சிறுகதை - சின்னம்மா வீடு!

ஓவியம் : புஷ்பம்
ஓவியம் : புஷ்பம்

-ராஜகுமாரன்

நாகப்பட்டினம் பேருந்து நிலையம். திருவள்ளுவரிடம் விடைபெற்றேன் . திருமருகல் டவுன் பஸ் புறப்படத் தயாராய் இருந்தது. அவசரமாக ஸ்வீட்டும், சாத்துக்குடி பழமும், பூவும் வாங்கிக்கொண்டு பஸ்ஸில்
ஏறினேன். ஒரு ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்து கொண்டேன். பஸ் புறப்பட்டது.

தூரக்கிழக்கில் மெல்லிய வெளிச்சக் கோடுகள் தெரிந்தன! 'உய்'யென்ற சப்தத்துடன் வந்த காற்று உரிமையுடன் தலையைக் கலைத்தது. பெட்ரோல் நாற்றம் இல்லாத இந்த சுவாசம் எவ்வளவு சுகம்!

சென்னையை இங்கிருந்து நினைத்தால் எரிச்சல் வருகிறது. எங்கள் ராயப்பேட்டை ஒட்டுக் குடித்தனம் ஏறக்குறைய ஒரு வாடகை சிறை மாதிரிதான்! கார்பரேஷன் குடிதண்ணீருக்குக் க்யூ. டாய்லெட் போக க்யூ . குளியலறையில் க்யூ. வீட்டுக்குள்ளேயே இவ்வளவு 'க்யூ' என்றால் வெளியில் சொல்லவே வேண்டாம்!

நான் சிறுவனாயிருக்கும்போதே வயலூர் கிராமத்து வீட்டை விற்றுவிட்டு, குடும்பத்துடன் அப்பா சென்னைக்கு இடம் பெயர்ந்து விட்டார். வயலூரில் இடிந்த பெருமாள் கோயிலும்,  தாமரைக் குளமும் மட்டும் மங்கலாக ஞாபகம் இருக்கிறது!

ஆனால் பச்சை வயல்கள்... தோப்புகள்... குளங்கள்... பறவைகள் - இவற்றின் மேல் எனக்குப் பால்யகாலம் தொட்டே, ஒரு விசேஷ ஈடுபாடு! நகரத்தின் நெருக்கடியான இயந்திர வாழ்வு அந்த ஈடுபாட்டை ஏக்கமாய் மாற்றிவிட்டது!

ஏக்கம் தீவிரமாகும்போதெல்லாம் இப்படித்தான், சின்னம்மா ஊருக்குக் கிளம்பி விடுவேன். அதுவும் இந்த முறை பத்து நாள் தொடர்ந்து அரசு விடுமுறை. சின்னம்மாவின் சுவையான நளபாகமும் - அழுக்குப் பூசாத காற்றுச் சுவாசமும் பெரிய மாறுதல் தரும்! ஒவ்வொரு தடவை இங்கு வரும்போதும் காதுகளுக்கும், கண்களுக்கும் விடுதலை கிடைத்த மாதிரி இருக்கிறது! சக்கரங்கள் விலகி, மனசுக்கு இறக்கை முளைக்கிறது.

சின்னம்மா வீடு பழைய மோஸ்தரில், உயரமான கட்டுமானத்தில் ரொம்ப அழகாக இருக்கும். தெரு முனையிலிருந்து பார்க்கும்போதே ஒரு கம்பீரம் மிளிரும்! சிமிண்ட் பூச்சில்லாத விசாலமான செங்கல் திண்ணைகள். பூவேலைப்பாடு நிறைந்த தூண்கள் அணி வகுத்து நிற்கும் விசாலமான ஆளோடி. மண் பத்தாயம் உள்ள நடைப்பகுதி. கோயில் பிராகாரம் மாதிரியான அகண்ட தாழ்வாரம். அதிலிருந்து கொஞ்சம் உயரமாய் இரண்டு பக்கமும் சுவரில் அலமாரி பதிக்கப்பட்ட கூடம். ஆகாயம் முழுசும் தெரியும், காற்றோட்டமான பெரிய வாசல் முற்றம். 'கிரீச் கிரீச்' சென்று பாடிக்கொண்டு ஆடும் பலாமர ஊஞ்சல். சிறுவயதில், வேகமாய் ஆடி அதிலிருந்து பல தடவை கீழே விழுந்திருக்கிறேன்.

இதையும் படியுங்கள்:
கூகுளைப் பின்னுக்குத் தள்ளுமா Perplexity AI?
ஓவியம் : புஷ்பம்

வீட்டு வாசலில் செழித்து வளர்ந்திருக்கும் பூவரச மரமும் - வேப்ப மரமும் காவல் தெய்வங்கள் மாதிரி கம்பீரமாக நிற்கும். தெருவையே அடைத்துப் பரந்திருக்கும் அவற்றின் நிழலில், எட்டுக்கால் கொண்ட இருபதடி ராட்சச மர 'பெஞ்ச்' கிடக்கும். அதில் படுத்துக்கொண்டு பழைய பத்திரிகைகளைப் படித்துக்கொண்டே தூங்கிப் போவது எனக்கு ரொம்பப் பிடிக்கும்!

கொல்லைப் பக்கம் இதைவிட ஜோர்! படி இறங்கியவுடன் இடதுபக்கம் நாரத்த மரம். வலது பக்கம் மல்லிகை,ரோஜா, டிசம்பர் பூச்செடிக் கூட்டங்கள். திட்டுத் திட்டாய் நிழல் பரப்பும் தென்னந்தோப்பு. பக்கத்திலேயே ஜில்லென்ற நீர் நிறைந்த தாமரைக் குளம். குளத்தோரமாய் நடந்து போனால் ஈச்சந்தோப்பு. அதில் சாயந்திர நேரத்தில், நட்சத்திரங்களுக்கு இறக்கை முளைத்தது மாதிரி, மினுக்கட்டாம் பூச்சிகள் அழகாய்ப் பறக்கும்!

ஈச்சந்தோப்பை ஒட்டி ஓடும் சின்ன வாய்க்காலைத் தாண்டினால் சின்னம்மா வீட்டு நெல் வயல் வந்து விடும். அப்படியே கட்டுவிரியன் வரப்பில் ஏறி, கொஞ்ச தூரம் நடந்தால் நுணாமரத்தடி களம் வரும். அண்ணன்களோடு அங்கே, ஈக்குச்சியில் நுணாக்காய்களைக் கோத்து, வண்டி செய்து விளையாடியது, இன்னும் அப்படியே கண்ணுக்குள் நிற்கிறது!

பனங்குடி பற்றியும் - சின்னம்மா வீட்டின் அழகு பற்றியும், மெரீனாவில் ப்ரியாவிடம் மணிக்கணக்கில் பேசியிருக்கிறேன். நகரத்தில் பிறந்து வளர்ந்தவள் என்பதால், கிராமங்கள் மேல் அவளுக்கும் காதலுண்டு.

ப்ரியா அடிக்கடி ஆர்வமாகச் சொல்வாள்: "உங்க சின்னம்மா ஊருக்குப் போகணுங்க. அந்த நுணாமரத்தடி களத்து மேட்டுல உக்காந்து, சாயங்கால நேரத்துல நாம கவிதை எழுதணும்!''

"பொறுமையா இரு ப்ரி! அம்மாவைச் சமாதானப்படுத்தி முதல்ல நம்ப கல்யாணத்த முடிப்போம். இப்ப அங்க போனோன்னு வச்சிக்க, அவ்ளோதான்! சின்னம்மாகூட கொஞ்சம் 'ப்ராட் மைண்ட்'! காதலையெல்லாம் ஏத்துக்கும். ஆனா சித்தப்பா குதி குதின்னு குதிக்க ஆரம்பிச்சிடுவாரு. கவலைப்படாத! நம்ம ஹனிமூனை அங்க வச்சிப்போம்! அப்ப நுணாமரத்தடி களத்துமேட்டுல, கயித்துக் கட்டில் போட்டு, ராத்திரி பூரா கவிதை எழுதலாம்!" - என்பேன் ஜாலியாக.

"சீச்சீய்! உங்களுக்கு வேற நெனப்பே கிடையாதா?' என்று ப்ரியா வெட்கி முகம் சிவப்பாள்.

"பனங்கு கேட்டது யாரு?” கண்டக்டர் சத்தம் போட்டு என் நினைவு களைக் கலைத்தார். சூட்கேஸை எடுத்துக்கொண்டு அவசரமாய் இறங்கினேன். பொழுது பளிச்சென்று விடிந்துவிட்டது!

மேற்கே பிரிந்த மண்பாதையில் நடக்க ஆரம்பித்தேன். தூரத்தில் எங்கேயோ இருந்து வந்த மெல்லிய 'கூக்கூ'  என்ற குயிலோசை என்னை வரவேற்றது. அய்யனார் கோயில் திடலில் நாலைந்து சிறுமிகள்  'நொண்டிக்கோடு' விளையாடிக்கொண்டிருந்தனர்.

சின்னம்மா ரொம்ப நாளாய்க் கேட்டுக்கொண்டிருந்த 'சப்பாத்தி மேக்கர்' இந்த முறைதான் வாங்கி வர முடிந்தது. அதை எடுத்துக் கொடுத்தவுடன், சின்னம்மாவின் முகத்தில் ஏற்படப்போகும் மலர்ச்சி என் மனக்கண்ணில் தெரிந்தது!

சின்னம்மா வீட்டை அடைந்தேன். படியேறும்போது பெரியக்கா பெண் தீபி என்னைப் பார்த்துவிட்டாள். "அய்! ஊரு மாமா!" என்று ஓடிவந்து என் கால்களைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள். தீபியின் குரல் கேட்டு, சின்னம்மாவும், பெரியக்காவும் வாசலுக்கு வந்தனர்.

''வா தம்பி!" - முகத்தில் சந்தோஷமின்றிச் சின்னம்மா என்னை வரவேற்றாள். அதிர்ந்தேன்! எப்போதும் முகமெல்லாம் சிரிப்பாக என்னை வரவேற்கும் சின்னம்மா எங்கே? என் மேல் ஏதோ கோபம்? உடனே கேட்டுவிட வேண்டும்.!

ஆளோடி தாண்டி அவர்களுடன் உள்ளே போனேன். லேசாக ஊஞ்சல் ஆடும் சப்தம் கேட்டுத் திரும்பினேன். சித்தப்பா சுருண்டு படுத்திருப்பது தெரிந்தது.

"சித்தப்பாவுக்கு என்னாச்சு?"- ஒன்றும் புரியாமல் கேட்டேன்.

"உனக்கு லெட்டர் கிடைக்கலியா தம்பி?" - சின்னம்மா ஆர்வமின்றி என்னை வரவேற்றதுக்கு இப்போது காரணம் புரிந்தது!

இதையும் படியுங்கள்:
சிங்கப்பூர்க்கு டூர் போறீங்களா? அப்போ இந்த 10 இடத்த மிஸ் பண்ணிடாதீங்க!
ஓவியம் : புஷ்பம்

"என்ன சின்னம்மா! லெட்டர் கிடைச்சா வந்திருக்க மாட்டேனா? நான் எப்பவும்போல் சாதாரணமாத்தான் இப்ப வந்தேன்! சித்தப்பாவுக்கு என்ன உடம்புக்கு?"

சின்னம்மா கொஞ்ச நேரம் பதில் சொல்லவில்லை. கண்கள் உடைந்து கண்ணீர் வெளிவரத் தொடங்கியது. முந்தானையால் துடைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தாள்.

"சித்தப்பா படுக்கையில வுழுந்து ஒரு மாசம் ஆச்சுப்பா... நம்ப வீட்டுக்குக் கீழ மண்ணெண்ணை இருக்காம்! ராவுத்தர் தோப்புலேருந்து நம்ப நுணாமரத்தடி களத்து மோடு வரைக்கும் கவர்மெண்டு எடுத்துக்குமாம்! ஓ.என்.ஜீ.சிக்காரங்க வந்து சொல்லிட்டுப் போயிட்டாங்க. அதக் கேட்டதுலேருந்தே சித்தப்பாவுக்குச் சரியா இல்ல. இந்த வூட்டையும், எடத்தையும் நாம எப்படிப்பா வுட்டுட்டுப் போறது?  சின்னம்மா மறுபடியும் அழத் தொடங்கினாள்

எனக்கு அடிவயிற்றில் பகீர் என்றது!
"உங்க சின்னம்மா ஊருக்குப் போகணுங்க. அந்த நுணாமரத்தடி களத்து மேட்டுல உக்காந்து, சாயங்கால நேரத்துல நாம கவிதை எழுதணும்!" - ப்ரியா ஆர்வம் பொங்கச் சொன்ன வார்த்தைகள் என் காதில் ஒலித்தன. என்னுடைய ஏமாற்றத்தை யாரிடம் பகிர்ந்துகொள்வது? சின்னம்மாவுக்கு எப்படி ஆறுதல் சொல்வது?

பின்குறிப்பு:-

கல்கி 30  ஆகஸ்ட் 1992 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com