சிறுகதை - ஆயிரம் காலத்துப் பயிர்!

ஓவியம்; ஜமால்
ஓவியம்; ஜமால்

-மாலதி

சிரிப்புச் சிரிப்பாய் வந்தது. வியர்வை வாசனையோடு இறுக்கிக் கழுத்தைக் கட்டிக்கொண்டு இருபது வயசுப் பெண் கேட்டது. ‘ஏம்மா இந்த அப்பாவைக் கல்யாணம் பண்ணிண்டே?'

பெண் ஒண்ணும் லேசுப்பட்டதில்லை. இதற்கு அப்பா என்றால் வெல்லம்தான். இவளை ஆழம் பார்க்கத்தான் கேட்கிறது.

'பண்ணிக்கவும் எதுவும் காரணமிருக்கவில்லை. வேண்டாம் என்று சொல்லவும் காரணமிருக்கவில்லை' என்று பெண்ணிடம் பதில் சொல்வதா? அப்போது தானாக வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க திறமையும் இல்லை. வாய்ப்பும் இல்லை. வாய்த்த மாதிரிக்கு அனுசரித்துப் போக வழியிருந்தது. எல்லாவற்றையும்விட அனுசரணை அது இது என்றெல்லாம் யோசனை பண்ணவோ வேறு முறையில் பரீட்சார்த்தம் பார்க்கவோ நேரம் இல்லை என்பதுதான் நிஜம். நாள் முழுக்க வேலையிருந்தது. ஒரு நாள் மாவிளக்கு,  ஒரு நாள் ஆயிரத்தெட்டு கொழுக்கட்டை, ஒரு வாரம் கிராம வாசம், ஒரு ஸீஸன் நாத்தனாரைப் பெண் பார்க்கும் படலம், இன்னொரு ஸீஸன் மூத்த நாத்தனார் டெலிவரி. சப்பாத்தி வகையறாவில் மாமனாரையும் தெளிவான மெல்லிய சாய்வுத் தையலில் நாத்தனாரையும் அசத்துகிற ஆர்வம் இருந்தது. தெரிந்ததையெல்லாம் எடுத்துக்காட்டுகிற அவசரம் எப்போதும் இருந்தது.. இவையெல்லாவற்றுக்கும் இடையில் கணவன் என்ற புதிய மனிதனும் அறிமுகமானான்.

ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு முகம் காட்டினான். இன்னும், இருபத்திரண்டு வருடங்கள் ஆன பின்னும், கணவன் இன்று என்ன செய்வான், இன்று எப்படி நடந்து கொள்வான் என்று சொல்ல வரவில்லை!  ஒருகால் தேர்ந்தெடுக்கக் வாய்ப்புக் கிடைத்திருந்தால் இந்தக் கணவனை இவள் மறுத்திருக்கக்கூடும். பெருத்த குரலும் அலட்டலும் பிடிக்காமல் போயிருக்கக் கூடும்.

தன் பெண்ணுக்கு நிச்சயமாய் இப்படித் திருமணம் செய்து வைக்க மாட்டாள். இவளுடைய பெண் தன் இஷ்டப்படி தேர்ந்தெடுப்பாள். பழகிப் பார்த்து, மனத்துக்குப் பிடித்தால் மட்டுமே ஏற்பாள். குடும்பம் முழுக்க மகள் தேர்ந்தெடுப்பவனையே ஒப்புக்கொள்ளும்... இந்த மாதிரி நினைப்பே ரொம்பவும் இனித்தது. தான் ரொம்ப உசரத்துக்கு மிதந்துவிட்டாற்போல ஒரு பெருமை மேலிட்டது.

இதையும் படியுங்கள்:
உடல் சூட்டை தணிக்கும் மகத்துவம் மிக்க 6 கீரைகள்!
ஓவியம்; ஜமால்

க்கத்து வீட்டுப் பெண்ணுக்குத் திருமணம் நிச்சயமாயிற்று "கோதாவுக்கு நிஜமாகவே பிடித்ததா அவனை?" என்று நூறு முறை கோதா அம்மாவைக் கேட்டாள் இவள்.

"நீயேதான் கோதாவிடம் கேட்டுக் கொள்ளேன்" - கோதா அம்மா இவளிடமே திருப்பினாள்.

கோதாவிடம் கேட்டபோது சிரித்தாள். அந்தச் சிரிப்பிலும் கண்களிலும் எதுவுமே தெரியவில்லை.

ஒரு நாள் கோதாவை வெளியே அழைத்துப் போக மாப்பிள்ளைப் பையன் வந்திருந்தான். இவளுக்குத் தவிப்பாயிருந்தது. எல்லோரும் பார்க்க, நடத்தி பஸ் ஸ்டாண்ட் வரை அழைத்துப்போவானா? முதலில் வரும் ஆட்டோவைப் பிடித்து ஊருக்கு வெளியே அழைத்துப் போவானா? ரோட் கிராஸ் செய்யும்போது இயல்பாய்க் கையைப் பற்றுவானா... ? கோதா என்னை செய்வாள்?

றுநாள் கோதா வந்தாள் இவள் வீட்டுக்கு - யாரோ தோழிக்கு போன் செய்ய. கிசுகிசுப்பும் பெருமையுமாய்ச் சந்தோஷ உரையாடல் இருக்கும் என்று எதிர்பார்த்துத் தன்னிச்சையாய் இவள் ஒட்டுக் கேட்டாள். அப்படி யெல்லாம் எதுவுமேயில்லை. ரொம்பவும் திறந்த, அத்தியாவசியமான உரையாடல் அது.

இப்போதைய பெண்கள் இண்ட்டலெக்ட் போர்வையில் சின்னச் சின்ன தென்றல்களை, பூஞ்சிலிர்ப்புகளை இழந்து விட்டனரோ என்று தோன்றியது.

ஏதோ பேச்சில் மாப்பிள்ளைப் பையனைப் 'பூஞ்சை' என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டாற்போல இருந்தது. அது எந்த வகைப் பூஞ்சைத் தனம் என்று தெரியவில்லை.

'மற்றபடி எதுவும் விசேஷமில்லை' என்று தோளைக் குலுக்கிக்கொண்டு புறப்பட்டாள் கோதா.

நாலு நாள் கழித்து. கோதா அம்மா வாசல் பக்கம் வந்தாள். "புடைவை, மற்ற ஜவுளி வாங்கியாயிற்றா?" என்று விசாரித்தாள் இவள்.

இதையும் படியுங்கள்:
கோடை வெயிலுக்கு இதம் தரும் காய்கறிகளின் ராஜா!
ஓவியம்; ஜமால்

கோதா அம்மா நிறுத்தி நிதானமாய்ச் சொன்னாள். "கோதாவுக்கு அந்தப் பையனைப் பிடிக்கலையாம்."

"இப்போ என்ன செய்யப் போகிறீர்கள்?”

"வேறென்ன? கல்யாணத்தை நிறுத்த வேண்டியதுதான்!”

''ஏன் பிடிக்கலையாம்?"

“எத்தனையோ விஷயங்கள் பிடிக்கலையாம். சேரில் உட்கார்ந்த வாக்கில் தொம் தொம் என்று ஆடுகிறதாம் அந்தப் பிள்ளை. ஹோட்டலில் சர்வரை 'ஸ்ஸ்' என்று கூப்பிட்டதாம். 'பெர்முடா ட்ரையாங்கிள்' பற்றித் தெரியாதாம்....

"ஏர் இண்டியாவில் வேலை செய்யும் பையன், இவளைக் கூட வைத்துக்கொண்டு விஷ்ணு பவனில் லாட்டரி ரிஸல்ட் பார்த்து விட்டு, லாட்டரி டிக்கெட்டும் வாங்கி வருமோ? 'சுய முன்னேற்றத்தில் துளி நம்பிக்கையில்லை இந்த ஆளுக்கு' என்கிறாள் கோதா..."

"இந்த மாதிரி காரணங்களுக்காக யாராவது கல்யாணத்தை நிறுத்துவாங்களா?"

“அது என்னவோ! கோதாவின் அப்பா சொல்லிவிட்டார். இதெல்லாம் மேலோட்டமாய்த் தோன்றியவை. ஆழமாய், பளிச்சென்று ஒரு காரணம் இருக்கும். அது இன்னதென்று குறிப்பிட்டுச் சொல்ல வராமல் இருக்கலாம். அதனால் இந்தக் கல்யாணம் வேண்டாம் என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்."

"பையனைப் பிடிக்கவில்லை என்று எப்படி பட்டவர்த்தனமாகச் சொல்லி, கல்யாணத்தை நிறுத்துவது? சம்பந்தப்பட்டவர்களைப் புண்படுத்துவதாயிற்றே! நியாயமாயிருக்குமா?" என்றாள் இவள்.

கோதா அம்மா பெரிதாய்ச் சிரித்தாள்.

"அதையெல்லாம் பையனிடமே சொல்லிவி்ட்டாள் இந்தப் பெண். நகை போதவில்லை. சீர் சரியில்லை என்றெல்லாம் கல்யாணம் நிறுத்துவதைவிட, 'மனசு சரிப்பட்டு வரவில்லை' என்று பிள்ளை பெண் தீர்மானம் செய்வது அநியாயமா? என்கிறாள் கோதா."

வளுக்கு இன்னும் அதிகக் கவலை வந்தது. தன் பெண்ணுக்கு எப்படிச் சுயம்வரம் ஏற்பாடு செய்து கொடுப்பது? எந்தத் தகுதி அடிப்படையில் வரன் பார்ப்பது? ஒன்றுமே புரியவில்லை.

மறுநாள் கோதா வீட்டில் ஏக அமர்க்களம். வாசல் நிரம்ப கார்கள். மனிதர்கள். விசாரித்தபோது சொன்னார்கள் - கோதா தன் தூரத்து உறவுப் பையனை மணக்கச் சம்மதித்து விட்டாளாம். ‘ஸ்ரீதர் பரவாயில்லம்மா, புத்திசாலி, யோக்கியன், அது போதும்' என்று சர்ட்டிபிகேட் வழங்கி விட்டாளாம் கோதா!

இவள் ஓடிப்போய்த் தன் பெண்ணிடம் சொன்னாள்: "பார், கோதா ஏற்கெனவே அறிமுகமானவனை உறவுக்காரனையே பண்ணிக் கொள்ளச் சம்மதித்து விட்டாள். உனக்குத்தான் எப்படிப் பண்ணுவேனோ தெரியவில்லை...." ஏதோ எழுதிக்கொண்டிருந்த பெண் விசுக்கென்று திரும்பி, கண்ணுக்குள் பார்த்தாள்.

எளிதாய்ப் பதில் சொன்னாள்.

"நீ அப்பாவைப் பண்ணிண்டதுபோல யாராவது அறிமுகம் இல்லாதவனைப் பார்த்துடும்மா, அதுதான் ஈஸி.'

செவிட்டில் அறைந்ததுபோல இருந்தது. மேலே மேலே போய், கடைசியில் எலிப் பெண்ணுக்கு எலிப் பிள்ளை பார்த்ததுபோல, இது என்ன பத்தாம்பசலித்தனமான முடிவு?

பதில் சொன்ன பெண் எழுந்து போய் விட்டிருந்தாள். அவள் யோசித்துத்தான் சொல்லியிருப்பாள்.

ஏற்றுக்கொண்டு விட்டதில் ஒவ்வாமை வராது. நல்லதோ கெட்டதோ, புதிதாய் அறிமுகமாகும் மனிதனின் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு, வாழ்க்கை தொடங்க முடியும்; அல்லது உள்ளும் புறமுமாய் ஏற்கெனவே அறிந்த ஒரு நபரை அவரின் ப்ளஸ் மைனஸ்களோடு ஏற்றுக்கொள்ள முடியும். இரண்டுமில்லாமல் ஒருவரை நிச்சயம் செய்துவிட்டுப் பழகிப் பார்க்க வாய்ப்புத் தரப்படக் கூடாது.

'ஏம்மா இந்த அப்பாவைக் கல்யாணம் பண்ணிண்டே' என்று மகள் அன்று கேட்டதை நினைத்து இவளுக்கு மீண்டும் சிரிப்புச் சிரிப்பாய் வந்தது.

பின்குறிப்பு:-

கல்கி 16  ஆகஸ்ட் 1992 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com