அணியாத ஆடையும்… அரிய நினைவகமும்!

Kamarajar
Kamarajar
Published on

மிகப்பிரபலமான தலைவர்களின் நினைவகங்களில், அவர்கள் உபயோகித்த பொருட்களைக் காட்சிப்படுத்துவதே வழக்கம்! இது அவர் யூஸ் பண்ணின நாற்காலி என்றோ, அவர் கடைசி நாட்களில் பயன்படுத்திய வாக்கிங் ஸ்டிக் என்றோ, அவர் கைப்பிடித்து எழுதிய பேனா என்றோ, அவர் வாசித்த இசைக்கருவி என்றோ குறித்து, அவருக்குப் பிடித்தமான சில என்று மேலும் சிலவற்றையும் சேர்த்து, மக்களின் பார்வைக்கு வைத்திருப்பர்.

எளிமைக்கு இருப்பிடம் இவர்! எல்லோர் நலனே முக்கியம் என்று கருதி முழு நாளையும் அதற்கெனவே செலவழித்த அற்புதத்தலைவர் இவர்! நமது பாரம்பரிய ‘ட்ரஸ் கோட்’ ஐ, எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காதவர். உலகத்தின் எந்த நாட்டிற்குச் சென்றாலும், குளிரோ… நடுக்கும் குளிரோ… அவர் தன் பாரம்பரிய ஆடையிலிருந்து வேறு எந்த ஆடைக்கும் மாறியதே இல்லை!

அது 1953 ஆம் ஆண்டு! தற்போதைய மலேசியாவிற்கு அப்போது மலாய் என்று பெயர். அது பிரிட்டிஷாரின் கன்ட்ரோலில் இருந்த நேரம்! இங்கிலாந்தைச் சேர்ந்த ஜெனரல் டெம்ப்ளர் என்பவர் கமிஷனராகப் பணியாற்றினார். ஆள் பாதி! ஆடை பாதி!என்பதை அப்படியே பின்பற்றுபவர். டீசண்டாக ட்ரஸ் செய்யாதவர்களைப் பார்த்தாலே வெறுப்படையும் குணம் கொண்டவர். ஆடம்பரமான ஆடைகளை விரும்பி அணிவதன் மூலமே தனது மற்றும் தன் நாட்டின் பெருமை உயரும் என்று நம்புபவர்! தனக்கு நிகராக, விலை மதிப்புமிக்க ஆடைகளை அணிவோரையே மதித்துக் கலந்துரையாடும் வேடிக்கையான குணம் கொண்டவர். சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவரோ வேங்கடராஜுலு நாயுடு என்பவர். தலைவர், ஜெனரலைச் சந்தித்துப் பேசினால் நாட்டுக்கு நிச்சயம் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை கொண்டவர். டெம்ப்ளரைப் பற்றியும் அவர் நன்கு அறிந்தவர். ஆகையால் தலைவர் கிளம்புவதற்கு முன்னால் அவருக்கு நாயுடு எழுதிய கடிதத்தில், ’கமிஷனரைச் சந்திக்கும்போது அணிந்து கொள்வதற்கென கோட், சூட் தைத்துக் கொண்டு தயாராக வரவும்!’ என்றும் வேண்டிக் கொண்டார். இருந்தாலும் அவர் உள்மனத்துக்குள் ஓர் உதைப்பு இருந்து கொண்டே இருந்தது. எளிமையை விரும்பும் ஏழைப் பங்காளனான தலைவர், கதர் ஆடையை விடுத்து வேறு ஆடைக்கு மாறுவது கடினம் என்பதும் அவர் அறிந்ததுதான்! ஆனாலும் ஆடம்பர வெறி பிடித்த டெம்ப்ளரை அவர் கவர்வதும் அவசியமாயிற்றே! என்று எண்ணி நாயுடு உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்தார்!

கோலாலம்பூர் விமான நிலையமே மனிதத் தலைகளால் நிரம்பி வழிந்தது! தலைவர் விமானத்தை விட்டு இறங்கி வந்ததும் மகிழ்ச்சிக் கூத்தாட்டம் விண்ணை முட்டியது! ஆனால் நாயுடுவின் அடி வயிற்றில் இடி விழுந்தது! ஆம்! நாயுடு எது நடக்கக்கூடா தென்று பத்துமலை முருகனிடம் வேண்டிக் கொண்டிருந்தாரோ அது நடந்தே விட்டது. நாயுடுவின் மனம் வற்றிய குளமாகிப்போனது! டெம்ப்ளர், தலைவரை மீட் பண்ண வருவாரோ… மாட்டாரோ… என்ற பயம் நாயுடுவின் உள்ளத்தை அரித்தது!

‘சரி! இனி நம்மால் ஆவது ஒன்றுமில்லை! கமிஷனராச்சு!தலைவராச்சு! என்ன நடக்கிறதென்று பார்ப்போம்!’ என்று தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டார்.

வரவேற்பு இனிதே முடிய, தலைவரை அழைத்துக் கொண்டு கமிஷனரே அறைக்குள் சென்று அதிக நேரம் உரையாடினார். வேங்கட ராஜூலு பயப்பட்டபடி எதுவும் நடக்கவில்லை.

கலந்துரையாடல் முடிந்து வெளியே வந்த கமிஷனர் டெம்பளர், தலைவரின் எளிமை தன்னை மிகவும் கவர்ந்து விட்டதாகவும், எனவே ஒதுக்கப்பட்ட நேரத்தை விடவும் அதிக நேரம் அவருடன் உரையாடியதாகவும் மீடியாவிடம் தெரிவித்ததுந்தான் நாயுடுவுக்கு உயிரே வந்தது!ஒரு கதர் வேட்டி! ஒரு தொள தொள கதர்ச்சட்டை! சட்டையின் மீது ஒரு காதித்துண்டு.இவற்றை அணிந்தே அந்த உருவம் சாதித்தவை… கொஞ்ச நஞ்சமல்ல!

இதையும் படியுங்கள்:
அமெரிக்க டாக்டர்களை வியக்க வைத்த தலாய்லாமாவின் பிரத்யேக வைத்தியர்!
Kamarajar

இந்த முறை தலைவர் சென்ற நாடோ ரஷ்யா! அந்த நாட்டின் குளிர், உலகப் பிரசித்தம்! அங்கு சென்றதும் குளிர் காலத்தில்தான்! அவர் ரஷ்யா செல்ல ஏற்பாடு ஆனவுடனேயே அவருக்கென குளிரைத் தாங்கும் கோட் சூட் தயாரித்து ரெடியாக வைத்திருந்தனர்.

அவர் அதை ஒரு பொருட்டாகவே கருதவில்லை! எப்பொழுதும் போல் கட்டிய வேட்டி, சட்டை, துண்டுடனே சென்று காரியங்களைச் சாதித்து வந்தார்.

அவருக்காகத் தொண்டர்கள் அன்புடன் தைத்துக் கொடுத்த கோட் சூட் அவர் உடலைத் தழுவும் பாக்கியத்தைப் பெறா விட்டாலும்,அவர் நினைவகத்தின் நீங்கா நினைவுச் சின்னமாகி விட்டன. பல பிரபலங்களின் நினைவகங்கள், நாம் முன்பே குறிப்பிட்டது போல, அந்தப் பிரபலங்கள் விரும்பி உபயோகித்த பொருட்களையே நினைவுச்

சின்னங்களாக்கிக் காட்சிப் படுத்தி, அவற்றின் புனிதம் காப்பார்கள்! ஆனால் நம் தலைவர் நினைவகத்திலோ,அந்த கோட், சூட்டைக் காட்சிக்கு வைத்து, அதன் கீழே, ‘இது தலைவர் ரஷ்யா செல்ல தொண்டர்களால் தயாரித்து வழங்கப்பட்ட ஆடை!ஆனால் தலைவர் அணிய மறுத்து விட்டார்!’ என்ற வாசகம் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதைப் போன்று அரிதான நினைவகம் உலகில் எங்கும்,யாருக்கும் உள்ளதா?என்று தெரியவில்லை!

அந்தத் தலவர், பெருந்தலைவர் காமராஜர்தான்! படிக்காத மேதை, கர்ம வீரர், தென்னாட்டு காந்தி, கருப்பு காந்தி, கல்வித் தந்தை, கல்விக் கண் திறந்தவர் என்ற ஏகப்பட்ட சிறப்புப் பெயர்களின் சொந்தக்காரர்! ஆனால் எளிமையானவர். ’பொன்னை நாடார்! புகழை நாடார்! இந்த விருதுநகர் நாடார்!’ என்று புகழப்பட்டவர்!

இதையும் படியுங்கள்:
முன்னேற்றத்திற்கு எது தேவை...கல்வி அறிவா? அனுபவமா?
Kamarajar

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com