
ஏதோ அணிவகுப்புபோல சாலையின் இரு பக்கங்களிலும் பலதரப்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ஐம்பதடி அகலமுள்ள அந்த சாலை இந்த ஆக்கிரமிப்பால் முப்பது அடியாக சுருங்கிவிட, நடுவே எதிரும் புதிருமாக வந்த பிற வாகனங்கள் திணறின. ஏதேனும் ஒரு வாகனம் தன் வரிசையை முந்திச் செல்ல, அதே எண்ணத்தில் எதிர் தரப்பிலிருந்தும் ஒரு வாகனம் வர, அவ்வளவுதான், நெருக்கடி, நெரிசலாகி, யாருக்கும் யாரும் இடம் விட முடியாத இடியாப்பச் சிக்கல்!
ஏன் அவ்வாறு வாகனங்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்?
பெரும்பாலும் அதே தெருவில் வசிப்பவர்கள் தமது கார்களை தம் குடியிருப்புக்கு அருகிலேயே சாலையில் நிறுத்திவிடுவதால்தான்! முப்பது வருடங்களுக்குமுன் அந்த அடுக்ககங்களில் சொந்தமாக ஃப்ளாட் வாங்கியவர்கள், டூவீலர், ஸ்கூட்டர் போன்ற சிறு வாகனங்களை மட்டுமே வைத்திருந்தார்கள். அதனால் அதே கட்டடத்திற்குள் ஒவ்வொரு ஃப்ளாட் உரிமையாளரும் உபயோகித்துக் கொள்ளத்தக்க வகையில் அவரவருக்கென தனியாக வாகன நிறுத்துமிடம் ஒதுக்கப்படவில்லை. ஆனால் நாளாவட்டத்தில், பொருளாதார நிலை உயர்ந்ததாலும், எளிதான நிபந்தனைகளுடன் பெருந்தொகை கடனாகக் கிடைத்ததாலும் அதே அபார்ட்மென்டில் வசித்தவர்கள், கார் வாங்கிக் கொள்ள ஆரம்பித்தார்கள். சைக்கிளுடனோ, டூவீலருடனோ வாழ்க்கையை ஆரம்பித்த அவர்கள், இப்போது இந்தப் பெரிய வாகனத்தை எங்கே நிறுத்துவது என்று புரியாமல், தமது அடுக்ககம் உள்ள சாலையிலேயே நிறுத்திவிட்டார்கள்.
இந்த நெருக்கடி போதாதென்று, அந்தத் தெருவிலோ அல்லது பக்கத்துத் தெருவிலோ இருக்கக்கூடிய கடைகளுக்கு வருகை தருபவர்களும் தமது வாகனங்களை அதே தெருவில் நிறுத்தி விடுகிறார்கள். குறிப்பிட்ட கடைகளில் வாகன நிறுத்த வசதி இல்லையென்பதால் ஓரிரு தெருக்களைக் நடந்து சென்றாலும் பரவாயில்லை என்று எங்கே இடம் கிடைக்கிறதோ அங்கே தமது வாகனங்களை நிறுத்தி விட்டுச் சென்றுவிடுகிறார்கள். அவர்களுடைய வேலை அரை மணிநேரத்தில் முடிகிறதோ, அல்லது இரண்டு மணி நேரமாகுமோ, அதுவரை அந்த வாகனங்கள் அங்கேயேதான் நிற்கும்; அதனால் இந்தச் சாலையில் போக்குவரத்தும் பாதிக்கப்படும்.
ஒரு கடைப்பகுதி என்றால், அதுவும் பலமாடிக் கட்டிடத்திற்குள் இயங்கும் பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோர் என்றால், அங்கே வேலை செய்பவர்களும், அதே கட்டடத்தில் புழங்கும் வேறு பலரும் தம் வாகனங்களை சாலையில் நிறுத்துவார்கள்; அதோடு, வாடிக்கையாளர்களின் வாகனங்களும் சாலையை பங்கு போட்டுக் கொள்ளும். கடைகளைப் பொறுத்தவரை, வியாபாரத்துக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம், வாடிக்கையாளர்களின் வசதிகளுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்பது பொதுவான உண்மை. சில பெரிய கடைகள் தமக்கென அடித்தளத்திலோ அல்லது பக்கத்துத் தனி இடத்திலோ அவ்வாறு வாகனங்களை நிறுத்த வசதிகள் செய்து தருகின்றன. இந்த இடமும் நிறைந்துவிட்டால், அடுத்து வரும் வாகனங்கள் பிஸியான சாலைகளைத்தான் தஞ்சமடைகின்றன.
இத்தகைய வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பகுதிகளில், மாநகராட்சி தரப்பில், வாகன நிறுத்த மாடி கட்டடங்களை நிறுவ, திட்டம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதனால் குறுகிய இடத்தில் அதிக எண்ணிக்கையில் வாகனங்களை நிறுத்தலாம். அடுக்கு மாடி கட்டடமாக உருவாகும், இந்த வாகன நிறுத்துமிடங்கள் இப்போதைக்கு நகரில் இரு இடங்களில், ஒவ்வொன்றும் 2500 சதுர மீட்டர் பரப்பில் அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொன்றிலும் நான்கு சக்கர வாகனங்கள் 200, இரு சக்கர வாகனங்கள் 300 என்ற எண்ணிக்கையில் நிறுத்தலாம்.
தானியங்கி முறையில், அடுக்குகளில், ஒவ்வொரு வாகனத்தையும் உயரே எடுத்துச் சென்று அதற்கென்று குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி வைக்கலாம். நம் வேலைகளை முடித்துவிட்டு திரும்ப வந்து அதே தானியங்கி முறையில் அந்த வாகனத்தைக் கீழிறக்கி, பிறகு நாம் ஓட்டிச் செல்லலாம். வாகன வடிவை உத்தேசித்து ஒரு மணிநேரத்துக்கு இத்தனை ரூபாய் என்று கட்டணமும் வசூலிக்கப்படும்.
இந்த ஏற்பாடு முழுமையாக நிறைவேறுமானால், வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும், அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலாலும் உண்டாகும் மூச்சுத் திணறலிலிருந்து சாலைகள் விடுதலை பெறமுடியும்.
மாநகராட்சி திட்டம் நிறைவேறுமா? கால தாமதமின்றி செயலாற்றப்படுமா?