சிறுகதை – சித்தி!

ஓவியம்: ஜெயராஜ்
ஓவியம்: ஜெயராஜ்

-கிருஷ்ணா

"பாட்டி சாக்லேட் எடுத்துக்கறேன்."  பரத்தின் குரல் பார்வதியம்மாளின் வீட்டு ஹாலிலிருந்து கேட்டது. பக்கத்து போர்ஷன்.

சாக்லேட்! ''இனிப்பு கொடுக்கக் கூடாது. பிஸ்கெட், சாக்லேட்டெல்லாம் தராதீங்க." டாக்டர் சொன்னது நினைவில் ஆடியது.

"பாட்டி இன்னொரு சாக்லேட்..."

"வேண்டாம்டா! உங்கப்பாவுக்குத் தெரிஞ்சா திட்டுவாரு.''

பார்வதியம்மாளின் குரலில் கொஞ்சல் மட்டுமே தெரிந்தது. எனக்கு 'திக்'கென்றது.

"பரத்தை ஜாக்கிரதையாய் பார்த்துக்க. ஜுரம் அடிச்ச உடம்பு.''

காலையில் டூட்டிக்குப் போவதற்கு முன் அவர் படித்துப் படித்துச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.

இவனோ என்னிடம் ஒட்டவே மாட்டேன் என்கிறான். என்ன செய்வது நான்? அப்பா இல்லாத நேரங்களில் பார்வதியம்மாளின் வீடே தஞ்சம் அவனுக்கு.

கடந்த மூன்று நாளாய் நல்ல ஜுரம் அவனுக்கு. நேற்று மாலை முதல்தான் பரவாயில்லை. உடனே வால்தனமும் ஒட்டிக்கொண்டு விட்டது.

குழந்தைகளின் இயல்பே அதுதானே! எனக்கு இந்த இடமும் புதிது. அவரும் புதிது. மூன்று வயது பரத்தும் புதிது.

இரண்டாம் தாரம்! சென்ற திங்கட்கிழமைதான் திருமணம் நடந்தது. வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்க் கற்றுக்கொடுத்த வறுமைச் சூழ்நிலை. அதனால் வருத்தமோ, ஏக்கமோ மனத்தில் இல்லை. பக்குவம்?

இதையும் படியுங்கள்:
ஆண்களே இது உங்களுக்காக... கொஞ்சம் கவனியுங்கள்!
ஓவியம்: ஜெயராஜ்

ஒரு வயதில் தாயை இழந்த பிள்ளை பரத். அதனால் அதிக செல்லம் அடம், அழுகை கூடவே வளர்ந்துவிட்டது இவனுடன்

''குழந்தைக்காகத்தான் இந்தக் கல்யாணமே."

பெண் பார்த்த சமயத்திலேயே சொல்லிவிட்டார்.

மற்றபடி, நல்ல மாதிரியாய் இருக்கிறார். பக்குவப்பட்ட மனிதர். அதிராத பேச்சு. என்னைத் தொடும்போதுகூட காமத்தைவிட பிரியமே தெரிகிறது.

துறுதுறுப்பான முகம் பரத்துக்கு. பார்த்ததுமே வாரிக் கொஞ்சிவிட்டேன். அப்படியே இவர் ஜாடை.

'பாட்டி ஃப்ரிட்ஜ் வாட்டர்."

"வேண்டாம்டா. என்னாலே சட்டுனு எழ முடியலியே."

''கொஞ்சூண்டு பாட்டி. அப்புறம் உன்னோட 'டூ' விட்டுடுவேன்."

விறைப்பாய் அவன் சொல்வது காதில் விழுந்தது.

"சரி, சரி. கால் தம்ளர் மட்டும் குடிச்சுக்கோ. சொன்னால் கேட்கமாட்டேங்கறியே."

இது பாட்டிகளுக்கே உரித்தான குணம்.

ஐயையோ! என்னால் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. ஜுரம் அடித்த உடம்பு, ஐஸ் வாட்டர் குடித்தால் என்னாவது? சுடவைத்த நீர்தான்! டாக்டர் கடுமையாய் எச்சரித்திருக்கிறார்.

விடுவிடுவென கதவு தாண்டி உள்ளே நுழைந்தேன்.

சோபாவில் சாய்ந்தபடி வாரப் பத்திரிகையில் ஆழ்ந்தபடி பார்வதியம்மா.

ஃபிரிட்ஜ் கதவைத் திறந்து தண்ணீர் பாட்டிலைக் கையில் பிடித்தபடி பரத். அருகில் தரையில் தம்ளர்.

“வைச்சுடு பாட்டிலை."

என் அதட்டலைக் கண்டுகொள்ளவில்லை அவன்.

வெடுக்கெனப் பிடுங்கி வைத்து ஃபிரிட்ஜை மூடினேன். இடுப்பில் அவனையும் தூக்கிக்கொண்டேன்.

கையையும், காலையும் உதறி 'ஓ'வென்று அழ ஆரம்பித்தான். செவிப்பறை வலித்தது.

"அதிகமா அழவிடாதே அவனை. மறுபடியும் ஜுரம் வந்துடப் போகுது. கொஞ்சம்தானே கேட்கறான்."

அவனுக்குப் பரிந்து பேசிய பார்வதியம்மாளை கடுமையாய்ப் பார்த்தேன்.

"என் குழந்தையை எப்படிப் பார்த்துக்கணும்னு எனக்குத் தெரியும்.''

மடமடவென எங்கள் போர்ஷனுக்குள் நுழைந்து, கதவையும் சார்த்திக்கொண்டேன்.

அப்படிப் பேசியிருக்க வேண்டாமோ கடுமையாய்?  'அவங்க என் அம்மா மாதிரி' என்று இவர் சொல்லியிருக்கிறாரே? பரத்தின் முரண்டு அழுகை மேற்கொண்டு எதையும் யோசிக்க விடவில்லை.

"மியாவ்."

பூனைக் குட்டி!

''பார்த்தியா நீ அழுததனாலே அதுவும் அழுது."

கொஞ்சம் பால் எடுத்து வந்து தட்டில் ஊற்றினேன்.

பூனை ஓடி வந்து ருசித்தது. பரத்தின் அழுகை சற்று குறைந்தது.

வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவன் கையில் பால் தம்ளரைக் கொடுத்தேன். ஒரு தம்ளர் பால் காலியானது. கூடவே அழுகையும் காணாமல் போனது. பூனையைக் காண்பித்தே சாப்பாடு ஊட்டி,  தூங்க வைத்தேன். நடுக்கதவைத் திறந்து வைத்தேன். பார்வதியம்மாள் 'வெடுக்'கென்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள். கோபம்! கொஞ்சம் பயமாயிருந்தது.

இதையும் படியுங்கள்:
மன ஆரோக்கியத்தைக் காக்கும் சில வழிமுறைகள்!
ஓவியம்: ஜெயராஜ்

ஷிப்ட் முடிந்து மூன்று மணிக்கெல்லாம் அவர் திரும்பிவிட்டார்.

நினைத்ததுபோலவே ஆகிவிட்டது. வெளி கேட்டிலேயே பார்வதியம்மாள் பிடித்துக்கொண்டாள். கையை ஆட்டி ஆட்டி பேசுவதைக் கண்டு, நான் வீட்டுக்குள் பதுங்கினேன்.

பத்து முழு நிமிடம். மனசுக்குள் 'லப்டப்' வேகமாய் அடித்துக்கொண்டது.

முதல் சண்டை! இன்று அரங்கேறி விடுமோ?

உள்ளே வந்தார் அவர். முகத்தைப் பார்க்க பயந்து, அவரது பையை வாங்கிக்கொண்டு திரும்பினேன்.

"நில்லு."

குரலில் கடுமையோ, இல்லை, எப்போதும் போலத்தானோ?

அவர் முகம் பார்த்து நின்றேன், படப்படப்பாய்.

"பார்வதியம்மாவிடம் என்ன சொன்னே?"

"அது... ஃபிரிட்ஜ் தண்ணி.... ஜூரம்...." திக்கினேன் வார்த்தை வராமல். கண்ணீர் வேறு முட்டிக்கொண்டு வந்தது.

"என் குழந்தையை எப்படிப் பார்த்துக்கணும்னு எனக்குத் தெரியும்னு, சொன்னியா?"

அதட்டினார். தலையாட்டினேன்.

சட்டென நெருங்கி அணைத்துக்கொண்டார்.

"என் குழந்தை!' இது போதும், உன்னோட இந்தச் சொல்லே போதும், உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு."

இறுக்கிக்கொண்டார். பிரியமாய்.

பின்குறிப்பு:-

கல்கி 24  செப்டெம்பர் 1995 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com