சிறுகதை – போதி!

சிறுகதை ...
ஓவியம்; மாருதி
Published on

-ரிஷபன்

"உங்க பேரு..."

"ரேணுகா...''

டோக்கன் நம்பர் ஆறு என்று எழுதியிருந்தது. ஷைலஜா சிணுங்கினாள்.

"அப்பா... எப்போ வருவா?"

"வருவார்...வா... உட்காரலாம்..."

பழுப்பு நிற பாலிவினைல் இருக்கைகள்.

"போ..ரடிக்கும்மா..."

ஆறு வயசில் குழுந்தைக்கு 'அலுப்பு' பரிச்சயமாகிவிட்டது. நினைக்கும்போதே இப்போதைய சூழல் மீறி, சிரிப்பு வந்தது.

"டாக்டர் எப்ப வருவார்?"

"ஆறு மணிக்கு..."

''உன் டோக்கன் என்ன நம்பர்? எங்கே காட்டு?"

"தொலைச்சிரக் கூடாது!"

மஞ்சளில் சதுரமாய் வெட்டப்பட்ட, கிளினிக் சீல் பதித்த டோக்கன். எழுதியிருந்த பெயரைப் படித்தாள் ஷைலஜா.

"ரே...ணு...கா... அப்ப நெஜம்மா உனக்குத்தானா டாக்டர்?" என்றது ஷைலஜா.

குழந்தையிடம் இப்போது தெளிவு தெரிந்தது. இதுவரை, ஒரு வேளை தனக்காகத்தான் வந்திருக்கிறாளோ என்று உள்ளூர பயந்துகொண்டிருந்தாள். இல்லையென்று உறுதியானதும் இப்போது சுறுசுறுப்பானாள்.

"உனக்கு எதுக்கும்மா?"

''ம்...''

குழந்தையிடம் என்ன சொல்வது? எப்படிச் சொல்வது?

"சொல்லும்மா..."

ஷைலஜாவிடம் பிடிவாதம் அதிகம். சின்ன வயசில் சுலபமாய் திசை திருப்பலாம். வேறு விளையாட்டில் கவனம் மாற்றலாம். இப்போது அது செல்லு படியாகவில்லை. அழுத்தமாய், கேட்க நினைத்ததை, செய்ய நினைத்ததைச் செய்த பிறகுதான் ஓய்கிறாள்.

"அப்பா... வராரா... பாரு..."

ஷுவில் வால்ட் டிஸ்னி பொம்மைகள். டாக் டாக்கென்று வெளியே ஓடினாள். ஒரே நிமிடத்தில் திரும்பினாள்.

"வரலேம்மா..."

இப்போது அவள் கேள்வி மறந்து போயிருந்தாள். கிளினிக் வாசலின் பூச்செடிகள். நடைபாதையில் உதிர்ந்த மலர்கள் என்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

குவை இன்னும் காணோம். நிச்சயம் ஆறு மணிக்குள் வந்துவிடுவதாக உறுதி சொல்லியிருந்தார். மணி இப்போது ஆறை நெருங்கிக்கொண்டிருந்தது.

டோக்கன் நம்பர் ஆறுதான். டாக்டர் வந்து, ஐந்து நபர்கள் போக எப்படியும் அரைமணிக்கு மேலாகும்.

ஆனாலும்... ரகு இந்த நிமிஷம் அருகில் இருந்தால் தேவலை என்று தோன்றியது.

டாக்டர் வேறு என்ன சொல்லப் போகிறாளோ..

நினைக்கும்போதே அடி வயிற்றைப் பிசைந்தது. சட்டென்று மனசு கனத்துப் போக...

ஷைலஜாவின் மீது பார்வையைத் திருப்பினாள்.

டோக்கன் கொடுக்கிற பெண்ணுக்குச் சுமார் இருபது வயசிருக்கலாம். வெள்ளை உடை, தலைமுடியை அழுந்த வாரியிருந்தாள்.

ஷைலஜா அவளருகில் போய் நின்று சிரித்தாள். சுலபமாய் சிநேகிதம் செய்துகொண்டு விடுவாள்.

நர்ஸ், தன் இடுப்பில் பால்பாயிண்ட் பேனாவைச் சொருகியிருந்தாள். ஷைலஜா அவளருகில் போய் நின்றதும் கன்னத்தில் செல்லமாய்த் தட்டினாள்.

''உன் பேரு என்ன...?"

''ஷைலஜா. ஆர். ஷைலஜா. ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட். ரெங்கா ஸ்கூல்…''

 ''ஓ ஸ்கூல் போறியா... என்ன ரேங்க்?"

"ஃபர்ஸ்ட்" என்ற ஷைலஜாவின் குரலில் கம்பீரம் தெரிந்தது.

"டாக்டருக்குப் படிக்கப் போறியா....?"

"ம்ஹும்...மாட்டேன்..."

"ஏன்?"      

இருவருக்கும் இடையே நடக்கிற உரையாடலில் ரேணுகாவுக்கும் சுவாரசியம் வந்துவிட்டது. ரகு வராமல் இருப்பதுகூட உறுத்தவில்லை.

திடீரென கிளினிக் பரபரப்பானது.

கார் ஒன்று உள்ளே நுழையும் சத்தம் கேட்டது.

'டாக்டர் வந்தாச்சு...'

எல்லோரிடமும் சட்டென்று இறுக்கம் வர... அவசரமாய்க் கதவைத் திறந்து, டாக்டர் உள்ளே நுழைய, கதவு மூடிக்கொண்டது. வேறு இருவர் கௌண்டரில் நின்றுகொள்ள... டாக்டர் இருக்கும் அறை வாசலில் நர்ஸ் நின்றுகொண்டாள்.

பஸ்ஸர் ஒலித்தது. கதவை மெல்லத் திறந்து, உறுதி செய்துகொண்டு முதல் டோக்கன் நபரை அனுப்பினாள்.

இதையும் படியுங்கள்:
துயரங்களை ஏற்க வேண்டாம். ஒப்புக் கொள்ளலாம்!
சிறுகதை ...

கு வந்துவிட்டான்.

"என்ன ஆச்சு...?""நம்பர் சிக்ஸ்... இப்பதான் ஃபர்ஸ்ட் போயிருக்கு..."

"ஹப்பாடி."

பக்கத்து இருக்கையில் அமர்ந்தான். நிறைய வியர்த்திருந்தான்.

"ஷைலு எங்கே..."

மறுபடி நர்ஸிடம் போய்விட்டாள் ஷைலஜா.

"அதோ..."

'ஒண்ணும் பிராப்ளம் இருக்காதே..."

ரகுவை எதுவும் பேசாமல் உற்றுப் பார்த்தாள். அவன் தலை தாழ்ந்து, பிறகு வேறு திசை பார்த்தது.

நர்ஸ் இப்போது இறுக்கம் விலகி இயல்பாகி விட்டாள்.

"ஏன் டாக்டருக்கு படிக்க மாட்டே?''

ஷைலஜாவிடம் மறுபடி பேச ஆரம்பித்து விட்டாள்.

"பிடிக்கலே..."

"அதான்... ஏன்...?"

"அம்மா வயித்துல... ஒரு குட்டிப் பாப்பா இருக்காம். அதை உங்க டாக்டர்கிட்டே காட்டி, அழிக்கப் போறாங்களாம். ரப்பர் வச்சு எரேஸ் பண்ணுவேனே... நோட்புக்ல... அதுமாதிரி கத்தி வச்சு... பண்ணுவாங்களாம்.. என் ஃப்ரெண்டு ஸ்ரீராம்தான் சொன்னான், ஸ்கூல்ல. அவங்கம்மாவுக்கும் அப்படித்தான் பண்ணங்களாம். பாவம் இல்லே, பாப்பா.. நான் டாக்டராக மாட்டேம்ப்பா!"

ஒரு நிமிஷம் ஹால் ஸ்தம்பித்தது. எல்லோரும் குழந்தையையும், ரகு - ரேணுகாவையும் மாறி மாறிப் பார்த்தனர்.

"ஏய் ஷைலு... இங்கே வா..."        

டந்த ஒரு வாரமாய் விவாதித்து அலுத்துப்போன ரேணுகாவுக்கு இப்போது அழுகை பீறிட்டது.

"வே...ணாங்க... டாக்டரைப் பார்க்க வேணாம்... போயிரலாம். பரவாயில்லே.. இதுவும் இருக்கட்டும்..."

ரகு மௌனமாய் எழுந்து ஷைலஜாவைப் பற்றிக்கொண்டான். மூவருமாய் டோக்கனைக் கொடுத்துவிட்டு வெளியே நடந்தனர்.

பின்குறிப்பு:-

கல்கி 01  மே 1994 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com