
நம் உடல் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் என்றால் அதற்கான சக்தி நாம் எடுத்து கொள்ளும் உணவில் இருந்துதான் கிடைக்கிறது என்றால் நம்ப முடிகிறதா..? ஆமாம்...நாம் உண்ணும் உணவின் மூலமே உடல் சக்தி பெற்று, அதை எரிசக்தியாக மாற்றி உடலுக்கு தேவையான சக்தியை வெளிப்படுத்துகிறது. அதன் அடிப்படையில், உடலும் சுறுசுறுப்பாக இயங்குகிறது.
ஒருவரின் வாழ்க்கை முறை, யோகா பயிற்சி மற்றும் உணவு முறைகள் ஒருவரை சுறுசுறுப்பாக இயங்க உதவுகின்றன. அதோடு, நாம் தேர்வு செய்யக்கூடிய உணவுகள் மிக முக்கியமானது. நாம் எந்த உணவை சாப்பிட்டால் உடல் சுறுசுறுப்பாக இயங்கும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதேநேரத்தில், உணவின் அளவு அதிகமாக இருந்தாலும், அது உடலுக்கு சுறுசுறுப்பை தராது. அப்படி, ஒரு நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய ஆரோக்கிய உணவு முறைகள் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தேன் மற்றும் சூடு தண்ணீர் குடிப்பது சிறந்தது. இதனை தொடர்ந்து குடித்து வந்தால் உடலிற்கு தேவையான ஆற்றலை வழங்கி அந்நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது.
காலையில் அதிகமான பழங்களை எடுத்துகொள்வதாலும், எளிமையான உணவுகளை சாப்பிடுவதாலும் உடல் சுறுசுறுப்பாக இயங்கும்.
உடலிற்கு சுறுசுறுப்பை தருவதில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வாழைப்பழம், கொய்யாபழம், வெள்ளரிகாய், நெல்லிக்காய் போன்ற பழங்களை அதிக அளவில் எடுத்துகொள்வது அன்றைய நாளை சுறுசுறுப்பாக இயங்க உதவுகின்றன.
தொடர்ந்து, மதியம் நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் சாதம் குறைவாகவும், கீரைகள், பருப்பு வகைகள், காய்கறிகளை அதிகளவிலும் உட்கொள்ள வேண்டும். இது போன்று ஆரோக்கியமான முறையில் உணவை சாப்பிட்டால் மதிய வேளையிலும் நம்மால் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.
மாறாக, அதிகப்படியாக உணவு உட்கொண்டாலும், சாப்பிட்டவுடன் சூடு தண்ணீர் குடித்தால் உடல் சரியான முறையில் செரிமானம் ஆகி, சோர்வு ஏற்படாது. மேலும், மாலை உணவில் காபி குடிப்பதை தவிர்த்து புதினா டீ குடிப்பதை பழக்கமாக்கி கொள்ளலாம்.
அடுத்தப்படியாக, இரவு நேர உணவில் அதிக காரம் மற்றும் மசாலா நிறைந்த உணவுகளை தவிர்க்கவும். முடிந்த வரையில் ஆவியில் வேக வைத்த எளிமையான உணவுகளை எடுத்து கொள்வது சிறந்தது. குறிப்பாக, இரவு நேர உணவை 7 – 8 மணிக்குள் சாப்பிடுவதை வழக்கமாக்கி கொள்ளவது முக்கியம்.
இவ்வாறு, காலை முதல் இரவு வரை நாம் எடுத்து கொள்ளும் உணவின் முறைகள் ஆரோக்கியமாக இருந்தால், ஒரு நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க முடியும்.
அதுமட்டுமின்றி, எப்போதும் அரை வயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணி, கால் வயிறு வெறுமையாக வைத்திருக்க வேண்டியது முக்கியம். இது போன்று ஒரு மாத காலத்திற்கு உணவு முறைகளை மாற்றி அமைத்தால் உடல் நன்றாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்.