சிறுகதை - ஒண்டுக் குடித்தனம்!

Short stories...
Short stories...
Published on

-தி. சிவசுப்பிரமணியன்

'ஒண்டுக்குடித்தனம்' என்பது சிற்சில சுவாரஸ்யங் களுடன், சங்கடங்கள் நிறைந்த விஷயம் என்று அசோகனுக்குத் தோன்றிற்று.  அவன் வீட்டில் இருவர்தான். மனைவியும் அவனும். ஓரளவு பிரச்னை இல்லை என்றுதான் தோன்றும், மற்ற குடித்தனக்காரர்களுடன் ஒப்பிடுகையில்ஆனாலும் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கிறது.

அதிகப்படியான விருந்தினர் எவரேனும் வந்தால் வீடு தாங்க இயலாது போகிறது. வராந்தாவில்தான் ஆண்கள் படுத்துறங்க வேண்டியதாகிறது.

தவிரவும், நண்பர்கள் எவரையும் 'பெருமையாய்' வீட்டுக்கு அழைத்து வருதல் இயலாத விஷயமாயிற்று.

இது போதாதென்று, மனைவி இன்று காலையில்தான் அதைச் சொன்னாள்.

''ஊர்லேர்ந்து லெட்டர் வந்திருக்குங்க."

''எதுவும் விசேஷம் உண்டா?"

"தம்பி வர்றேன்னு எழுதியிருக்கான்."

"என்ன இப்ப லீவா அவனுக்கு?"

"இல்லீங்க. அவனுக்கு இங்க மெட்ராஸ்லயே இன்ஜினியரிங் காலேஜ்ல இடம் கிடைச்சிருக்கு.''

"அடடே, சந்தோஷமான விஷயந்தான்."

"இங்கதான் தங்கிப் படிக்கணும். ஹாஸ்டல், அது இதுன்னா செலவு என்னாகுங்க... பேசாம நம்மகூடயே இருக்கச் சொல்லலாமேன்னு..."

"சொல்லலாம்தான். எனக்கும் ஆசைதான். என்ன பண்றது? இந்த 'துக்கிளியூண்டு' எடத்துல சரிப்பட்டு வருமா?"

அவன் சொல்லியபிறகும் அவள் விடவில்லை. விதண்டாவாதம் புரிந்தாள். ஆத்திரம் பொங்கிற்று அவனுக்கு. 'உள்ளதைச் சொன்னால் ஏன் இவளுக்குப் புரிய மாட்டேன் என்கிறது' என்று தோன்றிற்று.

வாக்குவாதம் முற்றி சச்சரவாக மாற வேண்டிய நிலையில் அவன் வெளிநடப்புச் செய்தான். இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால், சண்டை வரும். பிறகு, வேடிக்கை பார்க்கக் கூட்டம் வரும். பலர் இதற்காகவே ஜன்னல் பக்கம் காத்திருக்க வேண்டி வரும்.

அதனாலேயே, இம்மாதிரி சந்தர்ப்பங்களைத் தவிர்த்துவிடுவது அவன் வழக்கம். வெளியில் போய் ஒரு டீயைக் குடித்துவிட்டு, எங்கெங்கோ உலாத்திவிட்டு மறுபடி வீடு திரும்பியபோது, மனைவி வாந்தி எடுத்துக்கொண்டிருந்தாள்.

என்னாயிற்று?

அசோகனுக்குப் பதறிற்று.

"என்னாச்சும்மா?"

தலையை ஆதரவாகப் பிடித்தபோது, அவள் முகத்தில் வெட்கம் கலந்த புன்னகையைப் பார்க்க முடிந்தது. தலைகுனிந்தபடி, சுவரில் தொங்கிய காலண்டர் 'குழந்தையைக்' கைகாட்ட, மனசு சந்தோஷத்தில் கூத்தாடிற்று. ''இனிமே பாரு, ஒரு வேலை நீ செய்யக்கூடாது. எல்லாம் என் பொறுப்பு" என்று குதூகலிக்க வைத்தது.

இதையும் படியுங்கள்:
பிரபலங்கள் குடிக்கும் ‘பிளாக் வாட்டர்’ பற்றித் தெரியுமா?
Short stories...

இந்த சின்னஞ்சிறிய வயிறு இனி ஒரு குழந்தையைச் சுமக்கப் போகிறது. ஒரு குட்டிக் கண்ணனையோ, மீராவையோ உருவாக்கப்போகிறது.

"அட ஒண்டுக் குடித்தனத்தில் மற்றுமொரு ஒண்டுக்குடித்தனம்" என்று கவிதை மாதிரி மனசில் ஏதேதோ தோன்றியபோது, எதுவோ உறைத்தது.

உறைத்தது, எதையோ உணர வைத்தது.

"உன் தம்பி எங்கேயும் போக வேணாம். இங்கேயே நம்மகூடவே தங்கிப் படிக்கட்டும்." புன்னகையுடன் அசோகன் சொன்னபோது, ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்த்துச் சிரித்தாள் அவன் மனைவி.

பின்குறிப்பு:-

கல்கி 25  பிப்ரவரி  1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com