அரசியல் தலைவர்களின் இந்த 'தனித்துவ' குணங்கள் மக்களை ஈர்ப்பது எப்படி?

மனித மனத்தின் புதிர் செயல்பாடுகள் முதல் அரசியல்வாதிகளின் புன்முறுவலும் நிமிர்ந்த நடையும் வரை – கேரள முதல்வர் வி.டி. சதீசனின் சிரிப்பும், மணீஷ் சிசோடியா-ராஜ்நாத் சிங் நடையும் பேசுபொருளாகும் கட்டுரை
Indian Politicians Body Language
Indian Politicians Body LanguageAI Image
ரெ. ஆத்மநாதன்

எழுத்தாளர் ரெ.ஆத்மநாதன் பொருளாதாரத்திலும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். கதை, கவிதை, நாடகம் என்று முத்தமிழுக்கும் பணி செய்பவர். கதை, கவிதைகளை மாத,வார, ஆன்லைன் இதழ்களில் எழுதி வருபவர். இவரின் 4 நாடகங்கள் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களால் ஒலி பரப்பப் பட்டன. இளங்கலை முதலாண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் (1972-73) மாநில முதன்மை பெற்றவர்.பட்டி மன்றம், கவியரங்கம் ஆகியவற்றில் பங்கேற்பவர். அமெச்சூர் நாடகங்களில் நடித்தவர். தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி முன்னவராகச் சேர்ந்து, அத்துறையின் பொறுப்பு இயக்குனராக ஓய்வு பெற்றவர். “தொடர்கதைகளும் முற்றும்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

Updated on
Kalki Strip
Kalki Strip

நமது மனித இனம் இருக்கிறதே, அதன் செயல்பாடுகள் பல சமயங்களில் புதிராகவே இருக்கும்! நமக்கே கூட அதன் தாக்கத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது. கூட்டமான பேருந்துப் பயணத்தின்போது, புதிதாக ஏறும் ஒருவருக்கு எழுந்து இடம் கொடுக்க நினைக்கும் மனது, பக்கத்திலேயே பல நிமிடங்கள் அல்லாடுபவரை உட்காரச் சொல்ல இடம் தராது. இதற்கெல்லாம் காரணங்களை ஆராயப் புகுந்தால் விடை கிடைக்காது. ’என்னவோ மனசு அப்படித்தான் நினைக்கிறது!’ என்ற தெளிவற்ற நிலையே உள்ளத்தில் ஊடாடும். விருப்போ, வெறுப்போ சில சமயம் இரண்டிற்குமான காரணத்தை எளிதில் கண்டறிய இயலாது.

சிலர் காதலில் விழுவதற்கும், பின்னர் அது ‘பிரேக்-அப்’ ஆகிப் போவதற்கும் கூட இந்த மனநிலையே காரணமாக அமைந்து விடுவதுண்டு.

காதலில் மட்டுமின்றி நட்பிலும், தலைவன்-தொண்டன் தோழமையிலும் கூட இதன் செயல்பாடுகள் பலருக்குச் சிறப்பினை நல்குவதுண்டு. அரசியல்வாதிகளில் இந்தத் தன்மை கொண்டவர்கள் மிகச் சுலபமாக மக்கள் மனதில் இடம் பிடித்து விடுவதுண்டு.

V.T. Satheesan and Rajnath Singh
V.T. Satheesan and Rajnath Singh

ஐந்து மாநிலத் தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. சில இடங்களில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டு, புதிய அமைச்சரவைகள் பரபரக்கின்றன! நமது மாநிலத்தைப் போலவே அண்டை மாநிலமான கேரளத்திலும் ஆள்வோர் மாற்றப்பட்டிருக்கிறார்கள். இங்கு போலவே அங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்கள், அவர்களுக்கு முன்பு ஆண்டவர்களையும் முக்கியத் தலைவர்களையும் அவர்களின் இல்லங்கள் தேடிச் சென்று சந்தித்து ஆசி பெற்று, அரசியல் நாகரிகத்தைத் தக்க வைத்துள்ளார்கள். இது மிகவும் வரவேற்கத்தக்க பெரும் நிகழ்வு! இது வருங்காலங்களிலும் தொடர வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

இந்நிலையில், கேரள புதிய முதல்வர் வி.டி.சதீசன் அவர்களின் சிரிப்பு ட்ரெண்டிங் ஆகி வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. முகத்திற்கு அழகு சேர்ப்பது சிரிப்புதான் என்று நம் சமுதாயம் பல காலமாகவே சொல்லி வருகிறது. அதனை நிரூபிப்பது போலவே அவரின் சிரிப்பும் அமைந்துள்ளது. 61 வயதான (31-05-1964) அவரின் புன்முறுவல் ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. சில தலைவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் சிறப்பு இது!

இவரின் சிரிப்பு அனைவரையும் ஈர்க்கவல்லது என்றால், இன்னொருவரின் நடை அலாதித் தன்மை கொண்டது. ’நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும்’ ஆண்களின் இலக்கணம் என்பார்கள். ’ஏறு போல் பீடு நடை’ என்பார்கள்.

எங்கள் சிறு வயதில் வயல்களில் ‘பசுக் கிடைகள்’ போடுவார்கள். அவற்றில் இருக்கும் ஒன்றிரண்டு காளைகள் ராஜநடை நடந்து வருவதைப் பார்க்கவே ஒரு கூட்டமே நின்று கொண்டிருக்கும். இப்பொழுதெல்லாம் ஜல்லிக்கட்டுகளில் சில காளைகளிடம் அதனைக் காண முடிகிறது. ஆனால், கிடைக்காளைக்கும் ஜல்லிக்கட்டுக் காளைக்கும் ஒரு சூழ்நிலை வேறுபாடுண்டு. கிடைக்காளைகள் சுதந்திரமாக நடந்து வரும்; ஜல்லிக்கட்டுக் காளைகளோ சுற்றி நிற்கும் கூட்டத்தினரைக் கண்டு மிரண்டே வருகின்றன.

கட்சியின் முக்கியத் தலைவரோ, துணை முதல்வரோ, சிறை வாழ்க்கையோ... எதிலிருந்தபோதும் அந்த நடையில் என்றும் மாற்றமில்லை! அவர்தான் ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான மணீஷ் சிசோடியா! 54 வயதான இவர் (05-01-1972) பல மேடு பள்ளங்களைச் சந்தித்தவர்.

நிமிர்ந்த நடையின் சொந்தக்காரர் இன்னொருவரும் இருக்கிறார். நமது உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறந்த இவர், இந்திய நாட்டின் பாதுகாப்புத் துறையைத் தன் வசம் வைத்துள்ளார். 74 வயதாகும் இவர் (10-07-1951) பல சிறப்புகளைக் கொண்டவர். அவர் நமது பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவர்கள்தான்.

இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிறப்பை நல்குவார் போலும். சிரிப்பும், நடையும் எளிதாக எல்லோருக்கும் தெரியும் இயற்கை ரகசியங்கள். ரகசியங்கள் அம்பலமாகையில் அதற்கொரு சிறப்பு ஏற்படுவது இயல்புதானே!

logo
Kalki Online
kalkionline.com