சிறு வயதில் நொண்யடித்து ஓடியாடி விளையாடுவதுடன் ஸ்கிப்பிங் எனப்படும் தாம்பாட்டத்தை தவறாமல் அனைவரும் ஆடியிருப்போம். தாம்பு என்றால் கயிறு என்று பொருள். கயிறு கொண்டு குதித்து ஆடும் ஆட்டமே தாம்பாட்டம். அம்மாவும் பெண்ணும் கூட இணைந்து வயது வித்தியாசமின்றி அன்று ஆடிய ஸ்கிப்பிங் தொழில்நுட்ப வசதிகள் அதிகரித்து வரும் இந்த நவீன காலத்தில் மறந்துபோன விளையாட்டுகளில் ஒன்றாகவே ஆகிவிட்டது. ஸ்கிப்பிங் ஆடுவதால் எத்தனை நன்மைகள் கிடைக்கிறது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
தினமும் ஸ்கிப்பிங் செய்வது எலும்புகளுக்கு கூடுதல் பலத்தைத் தருகிறது. உடல் எடையை குறைக்க விரும்பினால் முதலில் ஸ்கிப்பிங்கை தேர்வு செய்யலாம். இது தேவையற்ற கொழுப்பைக் கரைத்து, சீரான எடை கொண்ட உடல் அமைப்பை பெறவும் உதவுகிறது. இது கொழுப்பை கணிசமாகக் குறைத்து இதய நோய்களுடன் தொடர்புடைய ஆபத்து காரணிகளை விரட்டி அடிக்கும் என்பது ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக, வீட்டில் இருந்தபடியே எளிமையாக செலவின்றி இந்தப் பயிற்சியை செய்யலாம் என்பது கூடுதல் சிறப்பு. ஆனால், இந்த ஸ்கிப்பிங் செய்வதால் சில பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். இனி, யாரெல்லாம் இதைத் தவிர்க்க வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
1. இரத்த சோகை, நரம்புத் தளர்ச்சி முதலிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள்,
2. ஹெர்னியா அறுவை சிகிச்சை, கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள்,
3. அடிக்கடி பலவித வயிற்றுக்கோளாறுகளால் அவதிப்படுபவர்கள்,
4. மெனோபாஸ் எனப்படும் மாதவிலக்கு நிற்கும் கால கட்டத்தில் உள்ளவர்கள்,
5. திருமணமான பின் கருவுறுதலில் பலவீனமுள்ளவர்கள் ஆகியோர்.
இவர்களைத் தவிர்த்து பொதுவாகவே தங்களுடைய வயது, உடல் நிலை, வாழ்வியல் சூழல்களுக்கேற்ப ஸ்கிப்பிங் எண்ணிக்கையை வரையறுக்காமல் அளவுக்கு அதிகமாக ஸ்கிப்பிங் செய்தால், நோய் எதிர்ப்பாற்றல் குறைவு, அதீத உடல் மெலிவு உள்ளிட்ட பல பிரச்னைகள் நேரிடும் வாய்ப்பு உள்ளது என்கின்றனர்.
அதிக உடல் பருமனுள்ள பெண்கள், எடுத்தவுடனே ஸ்கிப்பிங் பயிற்சி மூலம் எடைகுறைக்க முடியாது. இது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். இதர உடற்பயிற்சிகளால், உடற்பருமனை ஓரளவு குறைத்துவிட்டு, பிறகு மருத்துவர் ஆலோசனைப்படி வேண்டுமானால் ஸ்கிப்பிங் செய்யலாம்.
முக்கியமாக ஸ்கிப்பிங் பயிற்சியை முறையாக மேற்கொள்ளாவிட்டால், குதிகால் வலி, பாத வலி, முழங்கால் வலி உள்ளிட்ட பிரச்னைகளும் பெண்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.