சிறுகதை - நடிப்பு!

Short Story - Acting!
Short Story - Acting!

சாந்தம் தவழும் அந்த முகத்தைப் பார்த்தவுடனேயே
சண்முகப்பெருமாளுக்குள் சகலமும் ஒருமுறை புரண்டது.

“வாங்க சார்! உங்க செக்ரட்டரி போன் பண்ணிச் சொன்னார். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! வெளியே என் ரசிகர்கள்... போட்டோ எடுத்துட்டு அவங்களை அனுப்பிட்டு வர்றேன்!”

சூழ்ந்திருக்கும் மௌனத்தைக் குலைக்காமல், சிதைக்காமல் அதனூடே இழைந்து, நிதானமாய் ஆனால் கம்பீரமாக அந்தக் குரல்... கண்ணைப் பறிக்கிற வெண்ணிற உடையும், நெற்றியில் துலங்கும் திருநீறும் உதடு பிரியாமல் பேசுகிற அந்த பாவமும், அடுத்தவரின் கண்ணை ஊடுருவிப் பாய்கின்ற அந்தப் பார்வையும், பதற்றமில்லாமல் நடக்கும் அந்த நளினமும்... ஐயோ... இவரா அவர்... ‘கட்டிக்கடி நீ தொட்டுக்கடி’  என்று மலின ரகப் பாடல் வரிகளுக்கு,  அதைவிட மலின ரக இசையில் டப்பாங்குத்து ஆடும் அந்தச் சூர்யகாந்தனா இவர்?

சண்முகப்பெருமாள் கொஞ்சம் கலங்கலாய்த்தான் இருந்தார்.

“சொல்லுங்க?  என்ன, விஷயமா வந்தீறங்க?”  என்றார் ரசிகர்களை அனுப்பிவிட்டு வந்த சூர்யகாந்தன்.

மீண்டும் அதே நளினம்.

“வர்ற தையிலே ஒரு படம் பூஜை போட்றலாம்னு இருக்கேன். உங்களை நம்பித்தான்...”

“என்னை நம்பியா?”  மெலிதான சிரிப்பு. லட்சக்கணக்கில் ரசிகர்களை அள்ளிக் குவித்த அந்தச் சிரிப்பு.

“என்னைக் கொஞ்சம் மன்னிச்சுக்கணும் சண்முகப்பெருமாள்! நான் இனி நடிக்கிறதா இல்லை. போன படம் வெள்ளி விழா. இதே மரியாதையோட விலகிக்கிறதுதான் நல்லது.”

“அப்படியெல்லாம் சொல்லக் கூடாது நீங்க. வரிசையா மூணும் படுத்திருச்சு எனக்கு. உங்களை நம்பித்தான் இருக்கேன். என் குடும்பம் பிழைக்கணும். கொஞ்சம் தயவு பண்ணணும்!”

“என்னைப் புரிஞ்சிக்கலையே நீங்க! வாங்க என்கூட!” என்று நடந்தார் சூர்யகாந்தன்.

சூர்யா... எதையும் செய்யத் தயங்காத ரசிகர்கள். இன்னும் சொல்லப்போனால் வெறியர்கள். இதில் பெண்கள், சிறுசுகள், பெரிசுகள் எல்லாம் உள்ளடக்கம். ஒருமுறை சூர்யகாந்தன் பட ரிலீஸன்று, அவர் கட்-அவுட்டுக்குக் கிட்டத்தட்ட நூறு லிட்டர் பால் அபிஷேகம் செய்து, சாலையெல்லாம் பாலாறு பாயச் செய்து சாதனை படைத்தார்கள்.

“உள்ளே வாங்க! இது என் பூஜை ரூம்!”

ஒரு மிதமான வெப்பம் சூழ்ந்துகொண்டது. ஊதுவத்தியும், அகல் விளக்கும் எரிந்துகொண்டிருந்தன.

“உட்காருங்க!”

பொருந்தாத இடத்திற்கு வந்ததுபோல் தயங்கி உட்கார்ந்தார் சண்முகப் பெருமாள்.

“எனக்கு வேண்டுமட்டும் தெய்வம் கொடுத்திருச்சு! பணம், புகழ், செல்வாக்கு. கார், பங்களா... ஒரு மனிதனுக்கு என்னென்ன இருந்தா அவன் ராஜ வாழ்க்கை வாழ்வானோ அத்தனையும் பகவான் கொடுத்திருக்கான். நான் எதுக்கு இனி நடிக்கணும்? சொல்லுங்க! எனக்கு ஆன்மிகம் மட்டுமே பிடிக்கிறது. அதுதான் என் உயிர். என் மொத்த வாழ்க்கையும் இனி ஆன்மிகத்தில்தான். அது இங்கே... இந்தப் பரபரப்பில் இருந்தா எனக்குக் கிடைக்காது. அதனால நான் கொஞ்ச நாள்ல இமயமலைச் சாரலுக்குப் போகப் போறேன். அந்த அமைதி,  அந்த ஏகாந்தம்... மரங்கள்,  நீரோடை... பறவைகள்...

சிறிது நேரம் அமைதியாய் இலக்கில்லாமல் வெறித்தார். கண்களை மூடினார். “பகவானே” என முணுமுணுத்தது சண்முகப் பெருமாளுக்குக் கொஞ்சம் கேட்டது. மௌனத்தை மெலிதாகக் கீறிக்கொண்டு எழுந்த குரலில், சூர்யகாந்தன் மெல்லப் பேசினார்.

“சொல்லுங்க! இனியும் நான் நடிக்கணுமா?”

 “அவசியம் என் படத்தில நடிக்கணும். முடிச்சுக் கொடுத்துட்டு நீங்க புறப்பட வேண்டிய ஏற்பாட்டை நானே செய்துடறேன்!”

“இதைத்தான் எல்லோரும் சொல்றீங்க! நான் என் ஆன்மிகம்,  பகவான்னு ஓதுங்க விரும்பறேன். விட மாட்டேங்கிறீங்க..! இவ்வளவு வசதி இருந்தும் என்னால என் விருப்பப்படி நடக்க முடியுதா பாருங்க!” என்றார்.

சண்முகப் பெருமாள் தயக்கமாய்க் கொண்டு வந்து சூட்கேஸைப் பிரித்தார். “போன படத்துக்கு முப்பது வாங்கினீங்களாம்! நான் நாப்பது தர்றேன்...”

“நான் கேட்டனா...?  நான் கேட்டனா. உங்ககிட்ட?” குரலை உயர்த்தினார் சூர்யகாந்தன்

"மன்னிக்கணும் கொஞ்சம் தயவு பண்ணி...” பேச வேறு வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருந்தார் சண்முகப்பெருமாள்.

“கொஞ்ச நேரம் தொந்தரவு செய்யாதீங்க!” என்று சொல்லிவிட்டு மீண்டும் அந்த இலக்கில்லா வெறிப்பு:

கரைந்த கொஞ்ச நேரத்தில் சண்முகப் பெருமாள் கத்தியில் நின்றார். நிமிர்ந்த சூர்யகாந்தன். ''உங்களுக்காக! உங்க வேண்டுகோளுக்காக... உங்க நல்ல முகத்துக்காக, நான் நடிக்கிறேன். ஆனா முப்பது நாள் கால்ஷீட்தான். பிறகு இமயமலைக்குப் பயணம் தொடங்கிடுவேன். சரியா?”

“ஐயா! இது போதும்! இது போதும் எனக்கு!”

“போயிட்டு வாங்க! எனக்கு தியானத்துக்கு நேரம் ஆச்சு!”

பூஜை அறைக்குள் நடந்தார் சூர்யகாந்தன்.

இதையும் படியுங்கள்:
உடல் வலிகளைப் போக்கும் வெந்நீர் மருத்துவம்!
Short Story - Acting!

“என்னங்க இது! கொஞ்ச நாளா பேப்பர்ல நீங்க எங்கியோ மலைப் பக்கம் போகப் போறதா நியூஸ் வருது.. ஏதோ சாமி கும்பிடறீங்க, சரி! இதெல்லாம் என்ன... எனக்கு என்னவோ உங்களை நினைச்சா பயமா இருக்கு!'' என்றாள் உமா. உமா சூர்யகாந்தன்!

“அட பைத்தியம்! என்னை நீ புரிஞ்சுக்கிட்டது இவ்வளவுதான்!”

“என்ன சொல்றீங்க?”

“அதாவது... நேத்து வந்தாரே சண்முகப் பெருமாள். அவர்கிட்டே நான் அமைதி தேடி இமய மலைப் பக்கம் போறேன்னு சொன்னேன்;  நடிக்க மாட்டேன்னேன். என்ன செஞ்சார் அவர்? போன படத்தில் வாங்கின முப்பது லட்சத்தை நாப்பதாக்கிட்டார். இவர் படம் முடிஞ்சவுடனே திரும்பவும் இமயமலைன்னு சொல்வேன். இன்னும் ஐஞ்சு, பத்து ஏறும். இதே ரேட்ல போனா நம்ம சிமெண்ட் ஃபாக்டரியை அடுத்த வருஷமேகூட முடிச்சுடலாம். எப்படி நம்ம திட்டம்!”

“நல்ல திட்டம்தான். ஆனா இதெல்லாம்... அதாவது இந்த வேஷமெல்லாம் உங்க ரசிகர்களுக்குத் தெரிஞ்சா என்னாகும்?”

“அடச்சீ! அதெல்லாம் வெறும் கூட்டம்டி. ஆட்டு மந்தைக் கூட்டம். நான் எது செஞ்சாலும் ஏன்னு கேட்காது. ஏன்னா அந்தக் கூட்டம் அப்படியே பழகிடுச்சு! மாறவே மாறாது. மாத்தவும் முடியாது. முந்தா நாள் கூட நான் நடிக்கல. இமய மலைப் பக்கம் போறேன்னதும் ஒருத்தன் தீக்குளிக்க முயற்சி பண்ணியிருக்கான். என்ன ஒரு அறிவு பாரு அவனுக்கு? இவனுங்களாவது என்னைப் பத்தித் தெரிஞ்சிக்கிறதாவது... வெறும் வாத்து மடையனுங்க...”

-திருவையாறு பாலுசாமி

பின்குறிப்பு:-

கல்கி 04 ஏப்ரல்  1991 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com