கியமானது ஊரில் குளங்கள் வெட்டுவது.
இந்தச் செட்டியார் வித்தியாசமாகக் கால்நடைகளைப் பற்றிச் சிந்தித்துத் தண்ணீர்த்தொட்டி அமைத்துத் தந்திருக்கிறார்.
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமைகளில் வாரச்சந்தை கூடும். அப்போது சுற்றுவட்டார ஊர்களிலிருந்து ஆடு மாடுகளும் விற்பனைக்கு வரும். அந்த ஜீவன்களுக்காகத்தான் இந்தத் தண்ணீர்த்தொட்டி.
நகராட்சி குடிநீர்க்குழாய் வழியாகத் தொட்டியை நிரப்புகிற ஏற்பாடும் இருந்தது. வண்டிக்குதிரைகளும் கூட இதில் உற்சாகமாக நீர் பருகி நான் பார்த்திருக்கிறேன்.
இதுபோல் கால்நடைகளுக்கான தண்ணீர்த் தொட்டிகள் சந்தை கூடுகிற மற்ற ஊர்களிலும் இருக்கலாம்.
நூறாண்டுகளுக்கு மேல் பழைமையான இந்தப் புதுக்கோட்டைக் கட்டுமானத்தைச் செப்பனிட்டுப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டாமா?