
மகாராஷ்டிராவின் முன்னாள் காவல் துறை இயக்குனர் ஜெனரல் தமிழகத்தை சேர்ந்த திரு த. சிவானந்தன் ஆவார். மும்பை தாதாக்களின் அட்டகாசங்களை முழுமையாக ஒழித்த இவரின் தொலைநோக்கு பார்வையில் உருவானதே ஏழைகளின் பசி நீக்கும் ரொட்டி வங்கியாகும். அன்னாரின் 'தி பிரம்மாஸ்திரா அன்லீஷ்ட்’ என்ற நூலின் வெளியீட்டு விழா சென்னை எம்சிசி பள்ளி அரங்கில் சமீபத்தில் நடைபெற்றது. அவ்விழாவில் பேசிய த.சிவானந்தன் ஐபிஎஸ், தன் ரொட்டி வங்கியைப் பற்றியத் தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
ஏழைகளின் பசி அவர்களை சட்டவிரோத செயல்களில் ஈடுபடச் செய்கிறது என்பதை உணர்ந்த அவர் மக்களின் அடிப்படைத் தேவையான பசியை தீரத்து வைப்பதால் அவர்களுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை தம்மால் வழங்க முடியும் என்று திடமாக நம்பினார்.
இந்தியாவின் பசிக் குறியீடு Global Hunger Index (GHI) 2024 - 27.3 ஆகும். இது 127 உலக நாடுகளில் 105வது இடமாகும். இந்த அதிர்ச்சி தரும் உண்மையை உணர்ந்த அவர், மும்பையில் பட்டினியால் வாடிய ஏழை மக்களுக்காக ‘ரொட்டி வங்கி’ என்னும் அமைப்பை 2017ம் ஆண்டில் மும்பையில் துவங்கினார்.
தற்போது மும்பை மட்டுமின்றி நாக்பூர், கோவை, ஐதராபாத், அகமதாபாத், கட்டாக் ஆகிய நகரங்களிலும் ரொட்டி வங்கி திறக்கப்பட்டு சிறந்த சேவையை செய்து வருகிறது.
யாருமே பட்டினியாக இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் திருமணங்கள், ஹோட்டல் மற்ற நிகழ்வுகளில் கிடைத்த அதிகப்படியான உணவை சேகரித்து பட்டினியால் அவதிப்படும் மக்களுக்கு முதலில் வழங்கத் தொடங்கினார். இதில் ஆரோக்யமற்ற, உணவும் கலக்கும் அபாயமும் இருந்தது.
2020ல் கோவிட் காலத்தில் உணவு சேகரிப்பும், விநியோகம் அவருக்கு பெரிய சவாலாக அமைந்தது. அதனால் ரொட்டி பேங்க் என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் சொந்த சமையலறையில் சுகாதாரமான, ஊட்ட சத்துள்ள உணவை மும்பை தாராவி, சயான் கோலிவாடா பகுதிகளில் இருந்த ஏழை மக்களுக்கு தினமும் சுமார் 47,000 உணவு பொட்டலங்களை விநியோகிக்கத் தொடங்கினார்.
அதற்காக தங்கள் சொந்த உணவுக் கூடத்தை 2020ல் தொடங்கி அதன் மூலம் சத்துள்ள ஆரோக்கிய உணவை ஏழை மக்களுக்கு அன்றாடம் விநியோகித்து வருகிறார். அதற்காக 3 கொதிகலன்கள், காய்கறி கட்டர்கள், 12 வேன்கள், பணியாளர்கள், அதிக அளவில் ரொட்டி தயாரிக்கும் இயந்திரத்துடன் கூடிய சுத்தமான சமையலறையை அமைத்து அதன் மூலம் உணவை அளித்து வருகிறார்.
தற்போது மும்பையிலுள்ள 30 பள்ளிகளுக்கும், அரசு மருத்துவ மனைகளுக்கும் தினமும் 15,000 உணவுப் பொட்டலங்களை தினமும் இவரின் ரொட்டி வங்கி வழங்கிவருகிறது. இதன் மூலம் ஒரு வலிமையான, ஆரோக்யமான பாரதத்தை உருவாக்க முடியும் என அவர் திடமாக நம்புகிறார்.
இந்த ரொட்டி வங்கி முற்றிலும் சுதந்திரமான N.G.O. ஆகும். இது பெரு நிறுவனங்கள், பிற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனிப்பட்ட நன்கொடையாளர்களிடமிருந்து நிதியை திரட்டி செயல்பட்டு வருகிறது. இவரது ரொட்டி வங்கி இந்தியாவில் உள்ள ஏழு மாநிலங்களில் 18 மில்லியன் உணவு பொட்டலங்களை இதுவரை விநியோகித்துள்ளது.
ஆரோக்யமான பாரதத்தை உருவாக்குவதையும் குழந்தைகளுக்கு ஆரோக்யமான, சத்துள்ள உணவை வழங்குவதையும் தனது நீண்டகால இலக்குகளாக கூறுகிறார்.
சீனாவுக்கு அடுத்த படியாக நமது நாட்டில் 68 மில்லியன் டன் உணவு தினமும் வீணாக்கப்படுவதாக தன் கவலையை வெளிபடுத்துகிறார். இதையெல்லாம் அறியவரும் நமக்கு ஒரு காக்கிசட்டைக்குள் ஒரு கருணை நெஞ்சமா? என்று எண்ணி ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.