சிறுகதை - அழுத்தக்காரி!

ஓவியம்: லதா
ஓவியம்: லதா

-ரிஷபன்

ண்ணா இந்த மாதிரி பிடிவாதமாய் இருப்பான் என்று நாங்கள் முதலில் நினைக்கவில்லை. அழுத்தமாய் இருந்து தான் விரும்பியதைச் சாதித்து விட்டான்.

ரேவதியின் கழுத்தில் அவன் மூன்று முடிச்சிட்டபோது, பின்னால் நின்ற மூவரும் அழுதோம். அம்மாவும் அழுதாள்.

'பாவம்... செத்துப்போன அப்பாவை நினைச்சுக்கிட்டு அழுகிறாங்க..." என்றார் யாரோ.

இல்லை. அதற்காக இல்லை. இருபத்திரண்டு வயசான என்னையும்,  இரண்டிரண்டு வருட இடைவெளியில் பிறந்த என் இரு தங்கைகளையும் இவன் கரையேற்றுவான் என்று அம்மா நம்பியது வீண்தானோ?

தங்கைக்குக் கல்யாணம் செய்வான் என்று நம்பிய நேரத்தில், தனக்கொரு கல்யாணம் செய்துகொண்டு விட்டானே...!

சுற்றிலும் உறவினர் கூட்டம். எதிரே ஜ்வாலையுடன் ஹோமம்... அரக்குக் கூரைப் புடைவையில் மன்னி... எனக்குள்ளும் தீ பரவியது.

ரே வாரம்.அண்ணா, ரேவதியுடன் கிளம்பிப் போக... எங்களது போர்ஷனில்... காரை பெயர்ந்த சுவர்... கல்யாணத்தை முன்னிட்டு அவசரமாய்ச் செய்த வெள்ளையடிப்பு... தரையில் பெயர்ந்த பள்ளங்களில் அவசர நிரவல். போனால் போகிறதென்று கல்யாணத்தினால் எங்களுக்குக் கிடைத்த புதுத் துணிகள்... பழைய கிழிசல்களுக்கு நடுவே பளிச்சிட்டு...

"இனிமேல் என்னம்மா பண்ணறது...?" என்றேன் கவலையுடன்.

"கணேசன் பணம் அனுப்பறேன்னு சொன்னான்... " என்றாள் வெள்ளையாய். "நீ நம்பறியா...?"

'"ஏன்..? இதுவரைக்கும் அனுப்பலையா? "

புவனாவும், சாருவும் எந்தக் கவலையும் இன்றி... ஒருத்தி மாத நாவலிலும் இன்னொருத்தி ரேடியோவிலுமாக மூழ்கிப் போனார்கள்.

மனம் அலுத்து, கிழிந்து போன உள் பாவாடையை எடுத்துத் தைக்க ஆரம்பித்தேன்.

டிதம் வந்தது. கணேசனிடம் இருந்துதான்.

"ரேவதி வருகிறாள்... வருகிற பதினாலாம் தேதி. ஒரு வாரம் தங்குவாள். பொங்கலுக்கு அங்கு வரும்போது என்னுடன் திரும்புவாள்...

ஸ்டேஷனில் போய்க் கூட்டி வந்தோம்.

அளந்துதான் பேசினாள். கணேசனைப் போலவே அழுத்தக்காரியோ...? ரொம்ப இயல்பாய் வெறுப்பு வந்தது.

அம்மாவை நமஸ்காரம் செய்தாள். எப்போதும்போல அம்மாவுக்குக் குளிர்ந்துவிட்டது. நாட்டுப் பெண்ணைப் பற்றிப் பெருமிதம் முகத்தில் அப்பிக்கொண்டது.

'அடச்சீ...' என்னாச்சு எனக்குள்.

சாருவுடன் சுலபமாய் ஒட்டிக்கொண்டாள். கையில் மெஹந்தி இட்டதும் புவனா பூரித்துப்போனாள். எங்கள் குடும்பத்தில் தப்பிப் பிறந்த வெளுப்புக்காரி. வெளியில் போனால்கூட இரண்டடி  தள்ளி நடந்து வருகிற நாசூக்குக்காரி.

"வஸு... " என்றாள் என்னிடம். "

"பெயரைச் சுருக்கினால் எனக்குப் பிடிக்காது" என்றேன்.

"ஓ...ஸாரி... இனிமேல் வஸந்தின்னே கூப்பிடறேன்..." என்றாள் சிரிப்பு மாறாமல்.

இதுதான்... இந்தச் சிரிப்புதான்... எல்லோரும் ஈஷிக்கொள்கிறார்கள். ஏதோ வேலையாகப் போவது போல் அவசரமாய் விலகினேன்.

ஹாலில் அவர்கள் படுத்துக் கொள்ள, நானும் அம்மாவும் வழக்கம்போல் சமையலறையில் படுத்துக்கொண்டோம். மின் விசிறி காற்றைத் தலையில் அடித்தது. கல்யாணத்தில் வந்த சீர். கணேசனால் நிராகரிக்கப்பட்டு, எங்களுக்கு இப்போது உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
நம்மை நாமே நம்பாமல் இருந்தால் எப்படி?
ஓவியம்: லதா

"நான் கூட என்னமோ நினைச்சேன். ரொம்ப நல்ல பொண்ணுடி..."  என்றாள் அம்மா.

" எவ...?''

"உன் மன்னிதான்."

" என்னவாம்...?" என்றேன் எரிச்சலுடன்.

"உனக்குக் கல்யாணம் ஆகிற வரைக்கும் குழந்தை வேண்டாம்னு முடிவு பண்ணியிருக்காளாம். பொண்ணு பார்த்துட்டு வந்த பிறகு, இவன் ஒரு நாள் அவங்க வீட்டுக்குப் போயிருக்கான... பளிச்சுன்னு சொல்லிட்டாளாம். இந்தக் கண்டிஷனுக்குச் சம்மதிச்சாத்தான் கல்யாணம்னு.... "

"எ... என்ன? "

"இவன்கூட கேட்டானாம்... எனக்கு இல்லாத அக்கறை... என் தங்கச்சி மேல்... உனக்கு எதுக்குன்னு. "

"ம், என்றேன் முனகலாய்."

"என்னைத் தவிர வேற யார் அக்கறைப் படணும்னு கேட்டாளாம்."

"ப்ச்."

"இப்பவே ஊருக்கு எதுக்குப் போகணும்னு கேட்டானாம்... இல்லே... போய்த்தான் தீருவேன்னு பிடிவாதமா வந்திருக்கா. ஒரு வாரத்துல எல்லாம் திரும்பி வர முடியாது... எனக்கு மனசுல படற வரை அங்கேதான் இருப்பேன்னாளாம்..."

ஒவியம்; லதா
ஒவியம்; லதா

அம்மா மறுகிப் போனாள். அதனால்தான் வந்ததில் இருந்து கணேசனுக்குக் கடிதம் கூடப் போடவில்லையாம். முழு மனசும் இங்கேதானாம்.

எப்போது தூங்கிப் போனேனோ....?

றிகாய் மார்க்கெட்டுக்கு மன்னியும் சாருவுமாய்ப் போய் விட்டுத் திரும்பினார்கள்.

"சேப்பங்கிழங்கு வாங்கியிருக்கா மன்னி..." என்றாள் சாரு.

கணேசனுக்கு ரொம்பப் பிடிக்கும்.

இன்றைக்கு வருகிறானே...!

"இன்றைக்கு இரவே கிளம்பணும்னு எழுதியிருந்தானே?  நீ உன் துணிமணிகளை எடுத்து வைச்சுக்கலையா...?" என்றாள் அம்மா.

எப்போதும் போல், தணிவாய்ச் சிரித்தாள், 'வைத்துக் கொள்கிறேன்' அல்லது 'இல்லை' எந்த அர்த்தமும் புலப்படாத ஒரு சாந்தச் சிரிப்பு.

"என்னடி... கிளம்பறியோன்னோ...?"

 "எம்மா... நான் இங்கே இருக்கக்கூடாதா...?" என்றாள் மெதுவாய்.

"சீச்சீ... எவ்வளவு நாள் வேணும்னாலும் இரு...ஆனா... அவனை... அவன் எப்படித் தனியா அங்கே இருப்பான்...?"

"எல்லாம் இருப்பார்...' என்றாள்.

எனக்குப் புரிந்தது. மன்னி அழுத்தக்காரிதான். நிச்சயம் நினைத்ததைச் சாதிப்பாள். எவர் மனமும் புண்படாத மாதிரி இந்த அழுத்தம் ரசிக்கக் கூடியது... நல்லது செய்யக் கூடியது.

எனக்கு மன்னியை உடனே நமஸ்கரிக்க வேண்டும் போலிருந்தது. கண்களில் நீர் கட்டிக்கொண்டது.

ஏதோ வேலையாய்ப் போவதுபோல் இப்போதும் விலகிப் போனேன்.

ஆனால் என் மனம் மட்டும் மாறியிருந்தது.

பின்குறிப்பு:-

கல்கி 03 மார்ச் 1991 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com