சிறுகதை - புதிய கணக்கு!

ஓவியம்; வேதா
ஓவியம்; வேதா

-மும்தாஜ் யாசீன்

ம்மாவின் வருகை சந்தோஷத்தைத் தரவில்லை. அவளும் சந்தோஷமாக வரவில்லை. மத்தியான நேரம் அது. கோபி சோபாவில் சரிந்து, பேன் சுழலும் உத்திரத்தில் பார்வை வெறிக்க, சங்கரனைக் காணச் செல்வதைப் பற்றிய யோசனையில் இருந்தான். சங்கரன் சாப்பாட்டிற்குப் பிறகு சிறிது தூங்கி எழுகிற பழக்கம் உள்ளவன். கலைக்கலாகாது. எரிச்சல் வரும். ஏற்கெனவே தனக்கு உதவுவதில் அவனது ஆர்வம் குறைந்திருந்தது. ''நாணயம் வேணும் கோபி. பாரு, நான் சிபாரிசு பண்ணியும் உனக்குக் கடன் தர நம்ம ஆளுக யோசிக்கிறாங்க..." நிறைய புலம்பி இருந்தான்.

"என் நேரம்ப்பா! யார் பணத்தையும் ஏமாத்தணும்னு நெனைக்கலை; ஆனா..."

''சரிடா. பொறு. இந்த தடவை ஒரு முயற்சி பண்ணிப் பார்க்கறேன்" சங்கரன் சொல்லியிருந்தான்.

மணி 3:30.

கண்கள் இலேசாகக் கிறங்க -

வாசலில் அம்மா, "கோபீ..." என்ற குரலுடன்.

"அம்மாவா...? என்ன இது திடீர்னு! வாம்மா' கோபி ஆச்சரியத்தை வெளிப்படுத்தத் தடுமாற, "வர்றேம்ப்பா" என எதிரில் உட்கார்ந்தாள். துணிப் பையை மடியில் கிடத்தியபடி, "ஸ்ஸ் அப்பாடா" என மூச்சு விட்டாள். கூர்ந்து பார்த்தாள்.

"என்னம்மா...?"

"நான் கேள்விப்பட்ட விஷயமெல்லாம் நெசமாய்யா?" குரல் மெதுவாகவும், அந்தக் கேள்விக்கான பதிலைப் பெறவே வந்ததைப் போலவும் இருந்தது.

"என்னவாம்?"

''கடையை மூடிட்டியாம். ஏவாரம் பண்ணி ரெண்டு மாசம் ஆகுதுன்னு சொல்றாகளே அய்யா."

கோபிக்கு வியர்த்தது. எங்கோ கிராமத்திலிருக்கும் இவளுக்கு எப்படித் தெரிந்தது?

"சொல்லுய்யா. நெசந்தானா?"

"………….."

"என்ன கஷ்டம்? புள்ளை குட்டிகளை வச்சுக்கிட்டு என்ன பண்ணப் போறே?”

கோபி பதில் சொல்லவில்லை.

தனக்கே இன்னும் தெரியாத விஷயம். செட்டியார்கூட கையை விரித்துவிட்டார்: "முதல்லியே இருபது நிக்குது. இன்னும் வேணும்னா... ம்ஹூம்... தாங்காது கோபி... "

சங்கரனின் உதவியும் இல்லையென்றால்...

"என்ன பண்ணப் போறே?" அம்மா கேட்டாள்.

நினைக்கவே பயமாக இருந்தது. தோளைத் தொடும் இரண்டு பெண்கள். ஒன்பதாம் கிளாஸ் பையன். மனைவி, வாடகை வீடு. சுமையாய் அழுத்தும் கடன்கள்...

இதையும் படியுங்கள்:
என்னது? இயந்திரங்கள்கூட கற்றுக்கொள்ளுமா? இயந்திரக் கற்றல் என்றால் என்ன?
ஓவியம்; வேதா

"பெத்த மனசு தாங்கலை. ஓடி வர்றேன். சொல்லுய்யா..."

முகம் மட்டுமல்ல; அம்மாவின் தோற்றமும் பரிதாபமாக இருந்தது. வெளுத்த தலை. பஞ்சடைந்த கண்கள். சுருங்கி உலர்ந்த தேகம். நூல் சேலை. மெல்லிசாக நடுங்கும் குரல்.

"என் கஷ்டம் என்னோடு. உனக்கு என்னம்மா?"

முகத்தில் செயற்கையாகப் புன்னகையை வரவழைத்துக்கொண்டான். "யார்ம்மா சொன்னது?" என்று கேட்டான்.

"அதைப் பத்தி என்ன! உண்மையா இல்லையா?"

"இல்லே. வந்து... நேரம் சரியில்லைன்னு நான்தான்.. கொஞ்ச நாள்ல திறந்திருவேம்மா..." தனக்கே நம்பிக்கை இல்லாத குரல்.

இனி நிமிரவே முடியாதா?

"என்ன புள்ளே போ! கையில காசு புரள்றப்ப புடிச்சு வைக்கத் தெரியாம இப்ப கஷ்டப்படறியே அய்யா. அஞ்சு பைசா குடுத்து உதவ ஆரு இருக்கா சொல்லு?" தன்னைச் சுதாரித்துக்கொண்டாள். "என்ன? என் ராசாத்திகளா! இளைச்சுப் போயிட்டீகளேடா" என விசாரிக்கவும், துணிப்பையிலிருந்து எள்ளுருண்டை முறுக்கு வகைகளை எடுத்து வழங்கவும் கவனம் திரும்ப -

“சாப்ட்டு ரெஸ்ட் எடும்மா. நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வர்றேன்" என எழுந்தான் கோபி.

''ஜாக்கிரதைய்யா" எனப் பழக்கப்பட்ட அம்மாவின் குரல், கனிவுடன் ஒலித்தது.

ம்மாவின் வருகை நிறைய பிரச்னைகளை உண்டாக்கும் என நினைத்தான் கோபி. சரிவைக் கண்டு நிலைகுலைந்து போவாள். பத்மாவைத் துளைத்து எடுத்துவிடுவாள். ஏற்கெனவே துவண்டு கிடக்கும் பத்மாவுக்கு இதெல்லாம் அதிகம்.

- எவ்ளோ கடன் இருக்கு?

- ஏன் கடையை எடுக்கும்படி ஆயிற்று?

- நகையெல்லாம் எங்கே?

- டீ.வி. பொட்டி ஸ்கூட்டர்ல்லாம் காணும்?

இதற்கெல்லாம் பத்மா என்ன பதில் சொல்ல முடியும்?

''பணத்தைப் பணம்னு மதிக்கணும். தன்னை மதிக்கிறவன்கிட்டத்தான் அது தங்கும். தெரிஞ்சுதா?" அம்மா அடிக்கடி சொல்லுகிற வார்த்தைகள் ஞாபகத்திற்கு வந்தன.

இதையும் படியுங்கள்:
வாழ்நாள் முழுவதும் தண்ணீர் குடிக்காத கங்காரு எலிகள்!
ஓவியம்; வேதா

அம்மா பணத்தின் அருமை தெரிந்தவள்.

அப்பா போனபிறகு வைராக்கியமாக அவனை வளர்த்து ஆளாக்கினாள். எருமைகளை வாங்கி, பால் கறந்து, தலைச்சுமையாய் மோர் விற்று, வரட்டி தட்டி விற்று...

கண்ணெதிரில் பார்த்து வளர்ந்தும் அதெல்லாம் ஏன் மனத்தில் பதியவில்லை?

அலட்சியம். எதிர்காலத்தை நினைக்கத் தெரியாத புத்தி. மேடு கடந்து வந்ததை மறந்தது... சம்சாரமாக வாய்த்தவளுமா இப்படி?

அம்மா முதல் மாதமே சரியாகச் சொன்னாள்.

''யப்பா! ஜாடிக்கு ஏற்ற மூடிய்யா; உன்னைவிட செலவாளியா இருக்கா. பார்த்துப் பொழைக்கணும் ராசா...''

பத்மா ஒரு ரூபாய் காரியத்திற்கு இரண்டு ரூபாய் கேட்கிறவள்.

அம்மாவுக்கும் அவளுக்கும் ஒத்துக்கொள்ளவில்லை. சில்லறைச் சண்டைகள். பூசல். புதுப் பெஞ்சாதி முகம் சுளிப்பதையும், இரவில் திரும்பிப் படுப்பதையும் சகிக்க முடியாமல் ஒருநாள் சத்தம் போட,

அம்மா கிராமத்திற்குப் போய்விட்டாள். அதே மாட்டுத் தொழுவம், வரட்டி, மோர் வியாபாரம்.

எப்போதோ ஒரு தடவை வந்து போவாள். ஐம்பது, நூறு அனுப்பும்போது பெற்றுக்கொள்வாள். சௌக்கியம் அறிய பதினைந்து காசில் கடுதாசு எழுதுவாள்.

தனது வீழ்ச்சிக்கு என்ன காரணம்? அம்மாவைப் போன்ற கண்டிப்பு இல்லாததா? நிர்வாகம் தெரியவில்லையா? சிக்கனம் தெரியாதவனின் நிறுவனம் நாசம்தானா?

ங்கரன் வீட்டிலிருந்தான். அவனைக் கண்டு தலையை மட்டும் அசைத்து வரவேற்றான். உள்ளே பேச்சுக் குரலில், சிரிப்பில் உறவினர்கள் வந்திருப்பது தெரிந்தது.

கோபிக்குச் சட்டென்று தனது விஷயத்தை ஆரம்பிக்க முடியவில்லை. "வீட்ல விருந்தாளிக வந்திருக்காங்க போல இருக்கு?" எனத் துவங்கினான்.

"ம்..."

''பிரண்டு ஒருத்தன் பைனான்ஸ் பண்றான். கேட்டுப் பார்க்கிறேன்னியே... அதான் தெரிஞ்சுட்டுப் போகலாம்னு..." தயங்கித் தயங்கிக் கேட்டான்.

"போன்ல அவனைப் பிடிக்க முடியலை. நேர்லதான் போகணும். போறேன்" என்றான் சங்கரன்.

"உங்கிட்டச் சொல்றதுக்கு என்ன... இருபதாச்சும் கிடைச்சாத்தான் கடையைத் திறக்க முடியும். கொஞ்சம் முயற்சி பண்ணிப் பாரு சங்கரன்."

"அதான் பார்க்கலாம்னு சொல்றன்ல. அப்புறம் என்னடா."

சினேகிதனின் முகத்தில் சலிப்பா, எரிச்சலா என்று தெரியவில்லை. உதவி எனக் கையேந்தும்போது எல்லா உறவுகளும் இப்படித்தான் ஆகி விடுகின்றன. விவரிக்க முடியாத மௌனம் கொஞ்ச நேரத்திற்கு இருந்தது.

விலகிச் செல்லும் சிநேகிதர்களின் முகங்கள் ஒவ்வொன்றாக ஞாபகத்திற்கு  வர ...

கோபி விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தான். நம்பிக்கை இலேசாக ஆட்டம் கொடுக்க, மனம் தடுமாறத் தொடங்கியது. ஒருவேளை சங்கரனும் கையை விரித்துவிட்டால்?

"இனி என்ன செய்யப் போறே?" அம்மாவின் கேள்வி முழு வீரியத்துடன் கொட்டியது.

வீடு திரும்பும் போது இருட்டிவிட்டது.

வாசலிலேயே காத்திருந்த அம்மா, "ஏய்யா இவ்ளோ நேரம்?" என எழுந்து நின்றாள்.

"நீங்கள்லாம் சாப்பிட்டாச்சாம்மா?"

''ஆச்சுய்யா.''

பத்மா அம்மா கொண்டுவந்த பலகாரங்களைத் தட்டில் வைத்துக் கொடுத்தாள். அம்மாவின் அதே கைப்பதம் - ஏதோ பழைய நாளின் ஒரு பண்டிகையை ஞாபகப்படுத்துவதைப் போல.

''போன காரியம் ஜெயமாய்யா?"

''இல்லம்மா. இனிமேல்தான் தெரியும்.''

''அம்மா பெருமூச்சு விட்டாள். கொஞ்சம் தயங்கி, ''பண விஷயமா?" என்று கேட்டாள் .

"ஆமாம்" கோபி தலையசைத்தான்.

"ஒருத்தன் காசு இன்னொருத்தன்கிட்ட வர்றது சாமான்யமா? எவ்ளோ?”

"....."

"சொல்லுய்யா. ஒரு நாலு, அஞ்சு தேவைப்படுமா?" அந்த எளிய மனுஷியால் அவ்வளவுதான் கற்பனை செய்துகொள்ள முடிந்தது. அவளை ஏமாற்ற விரும்பாமல், "அவ்ளோதான்" என்றான் கோபி.

"அது இருந்தா கடையைத் திறந்துரலாமா?"

"ம்..."

"நெசந்தானே? கவலையை விடு. நான் தர்றேன். நீ மத்த ஏற்பாடுகளைக் கவனி."

அம்மா திடீரென உற்சாகமடைந்தாள். தான் என்னவோ என்று பெரியதாக நினைத்திருந்த ஒன்று எளிதாகிவிட்ட மாதிரி இருந்தது அவளுக்கு.

''ஏதும்மா உன்கிட்ட அவ்ளோ பணம்?"

''பணமா இல்லை, கறவை மாடு மூணு இருக்குல்ல... வித்துக்கொண்டு வர்றேன்."

"அம்மா... "

''பேசாம இரு. கஷ்டத்துக்கு உதவாம அதெல்லாம் எதுக்கு? இதெல்லாம் ஒரு பாடம். இனிமேலாச்சும் கருத்தாப் பொழைக்கணும். பணத்தை மதிச்சுப் பாரு. உன் உழைப்புக்கு அது உன்கிட்ட சேருதா இல்லையான்னு...”

இதையும் படியுங்கள்:
நீங்கள் வேலை செய்யும் இடத்தில் "கெத்தாக" இருக்க உதவும் 10 விஷயங்கள்...!
ஓவியம்; வேதா

அவள் சொன்ன தோரணையில், முக பாவனையில், மனம் கரைந்து இலகுவாகிவிட்ட மாதிரி இருந்தது கோபிக்கு. இது தெரியாமல் வாழ்ந்துதானே சீரழிந்து, சிறுமைப்பட்டு... குழந்தையாகி அவளது மடியில் தலைசாய்த்துக் கொள்ள ஆசையா யிருந்தது.

ம்மா அடுத்த நாளே ஊருக்குப் புறப்பட்டுப் போனாள். அவள் படி இறங்கும்வரை காத்திருந்த பத்மா, "இந்தப் பணம் எதுக்கு... நம்ம தேவைக்குக் கால்வாசிகூட போதாது. இனி அந்தம்மா பெருமை அடிச்சுக்கும். என்னமோ முழு முதலையும் தானே குடுத்தமாதிரி..." என்றாள்.

"முழு முதல்தாண்டி இது. பணம் கால்வாசி, நம்பிக்கையும், புத்திமதியும் முக்கால்வாசி" என்றான் கோபி. அதைச் சொல்லும்போது அவனது கண்கள் பனித்தன.

பின்குறிப்பு:-

கல்கி 16  ஆகஸ்ட்  1992 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com