சிறுகதை - அவளோடு மட்டும் பேசாதே...

ஓவியம்: ராமு
ஓவியம்: ராமு

-திருவாரூர் பாபு

“இங்க உட்காருங்க... உங்களுக்கு குளிர் காத்து ஒத்துக்காது..." பேருந்து தஞ்சாவூரிலிருந்து புறப்படும் போதே சொன்னாள். அவன் கேட்கவில்லை. இறுகிய முகத்துடன் ஜன்னல் வழியே வெளியே வெறிக்கத் தொடங்கியவன், இவள் பக்கம் திரும்பவே இல்லை. இதுகூட ஒருவிதமான தண்டனைதான் அவனை வருத்திக்கொண்டு அவளை கஷ்டப்படுத்தும் தண்டனை.

காரணம் சாவித்திரிக்குப் புரிந்தது. ஆனால்...?

திருமணமான இந்த ஒரு வருடத்தில் ரகுராமனிடம் சாவித்திரி இப்படிப்பட்ட கோபத்தை பார்த்ததில்லை. பிடிக்கவில்லையென்றால் முகம் சுழிப்பானே தவிர கோபப்பட மாட்டான். இதுவரை இரண்டு முறை முகம் சுழித்திருக்கிறான். தவறு உணர்ந்து, சாவித்திரியின் முகம் மாறுவது புரிந்து இரவே முகம் சுழித்தமைக்கு மன்னிப்புக் கேட்டிருக்கிறான்.

முகத்தைக் கைகளில் ஏந்தி, "ஸாரிம்மா..'' என்றிருக்கிறான்.

ஆனால், இப்போது செய்த தவறுக்கு.. அவள் மேல் பொங்கிய கோபத்துக்கு மன்னிப்பு கேட்பானா...?

மாட்டான் என்றே தோன்றியது.

சாவித்ரிக்கு கல்யாணத்தில் கலந்துகொள்ள அவ்வளவாக விருப்பம் இல்லை. அவள் வர வேண்டிய அவசியமும் இல்லை. தூரத்து உறவு வந்தது ஜாலிக்காக. மகிழ்ச்சிக்காக. விரையும் பேருந்தில் நெருக்கமாகக் கணவனோடு அமர்ந்து, அவன் கைகளைப் பற்றிக்கொண்டு, தோளில் முகம் சாய்த்து கிசுகிசுப்பாய் பேசுவதற்காக. அவன் அடிக்கும் ஜோக்குகளுக்கு சிரிப்பதற்காக.

சென்ற மாதம் அதிகாலையில் சிதம்பரம் சென்றபோது தூக்கம் தாங்க மாட்டாமல் தோளில் சரிந்து சரிந்து விழுந்தவனை இழுத்து மடியில் படுக்க வைத்துக் கொண்டாள். ரகுராமன் மனைவியின் மடியில் சுருண்டு படுத்துக்கொண்டான்.

பேருந்தில் இருந்த மொத்தத் தலைகளும் அவர்களையே வெறிக்க... சாவித்திரிக்கு அழகான, அன்பான கணவன் குழந்தைபோல் சுருண்டு மடியில் படுத்துத் தூங்குவது உள்ளுக்குள் புளகாங்கிதத்தை ஏற்படுத்தியது. பெருமையாக இருந்தது. மனசு முழுதும் மகிழ்ச்சியில் தத்தளித்தது.

இந்தச் சின்ன, ஆனால் மாபெரும் மகிழ்ச்சிக்காகத்தான் கல்யாணத்துக்கு -தஞ்சாவூருக்கு வந்தாள்.

மகிழ்ச்சிக்குப் பதில் வேதனை. சோகம் இப்படி இறுக்கமாக முகம் வைத்த புருஷனை இதுவரை அவள் பார்த்ததில்லை. பார்த்ததெல்லாம் சிரித்த முகமானவன். 'சாவி... சாவி' என்று நிமிடத்திற்கு நூறு தடவை அன்பொழுக அழைக்கின்றவன். அம்சமாக வாய்த்துவிட்ட கணவனை நினைத்து நினைத்து சந்தோஷப்பட்டு... அம்மாவிடமும் தங்கையிடமும் புருஷனின் பெருமையை... குடித்தனம் நடத்தும் அழகைச் சொல்லி சொல்லி மாய்ந்து.. தோழி உமாவுக்கு விளக்கமாய்க் கடிதம் எழுதி...

என் கண்ணே பட்டுவிட்டதோ...? என் திருஷ்டியே என் சந்தோஷத்திற்கு இடையூறாகி விட்டதோ...?

அவ்வளவுதானா..? இனி என்னோடு பேசவே மாட்டாரா...? இருவருக்கும் இடையில் இடைவெளி விழுந்து விடுமோ..? சாவித்ரிக்கு அழுகை பொங்கியது.

வீட்டை விட்டுக் கிளம்பும்போதே அறைக்குள் வைத்துச் சொன்னான். ஏற்கெனவே முதலிரவில் கலங்கிய கண்களோடு சொன்ன அதே வார்த்தைகள்.

"எவ...?"

"அதான்... அவ... சரோஜினி..."

"ம்... புரியுது... சொல்லுங்க..."

"நேருக்கு நேர் பார்த்தாலும் பேசிடாதே.."

"சரிங்க... பேசலை."

"ஒனக்கும் அவ சொந்தம்தான் இருந்தும் வேணாம். அந்தக் குடும்பத்தோட உறவோ, சகவாசமோ நமக்கு வேணாம்..."

"சரிங்க..." என்றவள் முகம் இறுகி அமர்ந்திருந்த கணவனை வியப்பால் பார்த்தாள். முதலிரவில் அவன் சொன்ன - முதன் முதலில் அவன் பேசிய வார்த்தைகள் நினைவில் ஓடின.

"சரோஜினியை தெரியுமா ஒனக்கு..?"

"உங்க அத்தை பொண்ணுதானே. தெரியுமே."

"எப்படித் தெரியும்?"

"எங்களுக்கும் சொந்தம்தானுங்க..."

மௌனமாக இருந்தான்.

"என்னவோ சொல்ல வந்தீங்க... நிறுத்திட்டீங்க..."

"ஒன்கிட்ட சொல்லலாமா? ஃபர்ஸ்ட் நைட்டுல இது தேவையான்னு யோசிக்கிறேன்.."

"ஒங்க இஷ்டம்..."

"சரி சொல்லிடறேன். நானே ஒன்கிட்ட சொன்னதா இருக்கட்டும். பிறகு யாராச்சும் சொல்லி... என் மேல வருத்தம் வரக் கூடாதுல்ல... சரோஜினியும் நானும் ஒருத்தரை யொருத்தர் விரும்பினோம். எனக்கு அவதான்னு சின்ன வயசுலயே அம்மா எனக்குள்ள ஒரு ஆசையை விதைச்சிட்டு... எனக்கும் அவ மேல ஒரு கிரேஸ் உண்டு. அவளுக்கும் என் மேல விருப்பம் உண்டு. லெட்டர் எழுதியிருக்கோம்... ஃபோட்டோகூட கொடுத்திருக்கா. ஆனா பணக்கார மாப்புள வந்தவுடனே மனசு மாறிட்டா. நான் மாமாகிட்ட அப்படி ஒரு எண்ணத்தோட பழகலேன்னுட்டா. என் அம்மாவுக்குக் கோவம் வந்துட்டு... அவ வேணவே வேணாம்னுட்டாங்க. இப்ப எங்க ரெண்டு குடும்பத்துக்கும் ராசி இல்லே..."

படபடவெனப் பொரிந்தான்.

"ம்..."

"நீயும் அவங்களோட பேச வேணாம். என்னடா புருஷன் மொதமொதலா பேசறதே நல்லா இல்ல... ஒருத்தர்கிட்ட பேச வேணாம்னு சொல்றானேன்னு நினைக்காதே. எனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை அவள வெறுக்கிறது மூலமா தீர்த்துக்கிறேன். அவ ஏமாத்தற குடும்பம். அவ அன்னைக்கு அது மாதிரி சொன்னவுடனே எனக்கு பொம்பளைங்க மேலேயே வெறுப்பு வந்துட்டு... கல்யாணமே வேணாம்னுதான் இருந்தேன். அம்மாவோட கட்டாயம்..."

சொல்லி முடித்தவனைப் பார்த்தபோது அவன் கண்கள் கலங்கி இருந்ததைக் கவனித்தாள்.

இதையும் படியுங்கள்:
மேக்கப் பிரஷ்கள்…பராமரிக்கும் வழிமுறைகள்!
ஓவியம்: ராமு

வன் சொன்னபடிதான் இருந்தாள். ஆனால் இன்று...? பேச வேண்டிய கட்டாயம்... சொல்லியே ஆக வேண்டிய சூழ்நிலை. இதைச் சொல்லாவிட்டால் எப்படி...?

ரகுராமன் கண்களில் படாமல் பேசி விடலாம் என்று நினைத்துத்தான் சாப்பிடப் போகும் வழியில் வைத்துப் பேசினாள். இரண்டே வார்த்தை. ஆனாலும் சாப்பிட்டுத் திரும்பி ரகுராமன் அந்த விநாடியிலா அவளைக் கடக்க வேண்டும்?

எரித்து விடுவது போல் அவளை பார்த்தபோதே திடுக் என்று இருந்தது. ஐயய்யோ என்று மனசு பதறிற்று. மண்டபத்தை விட்டுக் கிளம்பும்போது கோபமாக இருக்கிறான் என்று தெளிவாகப் புரிந்துவிட்டது.

ஸ்ஸிலிருந்து இறங்கி ஆட்டோ பிடித்து வீட்டுக்குத் திரும்பும்போதும் ரகுராமன் அவளிடம் ஒரு வார்த்தை பேச வில்லை.

வீட்டுக்குள் நுழைந்ததும், படாரென அறைக் கதவை அறைந்து சாத்தினான்.

"ஸாரிங்க..." சாவித்திரி வற்றிப் போன தொண்டையில் வார்த்தை வராமல் விழுங்கினாள்.

"என்ன பேசினேன்னு..." சாவித்திரி குழைந்த குரலில் கணவனை சமாதானப்படுத்தும் நோக்கில் பேசினாள்.

"என்ன எழவு பேசினியோ..." கத்தினான்.

"நான் சொல்றதைக் கொஞ்சம் பொறுமையா கேளுங்க. நான் அவுங்ககிட்ட பேசினது தப்புத்தான். ஆனா என்ன பேசினேன்னு கேளுங்க. அப்புறம் என்ன வேணும்னாலும் செய்யுங்க."

"என்ன பேசின...?" கடுப்பாய் கேட்டான்.

"ரொம்ப தேங்க்ஸ்'ன்னு சொன்னேன்."

ரகுராமன் அவளை உற்றுப் பார்த்தான்.

"எதுக்கு...?" குழப்பமாய்க் கேட்டான்.

"அவுங்க மட்டும் அன்னைக்கு ஒங்களத்தான் கட்டிப்பேன்னு சொல்லி, அதிலேயே பிடிவாதமா இருந்து, ஒங்களைக் கட்டிக்கிட்டு இருந்தா. நீங்க எனக்கு கிடைச்சிருப்பீங்களா..? எனக்கு இப்படி ஒரு அற்புதமான புருஷன், சந்தோஷமான வாழ்க்கை அமையக் காரணமா இருந்தவங்களுக்கு நன்றி சொல்றதுதானுங்க முறை...''

குரல் தழையப் பேசிய சாவித்திரியை ரகுராமன் பக்கத்தில் இழுத்து அணைத்துக்கொண்டான்.

பின்குறிப்பு:-

கல்கி 13 ஆகஸ்ட் 1995இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com