ஒவ்வொரு மனிதனும் காலை எழுந்தவுடன் முதலில் பயன்படுத்தும் இடம் கழிப்பறைகள். ஆனால் வசதியானவர்கள் வீட்டில் உள்ள கழிப்பறை வசதிகள் ஏழை எளிய மக்களுக்கு எளிதில் கிடைப்பதில்லை.
இந்தியாவில் பெரும்பாலான பெண் குழந்தைகள் படிப்பை நிறுத்த போதிய கழிப்பறை வசதி இல்லாத பள்ளிகளே காரணமாகின்றன. அனைத்து ஊரகப் பகுதிகளிலும் சுகாதார வசதிகளை ஏற்படுத்தி, திறந்தவெளியில் மலம் கழித்தலை அடியோடு ஒழிப்பதை உறுதி செய்தல் வேண்டும். இதற்காக மத்திய, மாநில அரசாங்கங்கள் கழிப்பறைக் கட்ட வழங்கும் மானியத்தை பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பண்டைக் காலங்களில் தங்களுடைய காலை கடன்களை வெளிப்புறங்களில் கழித்து வந்த மக்கள், நாகரிகம் உயர்ந்த பிறகு ஓலைகளால் தடுப்பு ஏற்படுத்தி குழி கழிப்பறைகளை பயன்படுத்தினர். பின்னர் வயதானவர்களும் நோயாளிகளும் பயன்படுத்தும் பொருட்டு உட்கார்ந்து கொண்டே மலம் கழிக்கும் விதத்தில் புதிய பீங்கானால் ஆன கோப்பைகளாக இந்திய மற்றும் மேற்கத்திய கழிப்பறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கால் சட்டையை முழுவதுமாக கழட்டாமல், சிறதளவு கழட்டி விட்டு, அப்படியே அமருவதற்கு வசதியாக இருந்ததால், மேற்கத்திய கழிப்பறைகளுக்கு சந்தையில் பெருத்த வரவேற்பு இருக்கிறது. முழு கால் சட்டை அணியும் பெண்களுக்கும் இது வசதியாக இருக்கிறது என்பதால், இதுவே தற்போது அதிகமாக பயன்படுத்தப்பட்டும் வருகின்றது.
இந்த மேற்கத்திய கழிப்பறைகள் பயன்படுத்துபவர்களை நோய்கள் அதிகமாக தாக்கும் அபாயம் இருப்பதால், அமரும் பகுதியின் மீது துணியையோ, காகிதத்தையோ விரித்து விட்டு பயன்படுத்துவது நல்லது. நம்முடைய தேவை முடிந்து விட்டபிறகு, அதை முறையாக தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யாமல் செல்லக் கூடாது. ஒவ்வொருவரும் பயன்படுத்திய பிறகு, தாங்களாகவே சுத்தம் செய்யும் போது அருவருப்பை தராது. பின்னர் வருபவர்களும் அதை பார்த்து சுத்தம் செய்து விட்டு செல்வர்.
கால்களை தரையில் வைத்து அமரும் விதத்தில் குறைந்த அளவு எடையை தாங்கும் விதத்தில்தான் அந்த கோப்பைகள் வடிவமைக்கபட்டுள்ளன. எனவே,அவற்றை பயன்படுத்தும் போது கூடுதல் கவனம் தேவை. ஆனால், உடல்நலத்திற்கு இந்திய கழிப்பறை பயன்பாடே நல்லது எனக்கூறப்படுகிறது.
கிராமங்களை விட நகர்ப்புறங்களில்தான் பொது கழிப்பறைகளின் தேவை மிக அதிகமாக இருக்கிறது. பொதுவாக நகரங்களில் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களை அதிகமாக கொண்ட பகுதிகளில் பொது கழிப்பறைகள் கட்டப்பட்டுகின்றன. ஆனால் அவை பலவற்றில் கதவுகள் கிடையாது. கதவுகள் இருந்தாலும் தாழ்பாட்கள் கிடையாது. பல கழிப்பறைகள் பூட்டப்பட்டே இருக்கின்றன. பல கழிப்பறைகளில் மின்சார வசதியும், கழிப்பறையை சுத்தம் செய்ய பொருட்களும் கிடையாது. கட்டணம் வசூலிக்கும் கழிப்பறைகளும் பயன்பாட்டுக்கு உகந்தவையாக இருப்பதில்லை. முறையாக பராமரிக்கப்படாத கழிப்பறைகளால் முதியவர்களையும் குழந்தைகளையும் பெண்களையும் எளிதில் தாக்கும் சிறுநீரக தொற்று போன்ற நோய்கள் ஏற்படலாம்.
பொதுக் கழிப்பறைகளை பொருத்தவரை, தனியாக அதற்கென ஒரு துறை இல்லை. சுகாதாரத்துறை, மின்சாரத்துறை, உள்ளாட்சித் துறை போன்ற அனைத்து துறைகளும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டிய நிலையில் இருக்கின்றன. இதில் ஏதேனும் ஒரு துறையின் செயல்பாட்டில் குறைவு ஏற்பட்டாலும், கழிப்பறை பயன்பாடு கேள்விக்குறியாகிவிடும். நீரிழிவு நோய் உள்ளவர்களும், கர்ப்பிணிப் பெண்களும் அடிக்கடி பொதுக் கழிப்பறைகளை பயன்படுத்தவேண்டிய நிலையில் உள்ளனர். எனவே பொது கழிப்பறைகள் முறையாகப் பராமரிக்கப்பட்டு குடிநீர் வசதி, மின்சார வசதி, பாதுகாப்பு ஆகியவை உடனே அளிக்கப்பட வேண்டும். வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள பெரும்பாலான மக்கள் பொது கழிப்பறையையே நம்பியுள்ளனர். எனவே பயன்பாட்டுக்கு உதவாத நிலையில் உள்ள பொதுக் கழிப்பறைகளை சுகாதார அதிகாரிகள் அடையாளம் கண்டு, தேவையான பராமரிப்பு பணிகளில் போதுமான கவனத்தைக் செலுத்தவேண்டும். பொது கழிப்பறைகளில் ஆலோசனைப் பெட்டிகள் வைக்கப்பட்டு அவைகள் அதிகாரிகளால் அவ்வப்பொழுது பரிசீலிக்கப்பட்டு, குறைகள் சரி செய்யப்பட வேண்டும்.
அரசு இதற்கென ஒரு தனித் துறையை ஏற்படுத்தினால் கூட மிகவும் பலனுள்ளதாக இருக்கும். சமூகத்திலும், வீட்டிலும் கழிப்பறை வசதிகள் முறையாக இருப்பது சுகாதாரத்தின் மனித நாகரிகத்தின் உயர்ந்த அடையாளமாக கருதப்படும்.