மூத்த குடிமக்களே, ஜாக்கிரதை! உங்கள் சொத்து உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கட்டும்!

Senior citizens Property
Senior citizens Property

இன்று நான், நாளை நீ 

- முனைவர் என்.பத்ரி 

ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை கணிப்புகளின்படி, 2019 இல் உலகின் 70.3 கோடி மக்கள் 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள். இது உலக மக்கள்தொகையில் 16% ஆகும். உலக முதியோர் மக்கள் தொகையில் இந்தியாவின் இடம் இரண்டு ஆகும். இந்திய அரசு 1999 ஆம் ஆண்டு வகுத்துள்ள வயதானோருக்கான தேசிய கொள்கை 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரை மூத்த குடிமக்கள் என்று வரையறுத்துள்ளது.  

 நாட்டில் தற்போது கேரள மாநிலத்தில் மொத்த மக்கள்தொகையில் முதியவர்கள் 16.5 விழுக்காடும், அடுத்த இடத்தில் தமிழகத்தில் 13.6 விழுக்காடுமாக இருக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் இமாச்சல் (13.1%), பஞ்சாப் (12.6%), ஆந்திரா (12.4%) ஆகிய மாநிலங்கள் உள்ளன. இதேபோல, நாட்டிலேயே முதியவர்கள் மிகக் குறைவாக கொண்ட மாநிலங்களின் பட்டியலில் பீஹார் (7.7விழுக்காடு) முதலிடத்திலும்,அடுத்தடுத்த இடங்களில் உத்தரபிரதேசம் (8.1%), அசாம் (8.2%) ஆகிய மாநிலங்களும் இருக்கின்றன. 

வரும் 2031-ல் அதிக பட்சமாக கேரளாவில் 20.9%, முதியவர்களும், தமிழகத்தில் 18.2%, இமாச்சலில் 17.1%, ஆந்திராவில் 16.4%, பஞ்சாபில் 16.2% என்ற வீதத்தில் முதியவர்களின் எண்ணிக்கை இருக்கும் என இந்த புள்ளிவிவர ஆவணம் கூறுகிறது. மாநிலத்தில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது அங்கு வளர்ந்த பொருளாதாரம், மருத்துவ வசதிகள் இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.

முதியோர் சிலர் குடும்பத்தினரோடும், சிலர் தனித்தும் வாழ்கின்றனர். வசதி படைத்தவர்கள் தம் கடமைகள் முடிந்த பிறகு, முதியோர் இல்லங்களில் காலம் கழிக்கின்றனர். இது நாகரீக உலகத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. அன்புடனும் பொறுமையுடனும், குடும்பத்திற்கு உதவியாகவும் உள்ள பெற்றோர்களே, பிள்ளைகளின் குடும்பத்தில் நீடித்து நிலைக்கின்றனர்.

இந்தியாவில் பெற்றோர்களிடமிருந்து எல்லா உடைமைகளையும் பயமுறுத்தி பறிக்கும் இரக்கமற்ற பிள்ளைகளும் உள்ளனர். பிள்ளைகளுக்கு தங்கள் சொத்துக்களை எழுதிக்கொடுத்தும் பெற்றோர்கள் சரிவர பராமரிக்கப்படுவதில்லை. சில குடும்பங்களில் பிள்ளைகள் வெளிநாடுகளுக்கு சென்று விடுகிறார்கள். உடல் மற்றும் மனத்தின் பலகீனம், மறதி, காரணமில்லாத எரிச்சல், கோபம், முதுமை கொண்டு வரும் நோய், உடல் தளர்வு, மற்றவர்களின் புறக்கணிப்பு, வாழ்க்கைத்துணையின் இழப்பு, தனிமை, வறுமை,சமூக அந்தஸ்தில் சரிவு போன்றவை முதியோர் எதிர்நோக்கியுள்ள முக்கிய சவால்களாகும்.

முதுமையில் மருத்துவ சிகிச்சைக்கான செலவுகள் அதிகமாக வாய்ப்புகள் அதிகம். எனவே வாய்ப்புள்ள அரசு மற்றும் இதர மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களில் அவர்கள் இணைவது பெருத்த மனநிம்மதியைத் தரும். உடலும், மனமும்  அனுமதிக்கும் காலம் வரை அனுபவம் உள்ள ஏதேனும் ஒரு பகுதி நேர பணியில் சேரலாம்.  

எந்த நிலையிலும் உயிருடன் இருக்கும்வரை தனக்கு  சொந்தமான சொத்து, வங்கிப்பணம் போன்றவற்றை தங்களது வாரிசுகள் பெயரில் மாற்றக் கூடாது. அவைகள் முதியவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளவரைதான் அவர்களுக்கு  ஒரளவு  வாரிசுகளின் ஆதரவுகள் கிடைக்கும்.

தங்களை பராமரித்துக் கொள்ள போதுமான பொருளாதார வசதி  மற்றும் சொத்துக்கள் எதுவும் இல்லாத நிலையில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் 2007ன் கீழ் அவர்களின் மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள் ஆகியோரிடமிருந்து பராமரிப்புத் தொகையினை சட்டப்படி பெற முடியும்.

இதையும் படியுங்கள்:
கள்ளச்சாராயத்தை ஒழிக்கணுமா? இத முதல்ல தடை செய்யுங்க பாஸ்!
Senior citizens Property

பிள்ளைகள் இல்லாத மூத்த குடிமக்கள் தனது சொத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர் அல்லது தனது காலத்திற்குப் பிறகு தனது சொத்தை அடைய இருப்பவர் ஆகியோர் மீதும் பராமரிப்புத் தொகை கோரி மனு செய்யலாம். சார்ந்த கோட்டாட்சியர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ஓர் உரிமையியல் நீதிமன்றத்திற்கு சமமான தீர்ப்பாயத்தில் இதற்கான மனுவினை தாக்கல் செய்யலாம். தீர்ப்பாயம் மூத்த குடிமக்களுக்கு தேவையான உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ வசதி மற்றும் சிகிச்சை ஆகியவற்றை பெறுவதற்கு தேவையான பாரமரிப்புத் தொகையை பெற்றுத்தரும்.      

முதியோர்கள் தங்களுக்கான  அரசின் சலுகைகளை  பயன்படுத்திக் கொள்வதில் மேலும் அதிக முனைப்புடன்  செயல்பட வேண்டும். முதியோரை பாதுகாக்க, தனியாக வாழும் முதியோர்களின் தொடர்பு எண்களை இளைஞர்கள் அறிந்து கொள்ளலாம். அவற்றை அவர்களுக்கான அரசின் உதவி எண்களில் அளித்து அவர்களிடையே தொடர்பு ஏற்படுத்தி உதவலாம்.  

உள்ளாட்சி நிர்வாகங்கள் ஒவ்வொரு ஊரிலும் முதியோருக்கென சமுதாய மையம் ஒன்றை துவங்கிடலாம். அவ்வப்போது அவர்களின் உடலை பரிசோதிக்க நடமாடும் மருத்துவமனை,  உணவு, படிக்க நாளேடுகள், வானொலி,  தொலைக்காட்சி போன்றவற்றை  ஊராட்சிகள் மூலம் அரசு இலவசமாக அளிக்கலாம். முதியோர் பராமரிப்பு துறையில் சமூக அறிவியல் ஆராய்ச்சியை அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் இந்திய சூழ்நிலைக்கு ஏற்ற திட்டங்களையும் கொள்கைகளையும் நாம் கொண்டு வர முடியும்.  அதிகரித்து வரும் முதியோர் மக்கள்தொகைக்கேற்ப, நமது திட்டங்கள் மற்றும் கொள்கைகளும் மாற வேண்டியது உடனடித் தேவையாகும். 

சமுதாய ரீதியிலும் இதுகாறும் காலம் பார்க்காமல் பலனையும் எதிர்பார்க்காமல் உழைத்து வந்த முதியவர்கள் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழவேண்டும். அப்போதுதான் இந்தியாவை முழுமையான வளர்ச்சிஅடைந்த ஒரு நாடாக கருதமுடியும். இன்றைய இளைஞர்களே நாளைய முதியவர்கள் என்பதை அனைவரும் உணரவேண்டும். அது ஆரோக்கியமான உறவுகளை ஏற்படுத்தும். 

முதியோர்கள் தங்களுக்கு  தேவையான உதவிகளைப் பெற சென்னையில் கட்டணமில்லா உதவி எண்ணான 1253யும், சென்னை தவிர பிற மாவட்டங்களில் 1800-180-1253 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். தேசீய அளவில் 14567 என்ற என்ணையும்  தொடர்பு கொள்ளலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com