பிறந்த முதல் நாளிலிருந்தே, குழந்தைகள் தங்கள் புலன்கள் மூலம் உலகை ஆராயத் தொடங்குகின்றனர். இதுவே அவர்களுடைய இயல்பாகும். ஒரு குழந்தையின் கல்விப் பயணம் பார்த்தல், கேட்டல், சுவைத்தல், நுகர்தல், தொடுதல் ஆகிய ஐம்புலன்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்போது அது அக்குழந்தையின் வளர்ச்சியைத் துரிதப்படுத்துகிறது. ஐந்து புலன்களை ஈடுபடுத்த உதவுவதுடன் விளையாட்டின் மூலம் கல்வி கற்பது அவர்களின் மொழித் திறன் மற்றும் உடலியக்கத் திறனை அதிகரிக்கிறது. மேலும், ஒரு குழந்தையின் படைப்பாற்றல், ஆர்வம், அறிவாற்றல் ஆகியவை வளர்வதற்கு வழிவகுக்கும்.
ஐம்புலன்களையும் பயன்படுத்தும் குழந்தைகள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றி அதிகம் கற்றுக்கொள்கின்றனர். அவர்களால் சுற்றுச்சூழலுடன் தொடர்புகளை எளிதாக உருவாக்கிக்கொள்ள முடிகிறது. உணர்திறன் செயலாக்கக் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்குப் புலன் சார்ந்த விளையாட்டுகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன.
குழந்தையின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புலன்களை ஈடுபடுத்தும் எந்த வகையான விளையாட்டுகளும் புலன் சார்ந்த விளையாட்டுகள் என்று கூறப்படும். சுற்றுச்சூழலைப் பற்றிக் கற்க, குழந்தைகள் பார்த்தல், கேட்டல், சுவைத்தல், நுகர்தல், தொடுதல் என்ற அவர்களுடைய ஐம்புலன்களைப் பயன்படுத்த வேண்டும். சில குழந்தைகள் புலன் சார்ந்த நடவடிக்கைகளைப் புரிந்துகொண்டு அவற்றை ஒழுங்கமைத்துக்கொள்ள சிரமப்படலாம். ஆனால், புலன் சார்ந்த விளையாட்டுகள், எல்லா குழந்தைகளுக்கும் நன்மை அளிக்கின்றன.
சுயசிந்தனை, உடலியக்கத் திறன் வளர்ச்சி, நினைவாற்றல், அறிவாற்றல், மொழி வளர்ச்சி போன்றவை மேம்படும் வகையில் புலன் சார்ந்த விளையாட்டுகள் அமைகின்றன. புலன் சார்ந்த விளையாட்டுகளுக்கு பொம்மைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. புலன் சார்ந்த விளையாட்டுகள் மொழி வளர்ச்சியை ஊக்குவிக்குமாறு இருக்க வேண்டும். குழந்தைகள் பல்வேறு வகையான இழைமங்கள், சுவைகள் மற்றும் பொருள்களுடன் விளையாடுவதால் உலகத்தைப் பற்றிப் பேசுவதற்கான புதிய வழிகளை உருவாக்கலாம். பார்ப்பது, சுவைப்பது, நுகர்வது, கேட்பது அல்லது தொடுவது போன்றவற்றைப் பற்றி அவர்களால் நன்கு விவரிக்க இயலும்.
புலன் சார்ந்த விளையாட்டுகள் குழந்தைகளின் சொற்களஞ்சியத்தை விரிவாக்கும். புலன் சார்ந்த விளையாட்டுகள் ஒரு குழந்தையின் இயக்கத் திறன்களை ஊக்குவிக்க வேண்டும். ஒரு குழந்தையின் ஆரம்பக் கல்வி பயணத்தில் பெருந்தசை இயக்கத் திறன், நுண்தசை இயக்கத் திறன் என இரண்டு முக்கிய உடலியக்கத் திறன் வகைகள் உள்ளன.
பெருந்தசை இயக்கத்திறன் கைகள், கால்கள், இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியிலுள்ள உடலின் பெரிய இயக்குத் தசைகளைக் கொண்டு ஓடுதல், நடை பயிற்சி போன்ற செயல்களுக்குப் பொறுப்பாகும்.
நுண்தசை இயக்கு திறன், எழுதுவது, காலணிகள் அணிவது போன்ற கை, கால் நரம்புகளையும் தசைகளையும் வலுவாக்கும் நடவடிக்கைகளின் மூலம் திறம்படச் செயல்பட வைப்பதாகும்.
புலன் சார்ந்த விளையாட்டுகள் அமைதியை நிலைநாட்ட வேண்டும். குளியல், செல்லப் பிராணிகளுடன் அமர்ந்து விளையாடுதல் போன்ற நிதானமான நடவடிக்கைகள் குழந்தைகளுக்கு அமைதியைத் தரும். சலிப்பு, அமைதியின்மை, கிளர்ச்சி போன்ற அசௌகரியத்தைக் கையாள இதுபோன்ற அமைதியான நடவடிக்கைகள் பெரிதும் உதவும்.
புலன் சார்ந்த விளையாட்டுகள் ஒரு குழந்தையின் மொழி மற்றும் உடலியக்கத் திறன்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு முக்கியமான கருவியாகும். உணவு நேரங்களில்கூட குழந்தைகள் தங்களது ஐம்புலன்களைக் கற்றலுக்குப் பயன்படுத்தலாம். ஒவ்வொரு நாளும் இந்தத் திறன்களைப் பயன்படுத்தக் குழந்தைகளை ஊக்குவிப்பது அவசியம்.