
குழந்தைத் தொழிலாளர் என்பது குழந்தைகள் மிகவும் இளமையாக இருக்கும் போதே வேலைகளில் ஈடுபடுவதைக் குறிக்கிறது. குழந்தைத் தொழிலாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் அவர்களின் உடல் நலத்திற்கு நேரடியாக ஆபத்தை விளைவிக்கும் அபாயகரமான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். உலகளவில் கிட்டத்தட்ட 10 குழந்தைகளில் ஒருவர் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு ஆளாகின்றார். சிலர் கடத்தப்பட்டு, ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தப்படுவுதுவும் உண்டு.
பெரும்பாலும், குடும்பங்களின் நிதிச் சவால்களே குழந்தைத் தொழிலாளர்கள் உருவாவதற்கு காரணங்களாய் அமைகின்றன. இந்த நிதிச் சவால்,கள் வறுமை, பராமரிப்பாளரின் திடீர் இறப்பு, குடும்பத்தில் முதன்மை ஊதியம் பெறுபவரின் வேலை இழப்பு போன்ற வடிவங்களில் ஏற்படுகின்றன.
குழந்தைத் தொழிலாளர் முறை, மரணம் உள்ளிட்ட உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கடுமையான பாதிப்புகளை அவர்களுக்கு ஏற்படுத்துகின்றன. இது அடிமைத்தனம், பாலியல் கொடுமை, பொருளாதாரச் சுரண்டல் ஆகியவற்றிற்கு வழிவகுக்கின்றன. இது குழந்தைகளின் பள்ளிப்படிப்பு உள்ளிட்ட, அவர்களின் அடிப்படை உரிமைகளையும் பாதிக்கிறது.
போர், இயற்கைப் பேரழிவு, வறுமையால் புலம்பெயர்ந்த அகதிக் குழந்தைகள் போன்றவர்கள் கட்டாயமாக வேலைக்குச் செல்லவோ, கடத்தப்படவோ வாய்ப்புகள் உள்ளன. கடத்தப்படும் குழந்தைகள் பெரும்பாலும் வன்முறை, துஷ்பிரயோகம் போன்ற மனித உரிமை மீறல்களுக்கு ஆளாகின்றனர். சிறுமிகளிடையே பாலியல் சுரண்டல் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது,
நிலத்தடியில், நீருக்கடியில், ஆபத்தான உயரமான இடங்களில், ஆபத்தான இயந்திரங்கள், உபகரணங்கள், கருவிகள் ஆகியவற்றை பயன்படுத்தி செய்யப்படும் வேலைகளும் குழந்தைகளுக்கு அளிக்கப்படுகின்றன. இவ்வாறான பணிசெய்யும் சிறுவர்கள் தீவிர வெப்பநிலை, இரைச்சல் போன்றவைக்கு ஆளாக நேரிடலாம். இதன் நீண்ட நேர பாதிப்பு, இரவு முழுவதும் உழைப்பது போன்ற கடினமான சூழ்நிலைகளில் அவர்களின் உடலும் மனமும் தீவிர பாதிப்புகளுக்கு உள்ளாகிறது.
இன்றும் உலகில் குழந்தைத் தொழிலாளர் ஒரு தொடர்ச்சியான பிரச்சனையாகவே உள்ளது. சமீபத்திய உலகளாவிய மதிப்பீடுகள் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சுமார் 160 மில்லியன் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கின்றன. இதில் சுமார் 63 மில்லியன் சிறுமிகளும் 97 மில்லியன் சிறுவர்களும் அடங்குவர்.
குழந்தைத் தொழிலாளர் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து குழந்தைகளிலும் கிட்டத்தட்ட பாதி பேர் - 79 மில்லியன் - அவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு நேரடியாக ஆபத்தை விளைவிக்கும் அபாயகரமான வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.
ஆசியா, பசிபிக், லத்தீன் அமெரிக்கா, கரீபியன் ஆகிய நாடுகளில், குழந்தைத் தொழிலாளர் சதவீதம் கீழ்நோக்கிய போக்கைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் குழந்தைத் தொழிலாளர்களில் ஈடுபடும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்போது, துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் கிட்டத்தட்ட 87 மில்லியன் குழந்தைகள் ஏதோ ஒரு வகையான குழந்தைத் தொழிலாளர்களாக உள்ளனர். இது உலகின் பிற பகுதிகளை விட அதிகம்.
உலகளவில், பெண்களை விட ஆண் குழந்தைகளே குழந்தைத் தொழிலாளர் தொழிலில் ஈடுபடுவது அதிகமாகக் காணப்படுகிறது. கட்டுமானம், சுரங்கம், உற்பத்தித் துறை ஆகியவற்றில் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளே அதிகமாக வேலை செய்கிறார்கள். அதே நேரத்தில் வீட்டு வேலைகள் உள்ளிட்ட சேவைத் துறைகளில் சிறுமிகள் குழந்தைத் தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர்.
வயதுக்கு ஏற்ப பாலின இடைவெளியும் குழந்தைத் தொழிலாளர் முறையில் அதிகரிக்கிறது. மேலும் சிறுவர்கள் தங்கள் பதின்ம வயதிலேயே (15 முதல் 17 வயது வரை) பெண்களை விட இரண்டு மடங்கு அதிகமாக குழந்தைத் தொழிலாளர்களாக உள்ளனர்.
ஆபத்தான வேலைகளில் குழந்தைகள் ஈடுபடுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். உலகளாவிய சவாலாக குழந்தைத் தொழிலாளர் முறை மாறிவருவது சமூக ஆர்வலர்களுக்கு மிகுதியான கவலையைத் தருகிறது.
ஒழியட்டும் குழந்தைத் தொழிலாளர் முறை என்பதே நம் அனைவரின் ஒருமித்த கோஷமாக இருக்கிறது.