இந்திரா சௌந்தர்ராஜன்… அறிவியலும் ஆன்மீகமும் அமானுஷ்யமும் கலந்த எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர்!

Indra Soundar Rajan
Indra Soundar Rajan
Published on

ஆம் என்று ஒத்துக் கொள்ள வைத்து - அட என மலைக்க வைத்து - அச்சோ எனக் குழம்ப வைக்கும் இவரது நடை. உதாரணத்திற்கு ஒரு நாவல் ஆரம்பிக்கும் பொழுதே இவரின் கைகள் கோர்த்து நடைபோடும் நம் மனது. மகிழ்ச்சி, துன்பம், பேரானந்தம், அதிர்ச்சி, ஆச்சரியம், அமானுஷ்யம், ஆன்மீகம், அறிவியல் என பல சுவைகள் உண்டு நமக்கு. மனம் தேனுண்ட வண்டாய் திளைத்து நிற்கையில் நாவலின் நிறைவு பகுதிக்கு முன் நான்கைந்து வரிகளில் நம்மை அப்படியே விட்டு விட்டுச் சென்று விடுவார். அதன் பிறகு நாம் சுயநினைவு பெற்று திரும்பவும் தன்னிலை வருவது என்பது அவரவர் சாமர்த்தியம்.

அவரோடு பயணிக்கும் சமயங்களில் சந்திக்கும் சித்தர் பெருமான்கள் நம் வாழ்விலும் நேரில் தரிசித்து விட மாட்டோமா என்ற ஏக்கத்தைத் தந்துவிடும். உதாரணமாக சிதம்பர ரகசியம் நாவல். ஒரு டாக்டர் தம்பதி தன் சொந்த கிராமத்துக்கு வந்த சமயம் நடைபெறும் நிகழ்வுகளை சுவாரசியம் ததும்பத் ததும்ப கொண்டு சென்றிருப்பார் இந்திரா சௌந்தர்ராஜன். நாவல் முழுமையும் பயணிக்கும் சித்தர்களும் - விபூதி வாசனையும் - தங்கமண் துகள்களும் - ஐந்து தலை நாகமும் - அரவப்பெட்டியும் - வருண லிங்கமும் - சப்தநதி வெள்ளமும் - அம்பலத்து மாயங்களும் - ஓலைச்சுவடிகளும் - சொர்ண ஜாலத் திரட்டுக் குறிப்புகளும் - தசமகா வித்தைகளும் - பஞ்சபூத வசியங்களும் - அகோரிகளும் - முத்திரை வழிபாடுகளும் - ஸ்ரீயந்தரம் - ஆத்ம சக்தி - ஜல சமாதி - சிதம்பர ரகசியம் -  தீட்சை… எப்பொழுது வாசித்தாலும் அந்த எழுத்துக்களுக்குள் அடங்கி ஒடுங்கி அமர்ந்து விடும் மனது.

நேரில் சந்தித்து உரையாடவில்லை எனினும் தங்கள் எழுத்துக்களால் எங்களுடன் வாழ்ந்து வந்தீர்கள். எங்களுக்குள் ஒருவராய் இருந்து வந்தீர்கள். சமகாலத்தில் நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள் என்ற மனநிறைவு இருந்தது. இனி என்ன செய்வோம் ஐயா…

சிதம்பர ரகசியம் நாவலில் எத்தனையோ ரகசியங்களை தன் எழுத்துக்களில் மறைத்து கூறி கூடவே காவேரி ஆற்றின் வறண்ட நிலை, மனிதர்களின் மன மாற்றம், சுற்றுப்புற சூழ்நிலை மாசு என இன்றைய நடைமுறைச் சிக்கல்களையும் அழகாய் சொல்லியிருப்பார்.

“இந்த பிரமிப்பு எல்லாம் கூட போயிடும். மனுஷ வாழ்க்கையில எவ்வளவு பெரிய விஷயமா இருந்தாலும்… முதல் தடவை மட்டும்தான் பெருசா தெரியும். அப்புறம் அது பழகி சாதாரணமாகிவிடும். அதனாலதான் கடவுள் நம்ம கண்ணுக்குப் புலப்படாமல் இருக்கிறார்” என்கிற அந்த சித்தரின் தத்துவமான பதில் ராஜேந்திரன் தெய்வானைக்கு புரியவில்லை. ஏன் நமக்கும் கடைசி வரை புரியத்தான் இல்லை…

அவரின் ருத்ர வீணை. “அந்த வீணையும் அன்னை பராசக்தி திருச்சிலையும் ஒன்றாம்” என அறிமுகப்படுத்தி அந்த வீணையின் அதிர்வான மீட்டலில் நம் இதயத்து நரம்புகளை மீட்டும் அந்த ருத்ர வீணை இசையில் இதுவரை லயிக்கவில்லை என்றால்…தயவு செய்து ஒருமுறை…..

“நாதக்கலைஞன் புதல்வனே! இனி வீணா நாதத்துக்கும் உரிய ருத்ரன். ருத்ர வீணையைத் தேடியே வந்த உபாசகனே இனி காப்பாளன். ருத்ர வீணையும் உலகைச் சுற்றி வரட்டும். அதன் இசைப் பரவும் இடமெல்லாம் இன்பம் துளிர்க்கட்டும். உற்ற துணையாக சிவமிருக்கும்” என்ற எழுத்துக்களுக்குக் கீழே லிங்கமுத்திரை. 

கல்யாணசுந்தரம் உரக்க அதை வாசித்து முடிக்க, “தென்னாடுடைய சிவனே போற்றி” என்றார் கர்ணம் ரோமாஞ்சன சிலிர்ப்போடு. “எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்கிற எதிரொலி வானம் வரை ஒலித்தது. படித்து முடித்த பின் பல நாட்கள் ருத்ர வீணையின் இசை நம் மனதை மீட்டியபடி இருப்பதை தடுக்கத்தான் இயலவில்லை.

ஒரு சின்னத்திரை தொடர் ரசிகர்களை கட்டிப்போட்டு தினமும் ஒளிபரப்பாகும் நேரத்துக்காய் காத்திருக்க செய்தது என்றால் “மர்மதேசம்-விடாது கருப்பு”. கடுமையான ஒரு குரல் “மர்ம தேசம்” என்பதில் ஆரம்பித்து தொடர்ந்து ஓடிவரும் வெள்ளைக் குதிரையும் அதன் மேல் ஆரோக்கணித்திருக்கும் தெய்வமுமாய் திகிலூட்டும் பின்னணி இசையும், “கதை திரைக்கதை வசனம் இந்திரா சௌந்தரராஜன்” காணும் போது மனம் கொண்டாடும். அடிக்கடி கேட்கும் குதிரையின் கனைப்பு மனம் சிலிர்க்கும். உடுக்கையாய் நமது இதயம் மாறி உடல் எல்லாம் அதிரும். ”வா வா கருப்பா; அந்த வானத்து நிலவா” உயிர் உருக்கிய அத்தனை தருணங்களும் மறந்தா போகும்! 

இதையும் படியுங்கள்:
அஞ்சலி: டெல்லி கணேஷ் - தனியான நடிகன்நீ! தரமான மனிதன்நீ!
Indra Soundar Rajan

சமூக கதைகள், சரித்திரத் தொடர்கள், அமானுஷ்ய நாவல்கள், சித்தர்கள் வரலாறு, ஆன்மீக புத்தகங்கள் என பல தளங்களில் பயணித்தது இவரின் பேனா. இவரது நாவல்களின் தலைப்பே நம் எதிர்பார்ப்பைக் கூட்டிவிடும். இறையுதிர் காடு, சொர்ண ஜாலம், ரகசியம் பரம(ன்) ரகசியம், பாஷாண லிங்கம், காத்திருந்த நாகம் போன்றவை. மகாபாரதம், ரங்கநதி, மகா பெரியவர் என பல ஆன்மீகத் தொடர்களும் நாவல்களும் எழுதி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆன்மா சித்தம் பற்றிய பல தெளிவுகளை நமக்கு வழங்கிய ஆகச்சிறந்த ஆன்மீக சொற்பொழிவாளரும் கூட. விளக்கிச் சொல்ல இயலும் என்ற விஞ்ஞானத்தையும், உணர்வுபூர்வமாக விளங்கிக் கொள்ள இயலும் என்ற மெய்ஞானத்தையும் பதியன் போட்டவை இவரின் சொற்பொழிவுகள். மகா பெரியவர் பற்றிய இவரின் தொடர் சொற்பொழிவு எப்பொழுது கேட்டாலும் பக்தி பெருக்கும் சக்தி ஊற்றுமாய் நமக்குள் உணர முடியும். கடல் கடந்து பல இதயங்களை தெளிவாக்கிய சொற்பொழிவுகளுக்குச் சொந்தக்காரர்.

இந்த நிமிடம் தாங்கள் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. தங்களின் எழுத்துக்களால் வரிகளால் சொற்களால் எங்கள் இதய நாளங்களில் குருதியாய் ஓடிக்கொண்டிருக்கும்  தங்களை மறப்பதெப்படி? இந்த அண்டப் பெருவெளியில் தங்களின் எழுத்துக்களை ரசிக்கும் கோடிக்கணக்கான இதயங்கள் குழுமியிருக்கும் ஜனத்திரளில் எப்போதும் முதல் வரிசையில் நான்…

ரகசியங்களுக்கெல்லாம் ரகசியம் நான் ;

அதிசயங்களுக்கெல்லாம் அதிசயமும் நான்! 

நாங்கள் வாசித்த  உங்கள் வரிகள்தான்… ரகசியத்தையும் அதிசயத்தையும் அறிந்து கொள்ளவா சென்று விட்டீர்கள்…?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com