சிறுகதை – உயிர்மூச்சு!

ஓவியம்; கரோ
ஓவியம்; கரோ

-ரிஷபன்

தினசரி செய்தித்தாள்கள், வார, மாத இதழ்கள் படிக்கிற நூலகத்தில்தான் தியாகி சுந்தரமூர்த்தியும் நானும் அறிமுகமானோம்.

படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி அலுத்த வயதானவனாக நானும், வாழ்வை முடித்துவிட்டு மரணத்தை நேசிக்கிற இளைஞராக அவரும்.

'சாவைக் கண்டு எதற்கு பயப்பட வேண்டும். உண்மையில் எனது அடுத்த வேலை அதுதான். அதனால்தான் அதை விரும்புகிறேன்' என்பார் அடிக்கடி.

உண்மையில் அவர் மனசு சங்கடப்பட்டு இருந்தபோதுதான் எனக்கு அறிமுகமானார். கையில் வைத்திருந்த வார இதழைப் பார்த்து, விடாமல் பெருமூச்சு விட்டார்.

என்னால் அதற்கு மேல் பொறுக்க இயலாமல் போக, அருகில் காலியாகக் கிடந்த நாற்காலியில் அமர்ந்து கிசுகிசுத்தேன்.

"என்னங்க... உடம்பு முடியலையா?"

''ம்... மனசுக்கு முடியலே என்றார் அழுத்தமாக.

பிரித்திருந்த பக்கத்தைக் காட்டி வெறுப்பு தடவிய குரலில் சொன்னார்.

"மகாத்மாவைப் பற்றிய செய்திக்கு,  புகைப்படம் பிரசுரித்து இருக்கிறார்களே. யார் படம் தெரிகிறதா...”

பார்த்தேன்.

சட்டென்று 'காந்திஜி படம்தானே..' என்று சொல்ல முற்பட்டுத் திருத்திக் கொண்டேன். இல்லை. 'அட்டன்பரோ’வின் பென் கிங்க்ஸ்லி.

சங்கடமாய்ச் சிரித்துவைத்தேன்.

"இதுல என்ன.. அவரும் இப்போ... காந்திஜியைத்தானே நினைவூட்டறார்?"

"இல்லே தம்பி. எப்போதும் போலி நிஜம் ஆகாது. அதனதன் மதிப்பு அவ்வளவுதான். உங்கள் தாயாரின் இடத்தில் அதே சாயலில் வேறொரு பெண்மணியை ஏற்பீர்களா..." என்றார் ஆவேசமாய்.

எனக்கு வாதம் பிடிப்பதில்லை.  அதுவும் நூலகம் அனுமதிக்காத இடத்தில்.

''வெளியே வரீங்களா?" என்றார் அது புரிந்தவராய்.

ழுந்து வெளியே வந்தோம்.

இந்தப் பூங்காவும் ஒரு சுதந்திரப் போராட்ட வீரரின் நினைவில்தான் நிற்கிறது. பறவைகள் எச்சம் அதிகம் இல்லாத ஒரு சிமெண்ட்டு பெஞ்சைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தோம்.

அரளி மரத்தின் இரண்டு தடிப்பான இலைகளைச் சேர்த்து டப்.. டப்பென்று சப்தம் செய்தேன்.

"இளைஞர்களுக்குப் பொறுப்பு ஏற்பதில் ரொம்பத் தயக்கம்... இல்லையா?" என்றார்.

''பெரியவர்களுக்கு இளைஞர்களைக் குறைசொல்வதில் தயக்கமே இல்லை... சரிதானே?"

சிரித்துவிட்டார்.

"வேலை தேடறீங்களா... தம்பி?"

''தேடி அலுத்துப் போச்சு!''

''எங்க காலத்துல எந்த வேலையும் கௌரவக் குறைவு இல்லே. இப்ப உங்களுக்கு மாதா மாதம் அழுக்குப் படாமல் சம்பளம் வரணும். இல்லே?"

"எந்த வேலையும் செய்யத் தயார்தான். ஆனா நீங்க கனவு கண்ட மாதிரி தேசம் இல்லீங்க. கைராட்டை சுத்தி எதுக்கெடுத்தாலும் உண்ணாவிரதம், மௌன விரதம்னு இருந்தது எல்லாம் இப்ப பலிக்காது" என்றேன் வெறுப்பு மீறிய குரலில்.

''தன்னம்பிக்கை குறைஞ்சா எதுவுமே நடக்காதுதான்.''

 "இன்னும் என்ன தன்னம்பிக்கை?  படிக்கப் போனா அதுல ரிஸர்வேஷன்.. வேலைக்குப் போனா அதுல ரிஸர்வேஷன். ஏன்யா... தெரியாமதான் கேட்கறேன். இந்த நாட்டுல ஊழல் ஒண்ணைத் தவிர வேற எதுக்கும் ரிஸர்வேஷன்தானா?"

''நல்ல மனுஷங்க இல்லாம போயிடலே... தம்பி...''

"இருப்பாங்க. அடுத்த வேளை சோத்துக்கு நிச்சயம் இல்லாம - வறட்டு தத்துவம் பேசிக்கிட்டு..." என்றேன் அழுத்தமான குரலில்.

பெரியவருக்குத் திடீரென ஆவேசம் வந்துவிட்டது.

"என்னோட கொள்கையைக்கூட கொஞ்சம் ஒதுக்கி வச்சிட்டு உனக்காகக் கூட வரேன். என்னோட.. சுதந்திரப் போராட்டத்துல ஈடுபட்டவரோட பையன். இப்ப அரசாங்கத்துல நல்ல நிலைமைல இருக்கான். உனக்கு வேலை வாங்கித் தரேன் தம்பி..." என்றார்.

"என் ஒருத்தனுக்கு வேலை கிடைச்சிடறதுனால இந்த நாடு முன்னேறிடப் போவுதா?"

''நீ நேர்மையா நடந்து காட்டு. அதுவே பல பேருக்கு முன்னுதாரணமா இருக்குமே..."

இதையும் படியுங்கள்:
ருசிக்க ரசிக்க சூப்பர் சென்னா மசாலா கிரேவி!
ஓவியம்; கரோ

பெரியவர் என்னை மறுநாளே ஒருவரிடம் அழைத்துப்போனார். வீட்டு வாசலில் சிபாரிசுக்காக.. அவரிடம் நிகழ வேண்டிய காரியங்களுக்காக.. மனிதக் காக்கைகளின் கூட்டம்.

மீறி உள்ளே போனோம்.

தியாகிக்குப் பெருமிதம் கண்ணில் தெரிந்தது.

பார்த்தியா... என் பெயருக்கு எவ்வளவு மதிப்பு' என்று.

நான் எதுவும் சொல்லவில்லை. எனக்காக அலைகிற மனிதரை வீணாகப் புண்படுத்துவானேன்.

அரைமணி காத்திருத்தலுக்குப் பின் அறைக்குள் போனோம்.

இரண்டு டஜன் மனிதர்கள் சுற்றி நிற்க நாங்கள் தேடிப் போனவர், பெரிய மேஜைக்கு அந்தப் பக்கம் அமர்ந்து தடிமனான கண்ணாடி வழியாக விழித்தார்.

"தம்பி.. நல்லா இருக்கீங்களா?" என்றார் தியாகி.

"இருக்கேன் ... என்ன விஷயம் ஐயா? இவ்வளவு தூரம் என்னைப் பார்க்க வந்திருக்கீங்க..."

குரலில் பாசம்,  பந்தம் எதுவும் இல்லை. ஆனால் தியாகியிடம் எந்த பாதிப்புமில்லை.

"நமக்கு வேண்டிய பையன்.. பாவம் வேலை கிடைக்கலே..."

பார்வை இடம் மாறி இப்போது என் மீது பதிந்தது.

''என்ன படிச்சிருக்கே?"

சொன்னேன்.

"ஏன் இதுவரை வேலைக்கு முயற்சி செய்யவில்லை?"

செய்தேன். பலனில்லை. சொன்னேன்.

''சரி. நாளைக்குக் காலையில் என் செகரட்டரியைப் பார்."

தியாகி வெளியில் வந்ததும் என்னைப் பெருமையாகப் பார்த்தார்.

''இனிமே உனக்குக் கவலையில்லை...''

"இவர் சும்மா எனக்கு வேலை தர மாட்டாரே..." என்றேன் சந்தேகமான குரலில்.

"தம்பி.. நான் ஒரு விஷயம் ஒத்துக்கறேன். நாங்க அண்ணல் காலத்துல கனவு கண்ட தேசம் இது இல்லைதான். இப்ப விஷம் போல பரவிக் கிடக்கிற லஞ்சம், ஊழல், நாங்களே எதிர்பார்க்காதது. ஆனா அதுக்காகச் சுத்தமாக நல்ல மனிதர்கள் இன்னமும் அற்றுப் போயிடலை..." என்றார் உணர்ச்சிமயமாக

எனக்கு உள்ளூர ஏதோ உறுத்தியது.

ந்த ஒரு வாரமும் அந்தப் பெரிய மனிதரை என்னால் சந்திக்க முடியவில்லை.

தியாகிதான் சொன்னார்.

முயற்சியை விடாதே. அவனுக்கு வேலைகள் அதிகம்.
விடாமல் போய்ப் பார். நிச்சயம் உதவுவான்.

ஆனால் எதிர்பாராதது நிகழ்ந்துவிட்டது. இப்போது அந்தப் பெரிய மனிதருக்கே யாராவது உதவ வேண்டும்!

நாடு தழுவிய பெரிய ஊழல் பட்டியல் வெளியிடப்பட்டு பிரபல மனிதர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

என் 'பிரபல'மும் அதில் ஒருவர்.

நூலகப் பூங்காவில் தியாகியும் நானும் மெளனமாய் அமர்ந்திருந்தோம்.

பறவைகள் ஒலி மட்டும் விடாமல் கேட்டது.

மௌனம் அலுத்துப் போகப் பேசினேன்.

"கைதானவங்க பட்டியலைப் பார்த்தீங்களா" என்றேன் எகத்தாளமாக.

பெரியவரின் பார்வை பூமியை விட்டு நிமிரவில்லை.

"இல்லீங்க. எனக்கு என்னவோ நம்பிக்கை இல்லே. இந்த அளவு பணவெறி எந்தக் காலத்துலேயும் இருந்திருக்க முடியாதுங்கிற அளவு இப்ப பணம் பேசறது மட்டும்தான் புரியுது. பணம் அது கிடைச்சா... என்ன... என்ன வேணும்னாலும் செய்ய மனுஷங்க தயாராயிட்டாங்க..." என்றேன் வெறுப்பு ததும்பும் குரலில்.- குரல் அடைத்தது.

தியாகி பெருமூச்சுடன் தலைநிமிர்ந்தார்.

எழுந்து நின்றார்.

"மறுபடியும் சொல்றேன்... தம்பி. இப்பவும் எனக்கு நம்பிக்கை இருக்கு.அன்னைக்கு வெள்ளைக்காரன் போவான்னு யாருமே எதிர்பார்க்காம இருந்திருந்தா... இன்னைக்குச் சுதந்திர பூமியில நாம வாழ்ந்துக்கிட்டு இருக்கமாட்டோம். அதேபோல... இப்ப இருக்கற அவலங்கள் எல்லாம் மறைஞ்சு... ஊழலற்ற புதுயுகம் வரும்... வரப் போவுது தம்பி.. எனக்கு நல்ல நம்பிக்கை இருக்கு..."

ஏனோ கடைசியில் அவர் குரல் தேம்பியது.

வேகமாக வெளியேறிப் போய்விட்டார்.

றுபடி அவரை அந்தப் பூங்காவில் நான் சந்திக்கவில்லை.

அவரைப் பார்த்தால் சொல்ல வேண்டும். எனக்கு வேலை கிடைத்துவிட்டது என்று.

 பின்குறிப்பு:-

கல்கி 25  ஏப்ரல்  1993 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com