சிறுகதை – நாக்கு!

ஓவியம்; செல்லம்
ஓவியம்; செல்லம்

-கிருஷ்ணா

ரக் கண்ணால் அப்பாவைப் பார்த்தேன். 'உர்'ரென்று முகத்தை வைத்துக்கொண்டு ஹால் சோபாவில் அமர்ந்திருந்தார். கொஞ்சம் கடுமையாகத்தான் பேசி விட்டேனோ? ஆனால், வேறு வழியில்லை. தாடியைக்கூட மழிக்காமல், குளிக்காமல் ஒட்டி வைத்த சூயிங்கம் போல ஒரே இடத்தில் காலையிலிருந்து அமர்ந்திருந்தார்.

''பாவம்டா ஸ்ரீதர். குடை ராட்டினம் மாதிரி வீட்டுக்குள்ளே சுற்றி சுற்றி வரும் மனுஷன், இப்படி உற்சாகமேயில்லாத முகத்தோடு... ப்ச்'' என்று மெல்லிய குரலில் வருத்தப்பட்டாள் அம்மா.

"வேற என்னம்மா செய்யறது? கையை, காலை ஒடிக்கலேன்னா பாருன்னு வீட்டு வாசல்ல நின்னு ஒருத்தன் கத்திட்டுப் போற அளவுக்கு ஆயிடுச்சே!"

"உண்மைதான். அந்த சேகரோட மனைவி டெலிவரி சமயத்துல இவர் பணம் கொடுத்து உதவினதைக்கூட மறந்துட்டு இப்படிப் பேசிட்டானே அவன்" என்று அங்கலாய்த்தாள்.

அம்மா சொன்னது வாஸ்தவம்தான். ஆனால் அப்பாவின் பேச்சு எல்லாவற்றையும் மறக்கடித்து விடும். நாக்கில் சனி என்பார்களே, அது அவரைப் பொருத்தவரை சரி.

ரிடையர் ஆனபிறகுதான் அதிகமாகிவிட்டது. மனசு நன்றாயிருந்தாலும், வார்த்தைகள் மென்மையாய் இருக்க வேண்டாமோ?

"டேய் சாவு கிராக்கி" என்று அழைத்தாரானால் தெருவே நடுங்கும்.

காலையில் ஐந்து மணிக்குப் பேப்பர் போடும் பையன் 'தட்'டென்று 'ஹிண்டு'வை வீசினதும், இவர் மீதே வீசி விட்டதைப்போல பதறி எழுவார்.

மடமடவென்று பல்தேய்ப்பார், குளிப்பார், பட்டையாய் விபூதி குழைத்து இடுவார். ஐந்தரை மணிக்கு பேப்பரைப் பிரித்தால், ஆறேகாலுக்குள் பேப்பரை கடாசி விடுவார். ஆறேகாலுக்குத்தான் வீட்டில் மற்றவர்களுக்கு விடியும்.

"கல்யாணி, தெரியுமோ? அவுட், க்ளோஸ், ஐம்பத்துநாலு பேரு" என்பார் சுப்ரபாதமாய். "பாம்பே மெயில் கவுந்துடுச்சு. ஏதோ லாரி மோதலில் ஏழு பேர்... பாவம் உயிர் ஊசலாடுதாம்."

அம்மாவுக்குக் கோபம், கோபமாய் வரும்.

''காலையில் எழுந்ததுமே இழவு செய்திதானா?" என்று சத்தம் போடுவாள்.

இதையும் படியுங்கள்:
ஜம்முன்னு மணக்கும் ஜவ்வாது பலன்கள் தெரியுமா?
ஓவியம்; செல்லம்

"நானா சொல்றேன். பேப்பர் நியூஸ்" என்பார்.

அவர் பார்வையிலிருந்து நழுவி நான் பாத்ரூம் செல்ல யத்தனிக்கும்போது வலையை வீசிவிடுவார்.

"டேய் ஸ்ரீதர், அந்த கிரானைட் பேக்டரி லாக் அவுட்டாம்."

எனக்குள் உதறலெடுக்கும். ஏனென்றால் நான் வேலை பார்ப்பதும் கிரானைட் பேக்டரியில்தான்.

"என்னடா முழிக்கற? நம்ம ஊர் 'கீதா லாட்ஜில் காதல் ஜோடி தற்கொலையாம். மூணாம் பக்கத்துல பாரு, போட்டிருக்கு. அடேடே, அட்வகேட் ராமச்சந்திரன் இல்லே, அதான் கோமதியோட மச்சினன். ஹார்ட் அட்டாக்காம் ஆபிச்சுவரி'யில் போட்டிருக்கான்."

அம்மா உள்ளேயிருந்து காப்பியுடன் வருவாள்.

"நீங்க இதைப் பிடிங்க. வாசல்ல போய் நில்லுங்க. ஸ்ரீதர் ஆபீஸ் போற வரைக்கும் உள்ளேயே வரக்கூடாது'' என்று விரட்டுவாள்.

வாசலுக்குப் போனாலும் சும்மா நிற்க மாட்டார்.

"டேய் சாவுகிராக்கி!"

யார், வீட்டைத் தாண்டிப் போனாலும் கூப்பிடுவார். கிட்டத்தட்ட இருபது வருடம் இங்கேயே வசிப்பதால், காலனியிலுள்ள அனைவரையும் தெரியும்.

"சார்..." என்று தயங்குவார்கள்.

"என்னடா முறைக்கிற. இப்படி வா. கல்யாணி, இன்னொரு காப்பி" என்று உள்ளே குரல் கொடுப்பார்.

"அவசரமாய்ப் போகணும் சார்."

"போணுமா? போயேன். உருப்பட்டாப்பலதான் நீ போற காரியம்."

"சார்...!" என்று அலறுவான் எதிரே நிற்பவன்.

"குடிடா காப்பியை. சாவுகிராக்கி!" என்று மிரட்டுவார்.

காப்பி உபசரிப்புக்குத்தான் இத்தனை ஆர்ப்பாட்டம். எல்லோருக்கும் உதவும் மனசுள்ளவர்தான். ஆனால், வாயில் தர்ப்பையைப் போட்டுப் பொசுக்கினால்கூட வார்த்தைகள் நல்லதாய் வராது.

வீதியில் போகிறவர்களின் முணுமுணுப்புக்குப் பயந்து நான் உள்ளே கூப்பிடுவேன்.

"கல்யாணி, என்ன சமையல் இன்னிக்கி? திவச சாப்பாடு மாதிரி பண்ணிடலாமா?" அம்மா திடுக்கிட்டுப் போய்த் திரும்புவாள்.

"இன்னிக்கு உங்க பிறந்தநாள். நல்ல நாளும் அதுவா வாயிலே வார்த்தையைப் பாரேன்!"

அதற்குள் அப்பா தானே காய்கறியை எடுத்து வெட்டித்தள்ளிவிடுவார்.

"ஐயையோ, ஒரு கிலோ கத்தரிக்காயையும் வெட்டி... கடவுளே! இருக்கறது நாம் மூணுபேரு.''

"அதனாலே என்ன? கோடிவீட்டு ராமசாமி தனியாத்தான் இருக்கான். அந்த சாவுகிராக்கியைக் சவுண்டிக்குக் கூப்பிடற மாதிரி சாப்பிட கூப்பிட்டாப் போச்சு" என்பார் காஷுவலாய்.

இதையும் படியுங்கள்:
ஃபேஷன் உலகில் டிரெண்டாகி வரும் புதுவித சோக்கர் நெக்லஸ்கள் பற்றி பார்க்கலாம்!
ஓவியம்; செல்லம்

நேற்று மாலை நாலு மணிக்கு வாசலில் நின்று கொண்டிருக்கும் போதுதான் பிரச்னை.

சேகர் சைக்கிளில் சென்றபோது வழக்கமான பாணியில் அழைத்து, அவனை பிரேக் போட வைத்தார்.

அவனுக்கு என்ன அவசரமோ! "அப்பறம் வரேன்" என்று பேசாமல் கிளம்பிவிட்டான்.

"ஒழிடா சாவுகிராக்கி பயலே"- அவன் அலட்சியப்படுத்தி விட்டான் என்று திட்டினார்.

ராத்திரி ஒன்பது மணிக்குத் திரும்பியவன் நேரே வீட்டு வாசலில் நின்று கத்த ஆரம்பித்தான்.

"டேய் கிழவா, உன்னை என்ன பண்றேன் பாரு. வாயிலே பெட்ரோலை ஊத்திக் கொளுத்தலே என் பேரு சேகர் இல்லை..." என்று பத்து நிமிடம் கத்தி தீர்த்தான்.

அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று பக்கத்து ஊரிலிருக்கும் அண்ணனிடமிருந்து செய்திவர, இவன் போவதற்குள் அம்மா போய்விட்டாள்.

அந்த வருத்தம். என் அப்பாவின் மேல் கோபமாய் மாறிவிட்டது. அந்த துக்கத்திலும் வந்து கத்திவிட்டு, குடும்பத்தைக் கூட்டிக் கொண்டு சென்றான்.

நானும் சப்தம் போட்டேன் அப்பாவிடம். வாய்ப்பு கிடைத்ததை அம்மாவும் பயன்படுத்திக்கொண்டாள்.

''உங்க வாயிலிருந்து இனிமே 'சாவு கிராக்கி'ன்ற வார்த்தை வந்ததோ, என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது!"

என் முகத்துக்காகவும், அம்மாவின் முகத்துக்காகவும் தான், காலனியில், அப்பாவைப் பொறுத்துக் கொள்கிறார்கள். தனியே எங்களிடம் எத்தனை பேர் பொருமி விட்டார்கள்!

சேகரின் மிரட்டலிலும், என் கண்டிப்பிலும் மிரண்டு போய்விட்டார் அப்பா. காலையில் எழுந்தது முதல் பேப்பரைத் தொடவில்லை. காய்கறி நறுக்கவில்லை. வாசலுக்கே கூட போகவில்லை.

மாலை, வேலை முடிந்து வீடு திரும்பியபோதும்கூட அப்பாவிடம் மாற்றமில்லை. ''கொடுக்கறதைச் சாப்பிட்டார். மோட்டு வளையையே பார்த்துண்டு உட்கார்ந்துண்டு இருக்கார்'' என்றாள் அம்மா சமையலடியில். அவள் குரலில் பயம் தெரிந்தது.

"மாறுதல்னு வரும்போது அப்படித்தான் இருக்கும். போகப் போகப் பழகிடும். கேபிள் கனெக்ஷன் வாங்கிடலாம். டீ.வி. பார்க்கட்டும் - நாள் முழுதும் அவர். கவலைப்படாதே" என்று சமாதானப்படுத்தினேன். சொன்னபடியே கேபிள் டீ.வி. ஆளை வரச் சொன்னேன். தெரிந்தவன்தான். அடுத்த அரை மணியில் கேபிள் ஒயருடன் வந்தான்.

"டேய் தீவட்டி தடியா! என்ன இது?" என்று அப்பா வழக்கமான குரலில் ஆரம்பித்தாரே பார்க்கலாம். திகைத்துப்போய் பார்த்தோம்.

''நானும் இன்னிக்கு முழுதும் யோசிச்சேன். சாவு கிராக்கின்னாத்தானே அமங்கலமாய் இருக்கு. வேற என்ன வார்த்தை உபயோகிக்கலாம்னு யோசிச்சு, யோசிச் சு...ச்சே, ரொம்ப படுத்திடுச்சு. இந்த வார்த்தையினாலே சென்டிமென்டலாய் எதுவுமில்லையே, என்னடா தீவட்டி தடியன் மாதிரி நிக்கறே?'' என்றதும் எனக்கு மயக்கமே வந்துவிட்டது.

பின்குறிப்பு:-

கல்கி 09-  ஜூலை 1995 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com