
கர்நாடக சங்கீத உலகில் இசைக்கச்சேரிகளை பல வருடங்களாக தொடர்ந்து ரசித்து வரும் ஒரு ரசிகருக்கு, தான் பெற்ற இன்பத்தை மற்றவர்களுடன் தன்னுடைய நகைச்சுவையான துணுக்குகள், கட்டுரைகள் மூலம் பகிர்ந்துகொள்ளும் ஒரு விமர்சகருக்கு ‘ரசிக சிரோமணி’ என்ற பட்டம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆம். நாராயணன் வேதாந்தம் அவர்களுக்கு இந்த விருதினை வழங்கியவர்கள் அமெரிக்காவின் விஸ்கான்சின் மாவட்டத்தைச் சேர்ந்த ‘Sci Art Services ‘என்ற ஒரு தொண்டு நிறுவனம். விஞ்ஞானம், தொழில்நுட்பம், கலைகள், கணிதம், இசை, இவை அனைத்தும் எல்லா தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் தொடங்கப்பட்டது இந்த அமைப்பு. பொருளாதார ரீதியில் பின்தங்கிய ஆர்வமுள்ள மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி ஊக்குவிக்கிறார்கள்.
இந்நிறுவனத்தில் தூண்களாக இதன் நிறுவனர்கள் பேராசிரியர் கிருஷ்ணன் சுரேஷ், திருமதி வனிதா சுரேஷ் இருவரும் தீபிகா ராஜேஷ், ரேவதி சுப்பிரமணியன், ப்ரீத்தி நரசிம்மன் மற்றும் பல அறிவியலாளர்கள் கலை ஆர்வலர்கள் இசைக்கலைஞர்களுடன் ஒன்றிணைந்து செயல்படுகிறார்கள்.
இது சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதோடு சங்கீதத்தைப் பொருத்தவரை பலவிதமான விருதுகளையும் இவர்கள் வழங்கி வருகிறார்கள். இசைத்துறையில் பல வருடங்களாக தமது பங்களிப்பை வழங்கிய இசைக்கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் வெங்கட்ராமன் மெமோரியல் விருது வழங்கப்பட்டிருக்கிறது.
2021 ஆம் வருடம் தொடங்கி இசை ரசிகர்களை கௌரவப்படுத்தும் வகையில் அவர்கள் வழங்கி வருவதுதான் ‘ரசிக சிரோமணி’ விருது.
2024 ஆம் ஆண்டிற்கான விருது நம் கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு பரிச்சயமான நாராயணன் வேதாந்தம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறு வயது முதலே இசைச் சூழலில் வளர்ந்த இவருக்கு நம் சங்கீதத்தின் மீது நாட்டம் அதிகம். வருடம் முழுவதும் இசைக்கச்சேரிகள் கேட்பதோடு இசை விழா என்றால் அந்த மார்கழி மாதம் முழுவதுமே சென்னை சபாக்கள் இவருடைய இல்லம் ஆகிவிடும்.
ஒவ்வொரு கச்சேரியையும் தான் ரசிப்பதோடு, தான் ரசித்ததை மற்ற ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் இவருடைய பாங்கைப் பாராட்டி இந்த ரசிக சிரோமணி விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. சித்திரவீணா நரசிம்மன் அவர்களின் மனைவியும், சங்கீதக் கலைஞர்கள் சித்ர வீணா ரவிகிரண், இசைக்கலைஞர்கள் சசிகிரண் மற்றும் கீர்ணாவளி ஆகியோரின் தாயுமான திருமதி சூடாமணி அவர்களின் பெயரில் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
மிகுந்த இசை ஆர்வம் மிக்க இவர் பெயரால் இவ்விருது ‘ரசிக சிரோமணி’ என்ற இசை ரசிகர்களைக் கொண்டாடும் விருது வழங்கப்பட்டது மிகப் பொருத்தமாக இருந்தது. விருதுக்கான கேடயத்துடன் 500 அமெரிக்க டாலர்களும் இவர்களுக்குப் பரிசாக வழங்கப்பட்டது. விருது பத்திரத்தை வாசித்து, விருதினை வழங்கினார் சங்கீத கலாநிதி நெய்வேலி ஆர் சந்தானகோபாலன்.