சிறுகதை - நினைவாய் ஒரு பரிசு!

Short story...
Short story...

-திருவாரூர் பாபு

தியாகராஜனுக்குத் திருவாரூர் நிரம்ப பிடித்துப் போயிற்று. நான்கு வருடங்களாக பாட்டி கோடை விடுமுறைக்கு வா என்று பலமுறை கடிதம் போட்டும் ஏதேதோ காரணம் சொல்லி, வேண்டுமென்றே வராமல் போனதற்காக இப்போது வருத்தப்பட்டான். காரணம், பொழுது விடிந்து, மிக லேசாக சூரியன் எட்டிப் பார்க்கத் தொடங்கியதிலிருந்து மாலை மெலிதான இருட்டுப் பரவும் வரை இடுப்பில் குடமும் தோளில் கயிறும் தாங்கி கோயிலுக்குத் தண்ணீர் எடுக்கச் செல்லும் பெண்கள்.

பேசிக்கொண்டே வேகமாகச் செல்லும் பெண்களைப் பார்க்க மனது குதூகலமடைகிறது. பொழுது சாய, கோயிலுக்குள் நடக்க, இனிமையாக இருக்கிறது. அவனையறியாமலேயே கால்கள் வலுக்கட்டாயமாக கோயில் கேணி நோக்கி இழுத்துச்செல்கின்றன.

தியாகராஜன் புல்தரையில் அமர்ந்து கால்களை கட்டிக்கொண்டு பையன்கள் கிரிக்கெட் விளையாடுவதைப் பார்ப்பது மாதிரி தண்ணீர் இறைக்கும் பெண்களைப் பார்த்தான்.

இதையும் படியுங்கள்:
தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வித்தை உங்களிடம்தான் இருக்கிறது..!
Short story...

"ஆரூரா... தியாகேசா..." ஒருவன் சுத்தியபடி கார்க் பாலை வீச... பேட்ஸ் மேனாகப்பட்டவன் சற்று முன்னால் வந்து அதை ஆடினான். பந்து மட்டையில் படாமல் செல்ல... விக்கெட் கீப்பர் விரட்டிச் சென்று எடுத்து வந்தான்.

தியாகராஜன் ஐந்து நிமிடங்கள் பேட்டைத் தன்னிடம் கொடுத்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தான். பந்து நாலாபுறமும் பறக்கும். உடைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கொடுப்பார்களா?

சந்தேகத்தோடு எழுந்து நடந்தபோது அவள், அவனை தாண்டிக்கொண்டு போனாள். தியாராஜன் கடந்து செல்லும் அவளை உற்றுப் பார்த்தான். தினமும் வீடு தாண்டிதான் வருகிறாள். அழகாகவும் இருக்கிறாள். பார்க்கும்போது ஏனோ நெஞ்சு படபடவென இருக்கிறது. எச்சில் கூட்டி விழுங்க நேரிடுகிறது. யார் இவள்...?

தலையை உதறிக்கொண்டு, "ஃபிரென்ட்ஸ்... நான் சிறிது நேரம் பேட்டிங் செய்யலாமா?" சிரித்துக்கொண்டே கேட்டான்.

அவர்கள் தங்களுக்குள் கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டு அவனை உற்றுப் பார்த்து விட்டுக் கொடுத்தார்கள்.

ஒல்லியான உருவம். பலமில்லாதது போல் தோற்றம். இவன் என்னத்தை அடித்து விடப்போகிறான் என்று பெளலராகப் பட்டவன் சற்றே அளவு குறைந்த பந்து வீச, தியாகராஜன் ஒரு தேர்ந்த பேட்ஸ்மேனின் லாகவத்தோடு அந்தப் பந்தை எதிர்கொண்டு விளாச...

பேட்டில் வசமாகப்பட்ட பந்து,  பறந்து சென்று அப்போதுதான் குடத்தை இடுப்பில் தூக்கி வைத்த கமலவேணியின் கழுத்தைக் கடுமையாகத் தாக்கிவிட்டு குடத்திற்குள் விழ... கமலவேணி குடத்தோடு கீழே சரிந்தாள்.

பேட்டை போட்டுவிட்டு ஓடி வந்த தியாகராஜன், கீழே கிடந்த அவளையும் "பாவிப்பயல்களா.. தெரியும்டா ஒரு நாளைக்கு இத மாதிரி பண்ணுவிங்கன்னு..." என்று ஆத்திரமாய் ஓடி வந்த பெண்களையும் பயமாகப் பார்த்து மயங்கிச் சரிந்தான்.

தியாகராஜனுக்கு கமலவேணியைப் பார்க்கப் பார்க்க பாவமாக இருந்தது. மதியம் பாட்டி கண்ணயர்ந்த நேரம் பார்த்து சுவர் ஏறிக் குதித்து கல்யாண மண்டப வாசலில் கமலவேணியை எதிர்பார்த்துக் காத்திருந்தான். சிறிது நேரத்தில் அவள் அந்த வழியே வருவது தெரிய... அருகில் வந்ததும்... "ஹலோ" என்றான் சிரித்து, அருகில் சென்று.

கமலவேணி நின்று அவனைப் பார்த்தாள் கொஞ்சம் பயந்தாற்போல் இருந்தாள்.

''ஸாரி. ரொம்ப வலிச்சிட்டா?”

"இப்ப பரவால்ல."

''வேணும்னு அடிக்கலை."

"தெரியும்!" என்று வேகமாகப் போய்விட்டாள். லேசாகச் சிரித்தாளா என்ன?

அவள் கண்ணிலிருந்து மறையும்வரை அவளையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, வீட்டு சுவர் ஏறிக் குதித்து திரும்ப வீட்டுக்குள் செல்லும்போது சாலையின் எதிர்ப் பக்கத்திலிருந்து ரப்பர் பந்து வைத்து கிரிக்கெட் ஆடிய அந்தச் சிறுவன் அடித்த அடியில், பந்து பாய்ந்து வந்து தியாகராஜனின் முதுகில் பட... திரும்பிய தியாகராஜன், பந்தைப் பார்த்ததும் மயக்கமாகச் சரிந்தான்.

“என்ன டாக்டர் இது? இப்படி திடீர்னு மயக்கமாறான். அன்னிக்கு அப்படித்தான் கோயில் கிணற்றடியில் மயக்கமாயிட்டான். இப்ப வெறும் ரப்பர்பால் பட்டு மயக்கமாயிட்டான்? பயமா இருக்கு டாக்டர்!" பாட்டி, டாக்டரிடம் பேசிக்கொண்டிருந்தாள்.

"ஏன் மயக்கமா விழுந்தான்னு ஒங்களுக்குப் புரியலையா?"

"ரப்பர் பந்து முதுகுல அடிச்சா மயக்கமா வரும் டாக்டர்?" டாக்டர் சிரித்தபடி தலையாட்டினர்.

"ரப்பர் பந்தோ. கார்க் பந்தோ.. அது முக்கியமில்ல. பந்தைப் பார்த்தால் உங்க பேரனுக்கு மயக்கம் வருது. அதாவது அன்னைக்கு கோயில்ல அந்தப் பெண் கழுத்துல பந்தால அடிச்சி, அது மயங்கி விழுந்ததில்ல? அது அவன் மனசுல ஆழமா பதிஞ்சிட்டு... அதான் இன்னைக்கு மயக்கம் வந்ததுக்குக் காரணம்... அவன் கண்ணுல இனிமே பந்து படாத மாதிரி பார்த்துக்குங்க. அது போதும்!"

"நான் பார்த்துக்கறேன் டாக்டர்” என்றவள் பயமாய் வெளியே வந்தாள்.

இதையும் படியுங்கள்:
இந்த கோடை விடுமுறைக்கு ஏலகிரி மலை செல்கிறீர்களா?
Short story...

ரு பெண்ணோடு ஒரு வாரத்திற்குள் இத்தனை ஆழமாகப் பழக முடியுமா என்று அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. எத்தனை ஆழமாகத் தனக்குள் நிறைந்து விட்டாள் கமலவேணி?

ஆயிரங்கால் மண்டபம் இருட்டாக இருந்தது. ஒரு வாரமாக இந்த இருட்டுதான் சாதகமாக இருக்கிறது. ரகசியமாக கமலவேணியோடு பேசிக்கொண்டு காதல் செய்ய முடிகிறது. நாளை இந்த இருட்டு கிடைக்காது. கமலவேணியும் இருக்க மாட்டாள். வேகமாக விரைந்து கொண்டிருக்கும் பெங்களூர் எக்ஸ்பிரஸில் உட்கார்ந்திருப்பேன்....

"எப்ப ஊருக்குப் போறிங்க?"

''நாளைக்கு காலையில கிளம்பறேன்."

"ஊருக்குப் போனதும் என்னை மறந்துடுவிங்களா?"

"ஒன்ன மறக்க முடியுமா வேணி?" அவளை அப்படியே இழுத்து, அணைத்து, சுருட்டி, ஒரு பெட்டிக்குள் வைத்து பெங்களூர் கொண்டு சென்று விடலாமா என்று தோன்றிற்று.

"இனிமே ஒங்கள எப்பப் பார்க்கலாம்?"

"அடுத்த வருஷம் லீவுல..."

''ஒரு வருஷம் காத்திருக்கணுமா?"

"ம்... மாட்டியா?"

தலையை மேலும் கீழுமாக ஆட்டி, காத்திருப்பேன் என்பதாய் அர்த்தம் செய்தாள். கண்களில் நீர் தேங்கி நின்றது.

"என்னை மறந்துடுவீங்களா?"

"சீச்சி! அப்படியெல்லாம் பேசாத வேணி. நீதான் எனக்கு. எப்பவும் ஒன் நினைப்பு இருக்கிறமாதிரி எனக்கு ஒண்ணு கொடேன்" தவிப்பாய்க் கேட்டான்.

"ஒண்ணே ஒண்ணு இருக்கு. தரட்டுமா?"

"என்ன இருக்கு?" என்றான் ஆர்வமாய்.

கமலவேணி நிதானமாய் முந்தானையில் சுற்றி, அவன் கண்ணுக்குப் படாமல் வைத்திருந்த, அன்றைக்கு கோயிலில் அவன் - அடித்து அவள் கழுத்தைத் தாக்கி குடத்தினுள் விழுந்த பந்தை எடுத்து அவன் முகத்தருகே நீட்டினாள்.

பின்குறிப்பு:-

கல்கி 03  ஜூலை 1994 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com