இசையினை அமுதாய் உண்டால்
இதயத்தில் இசை உண்டாகும்
இதயத்தில் இசை உண்டானால்
எழுத்திலும் இசை உண்டாகும்
செம்மங்குடி சீனிவாசய்யரின் புகழ் ஆரோகணத்தைத் தொடக்க காலம் முதல் கவனித்தும் பாராட்டியும் வந்தவர் கல்கி. எத்தனையோ தடவை அவருடைய சங்கீதக் கச்சேரிகளைப் பற்றி அவர் விமரிசனம் எழுதினார்; ஆரம்ப காலக் கச்சேரிகளில், தாம் கண்ட குணங்களைப் புகழ்ந்து சொன்னதோடு, குற்றம் குறைகளையும் கூசாமல் எடுத்துச் சொன்னார். சாரீர இனிமை, வித்துவத் திறமை, உருப்படிகளைத் தேர்ந்தெடுக்கும் ஆற்றல் ஆகிய நல்ல அம்சங்களைக் கொண்டிருந்தும், சாகித்தியங்களை மட்டும் பொருளுணர்ந்து உணர்ச்சியுடன் அவர் பாடுவதில்லை என்று பரிகாசமாகவே சுட்டிக் காட்டினார். பின்னர் அவருடைய கலை மாசற்ற மாணிக்கமாய், நிலையாக இசை உலகில் ஜொலித்ததைக் கண்டு, கலப்பற்ற புகழ் மொழிகளை அவர்மீது பொழியலானார்.
அக்கலைஞருக்கு ஜனாதிபதியின் விருது கிடைத்த சமயத்தில் "இசைக் கலையின் தவப் புதல்வர்" என மகுடம் சூட்டிப் பாராட்டுரை ஒன்றைக் கல்கி எழுதினார். அதை அவர் எழுதுகையில் முன்பு தாம் கர்நாடகமாய்க் கலை அரங்குகளில் உலவத் தொடங்கிய காலத்தை இயல்பாகவே நினைத்துக்கொண்டார்: ...சோழ நாட்டில் பல நூறு ஆண்டுகளாகவும் பரம்பரை யாகவும் வளர்ந்து வந்த கர்நாடக சங்கீதத்துக்கு, இன்று செம்மங்குடி சீனிவாசய்யர் தலைசிறந்த வாரிசு உரிமை பெற்று விளங்குகிறார்... முன்னோர்கள் பழமையாகக் கையாண்டு போஷித்த கன ராகங்களை செம்மங்குடி சீனிவாசய்யர் ஆலாபனம் செய்யத் தொடங்கி விட்டாரானால், ஆயிரம் பதினாயிரம் ஜனங்களுக்கு மத்தியில் இருந்தபோதிலும், தாமும் நாதமும் தம்புராவுமாகத் தனித்த ஏகாந்த நிலைக்குப் போய்விடுகிறார். வானத்தில் பறந்து வட்டமிடுகிறார்; வையத்தில் இறங்கியும் சஞ்சரிக்கிறார்.
முற்பிறப்பில் இறைவனுக்குக் குடம் குடமாகத் தேன் அபிஷேகம் செய்தவர்கள் இப்பிறப்பில் இனிய சாரீர சம்பத்தை அடைகிறார்கள் என்று பெரியோர்கள் சொல்வதுண்டு. சங்கீத கலாநிதி செம்மங்குடி சீனிவாசய்யர் பூர்வ ஜன்மத்தில் குடம் குடமாகத் தேனபிஷேகம் செய்திருப்பார் என்று சொல்ல முடியாது. இரண்டு இரண்டு குடமாக இரண்டு கையிலும் எடுத்துக் கொண்டுபோய் இறைவனுடைய திருமேனியில் தேனைக் கொட்டி அபிஷேகம் செய்திருப்பார் என்று நம்ப வேண்டியிருக்கிறது. ஏனெனில், இயற்கையிலேயே இரட்டை நாதம் உள்ள சாரீர சம்பத்தையல்லவா செம்மங்குடி சீனிவாசய்யரிடம் நாம் காண்கிறோம்...
அந்தச் சம்பத்தைப் பெறுவதற்கு இவர் முற்பிறப்பில் என்ன தவம் செய்தாரோ? அல்லது இசைக் கலை தேவிதான் என்ன தவம் செய்து இவரைப் பெற்றாரோ?...
இத்தகைய எண்ணங்கள் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னால், செம்மங்குடி சீனிவாசய்யரின் கச்சேரியை முதன்முதலாகக் கேட்டபோது என் மனத்தில் எழுந்தன. அந்தக் கச்சேரியில் அவர் அன்று ஆலாபனம் செய்த கரகரப்ரியா, ஷண்முகப்ரியா, நாட்ட குறிஞ்சி ராகங்களும், 'பக்கல நிலபடி', 'மரிவேர', 'மானஸ ஸஞ்சரரே' கீர்த்தனங்களும் இன்னும் என் ஞாபகத்தில் இருக்கின்றன.