சிறுகதை - அரியர்ஸ் போய் போனஸ் வந்தது!

Short Story Image
Short Story Image

-ஜெனிதாசேகரன்

சென்ற மாதம் வாராது வந்த அரியர்ஸ் பணத்தால் தியாகுவுக்குத் தலைவலி வந்தது இப்படித்தான்!

மனைவி மல்லிகாவுக்கும், தங்கை வினிதாவுக்கும் எதிர்பாராத சந்தோஷத்தைக் கொடுக்க, இருவருக்கும் புடைவை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்த தியாகுவின் முகம், அடுத்த அரைமணி நேரத்தில் பார்ஸிலோனா சென்று திரும்பிய இந்திய வீரன் போல் ஆகிவிட்டது.

"ஏன் அண்ணா! எனக்கும் அண்ணி புடைவை போல ப்ளைனா எடுத்திருக்கலாமே! இப்பவெல்லாம் என்னை மாதிரி யங்ஸ்டர்ஸ், எல்லாம் அப்படித்தான் கட்றாங்க. அண்ணி புடைவைதான் காசுக்கு ஏத்த மாதிரி சூப்பரா இருக்கு" என்று கூறிவிட்டு, புழக்கடைப் பக்கம் நகர்ந்த வினிதாவின் முகம் ஒரு முழத்தில் இருந்தது.

மல்லிகாவின் புடைவையைவிட வினிதாவின் புடைவை இருபது ரூபாய் குறைவாகப் போனதே அதற்குக் காரணம். தங்கை அளித்த ஊசிக்குத்தலின் வலி குறைவதற்குள் மனைவியின் இடிதாக்குதல் ஆரம்பித்தது.

''ஏங்க! நீங்க புடைவை எடுக்கலேன்னு யாருங்க அழுதாங்க? ஏன் இப்படி கிழவி கட்ற புடைவையெல்லாம் எடுத்துக்கிட்டு வந்து கழுத்த அறுக்கறீங்க. தங்கச்சிக்காரிக்கு மட்டும் நிதானமா செலக்ட் பண்ணத் தெரியுது. பொண்டாட்டிகாரிக்கு மட்டும் ஏதோ கடனுக்கு! என்ன இருந்தாலும் அவ பாச மலராச்சே... நீட்டி முழக்கியவள். வினிதா வரும் ஓசை கேட்கவே, "உங்களை அப்புறம் பேசிக்கறேன்" என்று சொல்லிவிட்டு அடுப்பங்கரைக்குள் நுழைந்துகொண்டாள்.

னைவிக்கும், தங்கைக்கும் எதிர்பாராத மகிழ்ச்சியைக் கொடுக்கப் போய், எதிர்பாராதவிதமாக தனது மகிழ்ச்சியும் புஸ்வாணமாகி, வீட்டில் சரவெடிகள் வெடிக்கும் எனச் சற்றும் நினைக்காத தியாகு, வினிதா ஹிந்தி கிளாஸ் போனதும் மெள்ள அடுப்பங்கரைக்குள் நுழைந்தான்.

"மல்லி! ஒரு நல்ல யோசனை. உன் புடைவையை வினிக்கும், வினி புடைவையை ?" உனக்கும் மாற்றிக்கொள்ளலாமே?

"நல்லா இருக்கே நீங்க சொல்றது. கல்யாணம் ஆகி முதல் முதலா இப்பத்தான் புடைவைன்னு எடுத்துத் தந்திருக்கீங்க. அதை உங்க பாசமலருக்காக உடனே மாத்திக்கணுமாக்கும்!"

"சரி சரி எப்படியாவது தொலை. நீ நனையவும் மாட்டே, காயவும் மாட்டே" என்று சலித்துக்கொண்டே நகர்ந்தான் தியாகு.

வினி வந்த பிறகு, "அடுத்தமாதம் தீபாவளி போனஸ் வரும். அதில் தீபாவளிக்கு ஆளுக்கு ஒரு புடைவை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்களே செலக்ட் பண்ணிக்கங்க" என்று இருவரையும் சமாதானப் படுத்தினான் தியாகு. அவர்கள் முகமும் ஒருவாறு நார்மலுக்கு வர, தன் இரட்டைத் தலைவலிக்கு அமிர்தாஞ்சன் பூசிக்கொண்டது போலிருந்தது அவனுக்கு.

இதையும் படியுங்கள்:
உடல் வலு பெறவும், எடை குறையவும் உதவும் ஸ்கிப்பிங்!
Short Story Image

ன்று போனஸ்.

''ஏங்க! அடுத்த மாசம் என் தங்கச்சி கல்யாணம் வருதே... அதனால போனஸ் பணத்தில் இரண்டு புடைவையா வாங்கிக் கொடுத்தீங்கன்னா நல்லாயிருக்கும்" என்றவாறே தியாகுவின் காலரைச் சரிசெய்து விட்டாள் மல்லிகா.

"இல்லை மல்லி. ஆளுக்கு ஒரு புடைவைதான். இன்னும் மீதி செலவெல்லாம் வேற இருக்கே" என்று சொல்லிவிட்டு வினிதாவையும் அழைத்து ஆளுக்கு முந்நூற்று ஐம்பது ரூபாயைக் கொடுத்துவிட்டு ஆபீஸ் புறப்பட்டவனை, தங்கையின் குரல் தடுத்து நிறுத்தியது.

"அண்ணா! ஆபீஸ் முடிஞ்சதும் நேரா குமரன் வந்தீங்கன்னா நாம ரெண்டு பேருமே செலக்ட் பண்ணலாம் என்றாள் வினி.

''முடிந்தால் வரேம்மா" என்றதும் பல்லவனைப் பிடிக்கப் பறந்தாள் வினி.

"ஏங்க!"

மல்லிகாவின் அவசரக் குரல் தியாகுவை ரிவர்ஸ் கீர்போட்டு இழுத்தது...

''ஏங்க! நான் நல்லியில்தான் எடுக்கப் போறேன்.'முடிந்தால்' வர்றீங்களா?" என்று 'முடிந்தாலு'க்கு அதிக அழுத்தத்தைக் கொடுத்தாள்.

"நான் எங்கேயும் வரலே. ஆளை விடுங்கடி" என்று கத்த வேண்டும் போலிருந்தது தியாகுவுக்கு. மாறாக ஒருமுறை மல்லிகாவைக் கோபமாகப் பார்த்துவிட்டு பஸ் ஸ்டாப்பை நோக்கி ஓடினான் தியாகு.

ன்ன தியாகு; வேலை ரொம்ப மும்முரமா நடக்குது போலிருக்கு?"

மாலை ஆறு மணிவரை ஃபைலில் மூழ்கி இருந்த தியாகுவை அக்கௌண்டன்ட் மாதவனின் குரல் நிமிரச் செய்தது.

''தியாகு! தலை தீபாவளிக்கு என் மாப்பிள்ளைக்கு குமரன்ல போய் டிரஸ் எடுக்கணும். நீங்க போடற டிசைன்ஸ் நல்லாருக்கு. அதனால நீங்க வந்து செலக்ட் பண்ண உதவணும்... போகலாமா" என்றார்.

தியாகுவுக்குத் தர்மசங்கடமாக இருந்தது. "நாளைக்கு போகலாமே சார்" என்றான்.

"இல்லை தியாகு. தைச்சு வாங்க லேட் ஆயிடும்.''

"அப்படின்னா மவுன்ட் ரோட்ல ஏதாவது கடைக்குப் போவமே ஸார்."

''மவுண்ட்ரோட் கடைன்னா கைவிட்டுக் காசு தரணுமே! எனக்கு இன்றோடு குமரனில் பரிசுக் கூப்பன் முடிகிறது.'

தியாகு நெளிந்தான். வேறு வழியில்லை. மாதவனால் அவனுக்குச் சில காரியங்கள் நடந்தாக வேண்டும்.

இதையும் படியுங்கள்:
இன்றே கைவிட வேண்டிய 10 நச்சுப் பழக்கங்கள்!
Short Story Image

குமரனுக்குச் சென்று இறங்கும்போது மணி ஏழுக்கு மேல் ஆகிவிட்டது.

வாசலிலேயே வினிதா தோழி ரீட்டாவுடன் நின்றிருந்தாள்.

"என்னண்ணா! ஆறு மணிக்கு வரச் சொன்னா இப்ப வர்றீங்களே! நானும் ரீட்டாவுமே செலக்ட் பண்ணிட்டோம்" என்று இரண்டு புடைவைகளை நீட்டினாள்.

''ஏதும்மா இரண்டு புடைவை?  இன்னொன்று ரீட்டாவுடையதா?" என்றான் தியாகு.

"இல்லண்ணா! நீங்க கொடுத்த பணத்தில் ஒண்ணு. இன்னொன்ணு என் சேமிப்பில் எடுத்தது" என்று வினி கூறியதும் தன் மனைவியின் 'கருணை முகம்' நினைவுக்கு வந்தது. சொல்லி வைத்தாற்போல் மல்லிகாவும் ஆட்டோவிலிருந்து இறங்கினாள்.

''அண்ணி! என் புடைவைங்களைப் பாருங்க. எப்படி என் செலக்ஷன்?" என இரண்டு புடைவைகளையும் வினி மல்லிகாவிடம் கொடுக்க, தியாகுவின் முகம் அஷ்ட கோணலாகி வழிந்தது. மல்லிகாவின் சூரிய தரிசனத்தின் சூடு தியாகுவைச் சுட ஆரம்பித்தது.

"நான் கூப்பிட்டதற்கு வர முடியவில்லை. பாசமலருக்கு செலக்ஷன் செய்ய வந்துட்டீங்களா? இதிலே அவளுக்கு இரண்டு புடைவை வேறா' என்று பார்வையிலேயே பேசி அவனுக்கு மட்டும் தெரியும்படி பல்லைக் கடித்தவள், 'விருட்'டென்று ஆட்டோவில் புகுந்துகொண்டாள்.

வினியும் விடை பெற்றுக்கொண்டாள். அரியர்ஸ் தந்து விட்டுப் போன தலைவலிக்கு, போனஸ் மருந்து தடவும் எனப் பார்த்தால் அது திருகுவலியைத் தந்துவிட்டதே என எண்ணியபடியே தியாகு அருகிலிருந்த மெடிக்கல் ஷாப்பில் நுழைந்து ''இரண்டு தலைவலி மாத்திரை, ஒரு அமிர்தாஞ்சன்" என்றான்.

ஒன்றும் புரியாமல் தியாகுவைப் பரிதாபமாகப் பார்த்தார் மாதவன்

பின்குறிப்பு:-

கல்கி 15 நவம்பர் 1992 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com