
சமீபத்தில் சில மாதங்கள் மற்றும் ஆண்டுகளாக எனது வயதை ஒத்த ஆண் நண்பர்கள், பலரும் பணி ஓய்வு பெற்று வருகிறார்கள். எனது அலுவலகம் மற்றும் பிற தனியார் அல்லது அரசு சார்ந்த துறைகளிலிருந்து அவர்கள் விடைபெறும்போது நமது நாளும் நெருங்கிவிட்டதை உணரமுடிகிறது.
பணி ஒய்வு பெற்றவுடன் என்ன செய்கிறார்கள்? பெரும்பாலவனர்களுக்கு எந்த வித மாற்று யோசனையும் இருக்கவில்லை. ரெஸ்ட் எடுக்கிறேன் என்கிறார்கள். இவ்வளவு காலம் ஓடியாயிற்று; இனிமே ஓடுவதற்கு ஒன்றுமில்லை என்ற மனநிலை காணப்படுகிறது.
பலரும், சில இடர்பாடுகள் தவிர்த்து, ஆரோக்கியமாகவே இருக்கிறார்கள். ஓரளவுக்குப் பொருளாதார தன்னிறைவையும் தங்களது திட்டமிடல் மூலம் அடைந்தேயிருக்கிறார்கள். தங்களது கடமைகளான மக்களின் சுபநிகழ்ச்சிகளை முடித்தும் விடுகிறார்கள். எனவே அவர்களுக்கு தாங்கள் இனி செய்யவேண்டியது எதுவுமில்லை என்று மனதளவிலும் ஓய்வை அடைகிறார்கள்.
இப்போதெல்லாம் ஆயுட்காலம் நீண்டு வருவதால், எண்பது வயதைத் தாண்டினால்தான் வயது மூப்பு என்று கருதப்படுகிறது. எனவே, அறுபதிலிருந்து எண்பதைத் தொட இருபது வருடங்களை என்ன செய்வது என்று யோசனை மற்றும் திட்டமிடல் இல்லாமலிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தங்களது முதல் இருபது வருடங்கள் எப்படி காலப்போக்கின் தன்மைக்கு ஏற்றவாறு பிரயணித்தார்களோ அப்படித் தான் இந்த இருபது வருடங்களையும் கடத்துகிறார்கள். அப்போதாவது பள்ளி கல்லூரிக்குச் சென்று வந்தார்கள். இப்போது அதுவுமில்லை.
ஒரு சிலர் சரியாகத் திட்டமிடாமலும் அல்லது சூழல் காரணமாகவும் மொத்த பணத்தையும் செலவிட்டு விட்டு மீதி வாழ்வைப் பிறர் உதவியை நாடி வாழ்ந்து வருகிறார்கள். தங்களுக்கும் பிறருக்கும் பாரமாக வாழ்கிறோம் என்ற அவர்களது நிலை கவலைப் பட வேண்டிய ஒன்று தான்.
பெரும்பாலும் தங்களது நேரத்தைக் கவனத்தை தங்களது வேலை மற்றும் குடும்பம் என்று அவர்கள் ஒரு நாற்பது வருடம் செலவழித்து விட்டதால் வேறொரு துறையிலோ, மாற்றுத் திறமையை வளர்க்கவோ கவனம் செலுத்த முனையவில்லை. இதற்கு மேல் எப்படி எதைத் துவங்குவது என்கிற சலிப்பும் அலுப்பும் ஆர்வமின்மையும் அவர்களைச் சூழ்ந்து விடுகிறது.
ஒரு கூண்டிலோ அல்லது வட்டமான மைதானத்திலோ சுற்றிக்கொண்டு இருந்தவர்களை, கூண்டையோ மைதானத்தின் கதவையோ திறந்துவிட்ட உணர்வு அவர்களுக்கு ஏற்படுகிறது. என்ன செய்யவேண்டும் எத்திசை செல்ல வேண்டும் என்ற நோக்கமும் தீர்வும் இல்லாமல் தனித்து விடப்படுகிறார்கள்.
தங்களது பணிக்காலத்தில், மாற்று திறனாக, ஆவலாக விருப்பமாக ஒன்றை தேர்ந்தெடுத்து பயிற்சியோ பழக்கமோ இல்லாத போது, புதிதாக ஒன்றை துவங்க தயக்கம் மற்றும் முயற்சியின்மை முந்திவிடுகிறது.
விடுமுறை நாட்களை நாம் பெரும்பாலும் ஒய்வு நாட்களாக கருதி மாற்று வேலையை செய்யும் பழக்கம் நம்மிடையே இல்லாததால், பணி ஓய்வும் நீண்ட விடுமுறையாகி சும்மா இருப்பதே சுகம் என்றாகி விடுகிறது.
இதனையும் மீறி சிலருக்கு பலருக்கும் ஆன்மீகமும் பக்தியும் சிறந்த வழியாக தோன்றிவிடுகிறது. கோவில்கள் செல்வது, ஆன்மீக சொற்பொழிவுகள் கேட்பது, பக்தி சுற்றுலா செல்வது என்று கிளம்பி விடுகிறார்கள். அதுவும் சில மாதங்களுக்கு அல்லது வருடங்களுக்குத்தான் தாங்குகிறது. அதிலிருந்தும் அலுப்பு மற்றும் உடல், பண தேவைகள் கருதி சுருங்கி விடுகிறார்கள்.
இருபது வருடங்கள் வாழ நோக்கமும் நம்பிக்கையுமற்று இருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் எல்லோரும் இருபது வருடங்களை வாழ்ந்து விட்டே இறக்கிறார்கள். இறப்பு எப்போது நேரும் என்று யாராலும் அறுதியிட்டு சொல்லமுடியாது தான். ஆனால் கடைசி வரை செயலாற்றிக்கொண்ட இருப்பது என்ற முடிவும் துணிவும் நம்முடையது தானே.
ஆற்றலுக்கும் ஆர்வத்திற்கும் வயது மூப்பு உண்டா என்ன? நிச்சயம் கிடையாது. தங்களது இந்த நீடித்த ஓய்வை தனக்கும், பிறருக்கும் பயனுள்ள வகையில் திட்டமிட்டு செயலாற்ற, தன் முனைப்பும் நம்பிக்கையும் மட்டுமே வேண்டும். பணியில் இருக்கும்போதே அல்லது அதிலிருந்து ஓய்வை நெருங்குகையில் ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் இந்த காலத்தில் அது பயன்கொடுக்கும்.
ரசனையை வளர்த்துக்கொள்வது. புத்தகம் படிப்பது, பயணம் செய்வது, தனக்கு தெரிந்ததை கற்றுத்தருவது, சமூக பணிகளில், குறைந்தபட்சம் தனது குடியிருப்பை சுற்றி நிகழும் வேளைகளில், ஈடுபடுத்திக்கொள்வது, நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கூடிக்குலாவி உறவை பேணுவது என்று ஈடுபாட்டுடன் செயல்பட்டால் முதுமை பயனுள்ளதகவும், ஆரோக்கியமாகவும் ஏன் சுவாரசியமாகக் கூட அமைந்துவிடும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, நாம் குடும்பத்தில் பற்று கொண்டு சிக்கித்தவிக்கிறோம். நம் குழந்தைகளின் வாழ்வை அவர்கள் வாழட்டும் என்று தள்ளி நின்று பார்க்கும் மனநிலை வளர்த்து கொள்வது மிகவும் அவசியம். இல்லையென்றால் அதனை சுட்டிக்காட்ட அவர்கள் தவறுவதில்லை. நாமே உணர்ந்து வெளியேறி விடுவது நமது விருப்பமாக முயற்சியாக அமைந்தால் அதனால் நமக்கு கிடைக்கும் நிம்மதியும் மனநிறைவும் ஏகாந்தமாக இருக்கும்.