

சாப்பாடு என்பது வெறும் உடல் பசியைத் தீர்ப்பதல்ல, அன்பும் மரியாதையும் பகிரும் வழி என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது. பழைய அம்மாக்களின் அக்கறை, திரைப்படக் காட்சிகள், பொருநராற்றுப்படை, சேந்தனார் கதைகள், ராமாவரம் தோட்டத்தில் மக்கள் திலகம் கேட்ட ‘சாப்பிட்டீங்களா’ என்ற கேள்வி, விஜயகாந்தின் உதவி ஆகியவை மூலம் விருந்தோம்பலின் ஆன்மீக, சமூக, கலாச்சார அர்த்தம் சுருக்கமாகச் சொல்லப்படுகிறது.
தலைப்பை பார்த்ததும் பசிக்குதா...? அப்ப அவசியம் வாங்க சாப்பிடலாம். ஒரு கல்யாணம்... ஒரு காதுகுத்து... வளைகாப்பு... இப்படி பல விசேஷங்களுக்கு போனால் சம்பந்தப்பட்ட வீட்டுக்காரங்க நம்மள பாத்து இப்படி கேட்கும் போது மனசு ரொம்ப சந்தோஷப்படும். சாப்பாடு நம் வாழ்க்கையில் பிரதானமானது. வீட்டிற்கு விருந்தினர் வரும்போது என்ன சமைக்கலாம் என்று பெரும்பாலான அந்த கால அம்மாக்கள் யோசிப்பார்கள். காரணம் கேட்டால் 'எல்லாமே வயத்துக்கு தாண்டா...' என்று பாலச்சந்தரின் நவக்கிரகம் படத்தில் கவிஞர் வாலி அவர்கள் எழுதியதை சொல்வார்கள்.
சின்னக்கவுண்டர் படத்தில் 'மொய் விருந்து' என்று ஒன்றை இயக்குநர் உதயகுமார் அவர்கள் காண்பித்தார்.
தான் வாங்கிய கடனை அடைக்க முடியாத சுகன்யா ஊர் மக்களை சாப்பிட வாங்க என்று விருந்துக்கு அழைத்து, அதில் வைக்கப்படும் மொய் பணம் மூலம் கடனை அடைக்க நினைப்பார்.
சாப்பிட்ட பிறகு அனைவரும் இலைக்கு அடியில் மொய் வைப்பார்கள். ஆனால் சின்னக்கவுண்டர் மட்டும் தாலியை வைப்பார். அப்போது பின்னணியில் 'அந்த வானத்தை போல மனம் படைத்த மன்னவனே...' என்று ஜானகி அவர்களின் குரலில் இனிமையான பாடல் ஒலிக்கும். சாப்பாட்டுக்கு பின்னால் இருக்கும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் இது.
'முதல் மரியாதை' படத்தில் குயிலு மீனை அப்படியே உறிஞ்சு சாப்பிடுவதை மழைக்காக அவர் வீட்டில் ஒதுங்கி இருக்கும் சிவாஜி ஏக்கத்தோடு பார்க்கும் போது, 'ரெண்டே ரெண்டு மீனு கொஞ்சம் சோறு சாப்பிடுய்யா, இல்லாட்டி உன்னை பாக்க வச்சு தின்ன எனக்கு வயிறு வலிக்கும் என்று சொன்னதும்.. போலியாக 'வேண்டாம்' என்று முதலில் மறுத்தும், பின்னர் 'சரி'யென்று வாங்கி நன்றாக ருசிச்சி சாப்பிடுவார். இன்னும் மீனை போடு என்று கேட்டு வாங்கி சாப்பிட்டுக் கொண்டே, "உனக்கு வயித்து வலி வரக் கூடாதுன்னு தான் புள்ள..." என்று சொல்வார்.
'சாப்பிட்டீங்களா?' என்று சும்மா கேட்டு வைக்காமல் முழு ஈடுபாட்டோடு, சமைத்ததை பரிமாறுதல் மிகச் சிறந்த விருந்தோம்பல் ஆகும்.
சங்ககால இலக்கியங்களில் புலவர்கள் தங்கள் வறுமை தீர மன்னர்களை தேடிச் சென்றதை பாடியிருப்பார்கள். அந்த மன்னர்கள் அவர்களின் பசி தீர்த்து வேண்டிய அளவுக்கு பொன்னையும் பொருளையும் தருவார்கள். பத்துப்பாட்டு நூல்களில் இரண்டாவது நூல் பொருநராற்றுப்படை. இதன் ஆசிரியர் முடத்தாமக் கண்ணியார். பாட்டுடைத் தலைவன் கரிகால் சோழன். தன்னை நாடி வந்த ஒரு ஏழை கூத்தனுக்கு கரிகால் சோழன் தணலில் வேகவைக்கப்பட்ட தந்தூரி வகை உணவை தந்து உபசரித்ததாக செய்திகள் உள்ளன.
"காழிற் சுட்ட கோழூன் கொழுங்குறை ஊழின் ஊழின் வாய்வெய் தொற்றி..." - செம்மறியாட்டின் இறைச்சியை கம்பியால் குத்தி சமைத்து பரிமாற, பசியால் அவன் அவசரம் அவசரமாக சாப்பிடுகிறான். சூடு அதிகமாக இருந்ததால் துப்ப நினைத்து, சுவை அதிகமாக இருந்த காரணத்தால் வாயின் வலது புறம் இடது புறம் மாற்றி மாற்றி சுவைத்து உண்ணுகிறான்.
சிதம்பரத்தில் சேந்தனார் என்ற சிவபக்தர் வாழ்ந்து வந்தார். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்த பிறகுதான் அவரும் அவர் மனைவியும் சாப்பிடுவார்கள். பட்டினத்தாரிடம் கணக்குப் பிள்ளையாக வேலை பார்த்தார்.
அவர் துறவறம் சென்ற பிறகு சேந்தனார் சிதம்பரம் வந்து சேர்ந்தார். தினமும் விறகு வெட்டி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கை நடத்தினார். ஒரு நாள் கடுமையான மழை பெய்த காரணத்தால் விறகு விற்பனை ஆகாமல் போனது. அன்று அவர் மனைவி வீட்டில் இருந்த உளுந்தை அரைத்து மாவாக்கி களி செய்து வைத்திருந்தார். அப்போது சிவனடியார் ஒருவர் மழைக்கு ஒதுங்கி அவர் வீட்டில் நின்று இருந்தார்.
'சாப்பிட ஏதாவது இருக்குமா?' என்று அவர் சேந்தனாரிடம் கேட்க... மனைவி சமைத்து வைத்திருந்த களியை தந்து மனநிறைவு அடைந்தார். "இன்னும் இருந்தால் கொடுங்கள் அடுத்த வேளைக்கும் இதையே வைத்துக் கொள்கிறேன்," என்று அந்த அடியவர் சொல்ல, தங்களுக்காக வைத்திருந்ததையும் அவரிடம் கொடுத்து இருவரும் பட்டினி இருந்தார்கள். சிவனடியாராக வந்து சேந்தனார் வீட்டில் களி சாப்பிட்டவர் சிவபெருமான். அந்த நிகழ்வு திருவாதிரை தினமாக இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.
சாப்பிட்டீங்களா? - இந்த தலைப்போடு மிக மிக நெருக்கமானவர் மக்கள் திலகம் அவர்கள். ராமாவரம் தோட்டத்துக்கு சென்றால் அங்கே கேட்கப்படும் முதல் கேள்வி 'சாப்பிட்டீங்களா?'. வந்தவரை சாப்பிடச் சொல்லி அதன் பிறகுதான் மற்ற விஷயங்களை அவரிடம் கேட்பார் மக்கள் திலகம். திரைத்துறையில் இருந்த பலர் தங்கள் பேட்டியில் இதை சொல்லி இருக்கிறார்கள்.
அவருக்குப் பிறகு விஜயகாந்த் அவர்கள் அந்த பணியை செய்து வந்தார். வாய்ப்பு தேடி சென்னை வரும் பலர் அவர் மூலமாக தங்கள் பசியை தீர்த்துக் கொண்டார்கள்.
விருந்தோம்பலின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் அதற்கென்று தனி அதிகாரமே இயற்றியுள்ளார் வள்ளுவர். 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்ற புறநானூறு பாடலும் அதைதான் வலியுறுத்துகிறது.
இந்த கட்டுரையை வாசிப்பதன் மூலம், உணவுப் பரிமாற்றத்தின் பின்னணியில் உள்ள உன்னதமான பண்பாட்டையும், 'சாப்பிட்டீங்களா?' என்ற கேள்வியின் ஆழமான அர்த்தத்தையும் புரிந்துகொண்டு, உங்கள் அன்றாட வாழ்வில் அன்பைப் பகிரும் புதிய கண்ணோட்டத்தைப் பெறுவீர்கள்.