சிறுகதை - பலூன்!

Balloon seller
Balloon seller

கடிகாரத்தைப் பார்த்தேன்.   மணி காலை எட்டு முப்பத்தி மூன்று. 

நேற்று மாலை என்னுடைய மானேஜர் அவசரமான ஒரு ஃபைலைக் கையில் திணித்து அதை வீட்டிற்குக் கொண்டு போய் அது சம்பந்தப்பட்ட வேலையை முடித்து மறுநாள் காலை ஒன்பது மணிக்கெல்லாம் ஃபைலை நேராக தன் வீட்டிற்குக் கொண்டு வந்து தரச் சொல்லியிருந்தார். 

இரவு பதினொன்று நாற்பத்தி நான்கு வரை கண்விழித்து அந்த வேலையை முடித்தேன். காலை ஃபைலை எடுத்துக் கொண்டு இரண்டு தெருக்கள் தள்ளியிருக்கும் என் மானேஜரின் வீட்டிற்குப் புறப்பட்டேன். மானேஜரின் வீட்டருகே குடியிருப்பது எவ்வளவு தவறு என்பது இதுபோன்ற சமயங்களில்தான் புரிகிறது. 

அந்த சமயத்தில் ஒரு ஆள் பலூன் விற்றுக் கொண்டு வந்தான். அதைப் பார்த்த என் மூன்று வயது மகன் பலூன் வேண்டும் என்று அடம்பிடித்தான். இதை கவனித்த பலூன்காரன் தன் வேலையைக் காட்டினான். உடனே கையிலிருந்து நீளமான பலூனைத் தேய்த்து சத்தத்தை உண்டாக்கினான். 

அந்த சத்தத்தைக் கேட்ட பையன் ஆக்ரோஷமாய் அடம்பிடிக்க ஆரம்பித்தான். 

“அதெல்லாம் வேணான்டா. வாங்கிக் குடுத்தா உடைச்சிட்டு இன்னொன்னு வேணும்னு அடம்பிடிப்பே.  எதுக்கு பத்து ரூபாயை வேஸ்ட் பண்ணணும்.  சாயங்காலம் கடைக்கு கூட்டிகிட்டு போய் சாக்லெட் வாங்கித் தர்றேன். சரியா?” 

பையனை சமாதானப்படுத்தி விட்டு புறப்பட எத்தனித்தேன். 

பலூன்காரன் நகராமல் என் வீட்டின் முன்னால் நின்றவாறே சத்தத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தான். 

பையன் மீண்டும் அடம்பிடிக்கத் தொடங்கினான். 

“என்னங்க. பையன் ஆசையா கேட்கறான். பத்து ரூபாய்தானே. போனாப்போவுது. ஒண்ணு வாங்கிக் குடுத்துட்டுப் போங்களேன்.” 

என் மனைவி பையனுக்கு சிபாரிசு செய்தாள். 

“பத்து ரூபா உனக்கு போனாப்போவுதா?  காசை இப்படி அலட்சியமா நெனைக்கக் கூடாது. அது அப்புறம் நம்மளை அலட்சியப்படுத்திடும். புரிஞ்சிதா?” 

அவளை முறைத்தவாறே இப்போது பலூன்காரனிடம் அந்த கோபத்தைக் காட்டினேன். 

“அதான் வேணாம்னு சொல்றேனில்லே. உனக்கு வேற ஏதாவது சொல்லணுமா? இடத்தை காலி பண்ணு.” 

அவன் முணுமுணுத்தவாறே புறப்பட்டான். 

பலூன் கிடைக்காத ஏமாற்றத்தில் பையன் அழுது கொண்டிருந்தான். 

“வாயை மூடுடா. இல்ல அறைஞ்சி பல்லைப் பேத்துடுவேன்.” 

நான் போட்ட அதட்டலில் பையன் பயந்து அடங்கிப் போனான். 

இதையும் படியுங்கள்:
சிறுகதை - 10 தடவை சொல்லியாச்சு!
Balloon seller

ந்த ஃபைலுடன் என் மானேஜரின் வீட்டிற்குப் போய் உட்கார்ந்தேன். 

இருபது நிமிடங்களாகியும் அவர் புறப்படக் காணோம்.  அடுத்த பத்தாவது நிமிடத்தில் புறப்பட்டு வெளியே வந்தார். அவருடன் அவருடைய பேரப் பையனும் வந்தான். 

அந்த சமயத்தில் ஒரு பலூன்காரன் வழக்கம் போல பலூனைத் தேய்த்து ஓசையை எழுப்பிக் கொண்டே வந்தான். அதைப் பார்த்த மானேஜரின் பேரப் பையன் தனக்கு பலூன் வேண்டுமென தன் தாத்தாவிடம் கேட்டான். 

மானேஜர் பர்ஸைத் திறந்தார். 

“சில்லறை நோட்டு இல்லையேப்பா. ஐநூறா இருக்கே.” 

உதட்டைப் பிதுக்கினார். 

இதைப் பார்த்த நான் உடனே பாக்கெட்டில் கைவிட்டு பத்து ரூபாயை எடுத்து பலூன்காரனிடம் தந்து ஒரு பலூன் வாங்கி மானேஜரின் பேரப் பையனிடம் கொடுத்தேன். 

சந்தோஷமாய் அதை வாங்கிக் கொண்டான் அந்த பையன். 

“எதுக்குப்பா நீ வாங்கித் தர்றே?” 

மற்ற அல்ப மானேஜர்களைப் போல இவர் இல்லை. நல்லவர். 

“இருக்கட்டும் சார். சின்னப்பசங்க ஆசைப்பட்டு கேட்டா வாங்கித் தரணும் சார்.” 

அடுத்த வினாடியில் டப்பென்று ஒரு சத்தம் கேட்டது. 

அந்த பையன் பலூனை உடைத்து விட்டான். 

“தாத்தா தாத்தா இன்னொரு பலூன் வேணும்” 

அழுது அடம் பிடிக்க ஆரம்பித்தான். 

சற்று தொலைவில் நின்று கொண்டிருந்த பலூன்காரனைக் கூப்பிட்டேன். 

நான் மறுபடியும் ஒரு பத்து ரூபாயைக் கொடுத்து பலூனை வாங்கி அவன் அழுகையை நிறுத்தினேன். 

அப்போதுதான் பலூன்காரனை கவனித்தேன். 

அரைமணி நேரத்திற்கு முன்னால் என் வீட்டருகே விற்றுக் கொண்டிருந்த அதே பலூன்காரன். 

இப்போது அவன் என்னைப் பார்த்து சிரித்தான். 

‘உன் பையன் பலூன் கேட்டப்ப உடைச்சிடுவே. எதுக்கு பத்து ரூபாய் தண்டம்னு சொன்னே. ஆனா இப்ப உன் அதிகாரியோட பேரப் பையனுக்கு யோசிக்காம ஒண்ணுக்கு ரெண்டு பலூனா வாங்கித் தர்றே.  உனக்கெல்லாம் எதுக்குய்யா குழந்தை’ 

பலூன்காரன் தன்னுடைய அந்த ஒரு சிரிப்பினாலேயே இத்தனையையும் எனக்கு உணர்த்தி விட்டான். 

உண்மை என் மனதைச் சுட்டது. 

மாலை வீட்டிற்குத் திரும்பியபோது என் மகனுக்கு ஒரு பலூன் வாங்கிச் சென்றேன்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com