நாம் யோசித்துக்கூட பார்க்காத அசௌகரியங்கள் இவர்களுக்கு உண்டு! என்ன கஷ்டம்டா சாமி!

Train drivers
Train drivers

ரயிலில் பயணம் செய்கிறோம். இருக்கை அல்லது படுக்கை முன்பதிவு செய்து கொள்கிறோம். ரயில் நிலையம் சென்று, குறிப்பிட்ட ரயிலில் ஏறி, நம் இருக்கையைக் கண்டுபிடித்து, பளுமிகு பொருட்களை இருக்கைக்கு அடியில் செருகிவிட்டு, நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டு ஆசுவாசப்படுத்திக் கொள்கிறோம்.

அவ்வளவுதான், அதற்குப் பிறகு நாம் பயணத்தில் அநேகமாக எந்த தொந்தரவையும் அனுபவிப்பதில்லை. காரணம், நம்மை மிகவும் பாதுகாப்பாக, குறித்த நேரத்தில், நம் ஊருக்கு அழைத்துச் செல்ல ரயில் ஓட்டுநர், அர்ப்பணிப்புமிக்கப் பொறுப்பை மேற்கொண்டிருப்பதுதான்.

நாம் கொண்டு வந்திருக்கக் கூடிய அல்லது ரயில்வே நிர்வாகத்தைச் சேர்ந்த விற்பனையாளரிடமிருந்து வாங்கிய உணவுப் பொருட்களை அசை போட்டபடியே, ஜன்னல்வழி காட்சிகளைப் பார்த்துக் கொண்டு பயணிக்கிறோம். இரவில் நிம்மதியாகப் படுத்து உறங்குகிறோம். ஆனால், அதேசமயம், நம் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் ஓட்டுநர் சாப்பிட்டிருப்பாரா, எப்போது, எப்படி உணவருந்துவார், அவரால் தூங்கி ஓய்வெடுக்க முடியுமா என்றெல்லாம் நாம் யோசிப்பதில்லை.

நீண்ட தூர, நீண்ட நேர அல்லது இரவு முழுவதுமான பயணம் என்றால், இயற்கை உபாதையைத் தீர்த்துக் கொள்ள நாம் பெட்டியிலேயே இணைக்கப்பட்டிருக்கும் சுகாதார அறைகளைப் பயன்படுத்திக் கொள்கிறோம். ஆனால், நம்மைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் ஓட்டுநர் தன்னுடைய இயற்கை உபாதையை எப்படி தீர்த்துக் கொள்வார்? அதிலும் இப்போது பெண் ஓட்டுநர்கள் நிறைய பேர் ரயிலை இயக்குகிறார்கள். இவர்களுடைய அசௌகரியமான வேதனை மிகவும் கொடுமையானது.

170 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க இந்திய ரயில்வே, நாடு முழுவதும் 12,617 பயணியர் ரயில்கள், 7,421 சரக்கு ரயில்கள், 7,172 ரயில் நிலையங்கள், ஒரு லட்சத்துப் பதினாறாயிரம் கிலோமீட்டர் ரயில் பாதை, தினமும் சராசரியாக பதினான்கு லட்சம் பயணிகள் என பிரமாண்டமாக இயங்கி வருகிறது.

இந்த ரயில்களை, லோக்கோ பைலட் என்றழைக்கப்படும் ரயில் ஓட்டுநர்கள் அறுபதாயிரம் பேர் இயக்குகிறார்கள். இவர்களில் எட்டாயிரம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பெரும்பாலான விரைவு ரயில்களில் இந்த ஓட்டுநர்களுக்கு அஸிஸ்டென்ட் லோக்கோ பைலட் என்ற உதவியாளர்களும் கூடவே பயணித்துப் பணியாற்றுகிறார்கள்.

இரவுப் பயணத்தில் இவர்கள் தூங்குவது சாத்தியமா? இல்லைதான். இருவரில் ஒருவர் தூங்கினால், மற்றொருவர் விழிப்பாக ஓட்ட வேண்டும்; பிறகு தூக்கத்தையும், பணியையும் மாற்றிக் கொள்ளலாம். தூங்கிவிடக் கூடாது என்பதற்காகவே விஜிலென்ஸ் கன்ட்ரோல் டிவைஸ் என்ற ஓர் அமைப்பு உட்பட இன்னும் பல பாதுகாப்பு விஷயங்கள் இருக்கின்றன. இப்படி நூற்றுக் கணக்கான பயணிகளின் பாதுகாப்பான பயணத்துக்கு உத்தரவாதம் தரும் ஓட்டுநர்கள் சிலசமயம் தம் இயற்கை உபாதையை தீர்த்துக் கொள்ள இயலாமல் தவிக்கிறார்கள் என்பது அனுதாபத்துக்குரிய உண்மை.

இதையும் படியுங்கள்:
டி.கே.பட்டம்மாள் வீட்டு ப்ரிஜ்ல் இருந்த வாழைப்பழம்!
Train drivers

110 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்க வேண்டும், ரயிலை, அதன் தடத்தில் உள்ள ஸ்டேஷன்களில் நேரத்துக்குக் கொண்டு சென்று நிறுத்தி ஒருசில நிமிட அவகாசத்துக்குள் மீண்டும் அங்கிருந்து புறப்பட வேண்டும். எஞ்சினில் ஏதாவது கோளாறு, தண்டவாளத்தில் ஏதேனும் பழுது அல்லது தடை, அலட்சியமாக இருப்புப் பாதையைக் கடக்கும் நபர்கள் என்று மிகவும் உன்னிப்பாக இமை மூடாமல் அவர்கள் பணியாற்ற வேண்டும். காட்டுப் பாதை மற்றும் மலைக் குகைகளினூடே பயணிக்கும் ரயில் ஏதேனும் காரணமாக நின்றுவிட்டால், அத்தனை பயணிகளையும் காக்க வேண்டிய பொறுப்பும் ஓட்டுநருக்கும், அந்த ரயிலின் கார்டுக்கும் இருக்கிறது.

இதுவரை சொன்ன எல்லா சங்கடங்களும் பெண் ஓட்டுநர்களுக்கும் உண்டு என்பது மறுக்க முடியாதது. சாப்பாட்டுத் தேவையைக் கூட ஓட்டுநர்கள் எப்படியாவது சமாளித்துக் கொள்வர்கள், ஆனால் கழிப்பறை இல்லாத அசௌகரியத்தை எப்படி அனுசரித்துச் செல்ல முடியும்?

ரயில் எஞ்சின் பெட்டியிலேயே பயோ டாய்லெட் வசதியை உருவாக்கித் தர வேண்டும் என்ற ஓட்டுநர்களின் கோரிக்கையை ரயில்வே நிர்வாகம் ஏற்றுக் கொண்டு 2016ம் ஆண்டு முதல் கொஞ்சம் கொஞ்சமாக அந்த வசதியை உருவாக்கித் தருகிறது.

எல்லா ரயில் எஞ்சின்களிலும் பயோ டாய்லட் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதால், ஓட்டுநர்கள் இயற்கை உபாதைக் குறித்து எந்தக் கவலையும் படவேண்டிய அவசியம் இருக்காது. அதனால், தமது ரயில்களில் பயணிக்கும் பொது மக்களை முழு பாதுகாப்புடன் அழைத்துச் செல்லும் பணியில் அவர்கள் மேலும் உற்சாகமாக ஈடுபடுவார்கள் என்பது நிச்சயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com