

மாணவர்கள் இன்னுமா இந்தச் சுமை தூக்கும் வேலையைச் செய்கிறார்கள்? பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் தினமும் பல பாடப்புத்தகங்கள், நோட்டுகள், பிற கூடுதல் பொருட்களை எடுத்துச்செல்கின்றனர். இதனால் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார வரம்புகளைவிட அவர்களின் தோள் பைகள் அதிக எடையுடன் இருக்கின்றன. இந்தப் பழக்கம் குழந்தைகளின் முதுகு, உடல் தோரணைக்கு மறைமுகமாக பிரச்னைகளை (school-bag-weight-children-health) ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல்; அவர்களின் மன நலனையும் பாதிக்கிறது. இதை எப்படி கையாளலாம்?
இதைத் தடுக்க அந்தந்தப் பள்ளிகள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள்:
1. கால அட்டவணையை மறுசீரமைத்தல் (Time table): மாணவர்கள் அன்றையத் தினத்திற்குத் தேவையான புத்தகங்களை மட்டும் எடுத்துச் செல்லும் வகையில் பள்ளிகள் கால அட்டவணைகளை வடிவமைக்க வேண்டும். இது தேவையற்ற சுமையைக் குறைக்கும்.
2. டிஜிட்டல் கற்றலைப் பின்பற்றுதல்: மின்-புத்தகங்கள் போன்று படிப்பதற்கு மட்டுமே செயல்படும் டேப்லெட்டுகளை (Tablet) அறிமுகப்படுத்துவது; குறிப்பாக உயர் வகுப்புகளுக்கு. இது பாடப்புத்தகங்களுக்கு மாற்றாக அமையும்.
3. பையின் எடையைக் கண்காணித்தல்: வளாகத்தில் எடை பார்க்கும் இயந்திரங்களை நிறுவுவது இந்தப் பிரச்னையை குறைக்கக்கூடும். சிறு வயது மாணவர்களின் பைகளைக் கண்காணிக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும்.
4. லாக்கர் வசதிகள்: லாக்கர்களை வழங்குவது மாணவர்கள் புத்தகங்களைச் சேமித்து வைக்கவும், அவற்றை தினமும் எடுத்துச் செல்வதைத் தவிர்க்கவும் உதவுகிறது.
5. பாடத்திட்டத்தை முறைப்படுத்துதல்: பள்ளிகள் தேவையற்ற குறிப்புப்புத்தகங்களைப் பரிந்துரைப்பதைத் தவிர்த்து, NCERT/SCERT-ஆல் அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்களையே பயன்படுத்த வேண்டும்.
பெற்றோர்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள்:
1. விழிப்புணர்வைக் கொடுங்கள்: தேவையானப் பொருட்களை மட்டும் எடுத்து வைக்க குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும். இதன்மூலம் அன்றைய தினத்திற்குத் தேவையானப் பொருட்களை மட்டும் நிர்வகிக்க அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கலாம்.
2. எடை குறைந்த பைகளை வாங்கிக்கொடுங்கள்: உடலுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட எடை குறைந்த முதுகுப்பைகளைத் தேர்ந்தெடுப்பது அவர்களின் சிரமத்தைக் குறைக்கும்.
3. ஆரோக்கியத்தைக் கண்காணித்தல்: முதுகு வலி அல்லது சோர்வுக்கான அறிகுறிகளைப் பெற்றோர்கள் கவனிக்கவேண்டும். தேவைப்பட்டால் இது குறித்த புகார்களைப் பள்ளிகளிடம் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.
4. பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளைச் சமநிலைப்படுத்துதல்: கல்விச் சுமையால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் குழந்தைகளின் விடுமுறை நாட்களில் உடற்பயிற்சி, ஆக்கப்பூர்வமான கற்றல்கள் ஆகியவை இடம்பெறுவதைப் பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும்.
கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்:
கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்போது கல்விச்சுமையைவிட மாணவர்களின் நல்வாழ்வுக்குத்தான் பெற்றோர்கள் முதலில் முன்னுரிமை அளிக்கவேண்டும். மாணவர்களின் தோல் பையின் எடை அவர்களின் உடல் எடையில் 10 சதவீதமாக இருக்கவேண்டும் என்று NCERT-யின் பள்ளிப் பை கொள்கை(School Bag Policy) சொல்கிறது.
இப்படி பள்ளிகள் NCERT-இன் 10% விதியை அமல்படுத்துவதன் மூலமும், பாதுகாப்பான டிஜிட்டல் விஷயங்களைப் பயன்படுத்துவதன் மூலமும், பள்ளிகளுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே ஒத்துழைப்பை வளர்ப்பதன் மூலமும்; இந்தியா ஒரு ஆரோக்கியமான, சமநிலையான கல்விக் கலாச்சாரத்தை நோக்கி நகரமுடியும். இந்த மாற்றம் என்பது எடை குறைந்த பைகளைப் பற்றியது மட்டுமல்ல; இது முற்றிலும் குழந்தைகளுக்கு மன அழுத்தமில்லாத, முழுமையான கற்றல் சூழலை உருவாக்குவதின் தேவை பற்றியது.